PSU வங்கி பங்குகள் உயர்வு - முதலீட்டாளர்களுக்கு கவனம் அவசியம் | IPS FInance - 34...
தஞ்சை: முதல்வர் திறந்த நெல் கொள்முதல் நிலையம்; அதிகாரிகள் அலட்சியத்தால் செயல்பாட்டுக்கு வராத அவலம்!
த் டெல்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 6.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் விளைச்சலும் அமோகம். இந்நிலையில் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லுடன் பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நெல் கொள்முதல் தாமதமானதால் தஞ்சாவூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பு நெல் கொள்முதல் முற்றிலும் தேக்கமடைந்தது. கொள்முதல் நிலையம் மற்றும் சாலையோரங்களில் அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகினர். இதையடுத்து பெய்த மழையில் நெல் மணிகள் நனைந்து முளைத்தது. இதே போல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரும் மழை நீரில் மூழ்கி முளைத்து சேதமடைந்தது. பல இடங்களில் நெற்பயிர் பாதித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்தது கொள்முதல் முடக்கத்திற்கு காரணம் என் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. சேமிப்பு கிடங்குகளில் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் வெளியூருக்கு அனுப்பபடாமல் இருந்தது. இதனால் நெல் மூட்டைகள் அடுக்குவதற்கு இடம் இல்லாமல் போனதால் கொள்முதல் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் குறித்து குறைகளை கேட்டறிந்தார். கொள்முதலில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, ரயில் மூலம் வெளியூருக்கு அனுப்பப்படும் நெல் மூட்டைகளை பார்வையிட வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எங்கும் பாதிப்பும் இல்லை என்றதும் சர்ச்சையானது.

இந்நிலையில், ஒரத்தநாடு அருகே உள்ள காசவளநாடு தெக்கூர் கிராமத்தில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் இது வரை பயன்பாட்டிற்கு வராமல் உபயோகமற்று கிடப்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து தெக்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம், ``தெக்கூர் கிராமத்தில் ரூ.62.50 லட்சம் மதிப்பில் நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு 23.09.2024 அன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இது போன்ற பெரிய நெல் கொள்முதல் நிலையங்கள் அருகாமையில் இல்லை என அப்போது விவசாயிகள் தமிழக அரசை பாராட்டினர்.
இந்நிலையில், கொள்முதல் தாமதமானதால் தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதிகளில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணானது. கொள்முதல் தேக்கத்திற்கும் நெல் மூட்டைகள் அடுக்குவதற்கு இடம் இல்லாததே காரணம். குறிப்பாக ஒரத்தநாடு பகுதிகளில் கொள்முதல் செய்த மூட்டைகளை அடுக்குவதற்கு இடம் இல்லாமல் போனதில் பல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் தாமதமானதாக அதிகாரிகளே தெரிவித்தனர். தெக்கூர் கொள்முதல் நிலையத்தில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் அடுக்கும் வசதி கொண்டது. ஆனால் அதிகாரிகள் நெல் மூட்டைகளை அடுக்க கூட இதை பயன்படுத்தாதது அவலம். கடந்த ஒரு வருடமாக எவ்வித பயன்பாடுமின்றி கிடக்கும் கொள்முதல் நிலையத்தை இந்த நேரத்திலாவது பயன்படுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் ஒரத்தநாடு பகுதிகளில் கொஞ்சமாவது பாதிப்பை தவிர்த்திருக்கலாம்.

ஆனால், அதிகாரிகள் அதை செய்யத் தவறிவிட்டனர். முதல்வரால் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தை கூட செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை. விவசாயிகள் கேட்டதற்கு போதிய சாலை வசதி இல்லை அதனால் செயல்பாட்டுக்கு வரவில்லை என சாக்கு, போக்கு சொல்கிறார்கள். ஒரு வருடத்தில் சாலை வசதி கூடவா ஏற்பாடு செய்ய முடியாது என்பது எங்கள் கேள்வியாக உள்ளது. அதிகாரிகள் அலட்சியம் தான் இதற்கு காரணம். இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து நெல் கொள்முதல் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" என்றனர்.



















