2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? - பாபா வங்காவின் கணிப்பு!
6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்! சுவையில் போட்டிபோடும் கோட்டிமுளை கத்திரிக்காய்!
6.5 லட்சம் மரங்களை வளர்த்திருக்கும் திரைப்பட நடிகர்!
இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ்சுட்டு வர்றாங்க. அந்த வகையில மகாராஷ்டிராவுல 6.5 லட்சம் மரங்களை நட்டு சத்தமில்லாம, சூழலுக்குப் பங்காற்றிட்டு இருக்காரு நடிகர் ஷாயாஜி ஷிண்டே. ‘பாரதி’ என்ற தமிழ் திரைப்படத்துல நடிச்சு, மகாகவி பாரதியாரை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்தான் ஷாயாஜி ஷிண்டே. பூவெல்லாம் உன் வாசம், தூள், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட சில தமிழ் படங்கள்லயும் நடிச்சிருக்காரு.

மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ‘சஹ்யாத்ரி தேவ்ராய்’ என்ற பெயர்ல தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க மரக்கன்றுகள் நட்டு வளர்த்திருக்காரு. அதுவும் வறட்சியான பகுதிகள்ல, நாட்டு மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நட்டிருக்கிறாரு. ‘தேவ்ராய்’ (புனித காடுகள்) என்ற பெயர்ல நாட்டு மரங்கள் அடர்ந்த 29 குறுங்காடுகள், 2 விருக்ஷா பூங்காக்கள், 2 பல்லுயிர் பூங்காக்கள், 1 பட்டாம்பூச்சி தோட்டத்தையும் உருவாக்கியிருக்கார்.

சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களை ஒன்றிணைச்சு, கடந்த 10 ஆண்டுகளா இந்த மரம் வளர்ப்பு பணிகளை முன்னெடுத்துட்டு இருக்கார். 'சூழல் பாதுகாவலர்' உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். மரம் வளர்ப்பு குறித்தும், சூழலுக்கு நாம் ஏன் பங்காற்றணும்னு மக்கள்கிட்ட பேசிக்கிட்டு வர்றார். நடிகர்கள், விவசாயம், சூழல் சார்ந்த பணிகள்ல ஈடுபடுறது மத்தவங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அதை, சரியா புரிஞ்சு வெச்சிருக்கார் ஷாயாஜி ஷிண்டே.
இலவம்பாடியோடு போட்டிபோடும் கோட்டிமுளை கத்திரிக்காய்!
கடைகள்ல எப்போதுமே ஊதா நிற கத்திரிக்காய்க்கு வரவேற்பு அதிகம். ஏற்கெனவே இலவம்பாடி, செவந்தம்பட்டி போன்ற ஊதா நிறக் கத்திரிக்காய்கள் மக்களிடையே பிரபலமா இருக்கு. அந்தவகையில கடலூர் மாவட்டம், கோட்டிமுளை கத்திரிக்காயும் தனிச்சிறப்பு வாய்ந்தது. கடந்த 5 தலைமுறையா இந்தப் பகுதியில சாகுபடி செய்யப்பட்டு வருது. இலவம்பாடி கத்திரிக்காய் குண்டா இருக்கும். கோட்டிமுளை கத்திரிக்காய் சற்றே நீளமா இருக்கும். இலவம்பாடி கத்திரிக்காயைவிட இதுல ஊதா நிறம் நிறைந்து காணப்படும்.

சுவையிலும் தனித்து நிற்குது. கோட்டிமுளையைச் சுற்றியுள்ள சுமார் 70 ஹெக்டேர் பரப்புல சாகுபடி செய்யப்படுது. அங்கே விளைவிக்கப்பட்டு சேத்தியாதோப்பு, வடலூர் ஆகிய ஊர்கள்ல அதிகம் விற்பனை செய்யப்படுது. இந்தக் கத்திரிக்காய், அந்தப் பகுதியைத் தாண்டி வெளியில அதிகம் தெரியாது. கோட்டிமுளை கத்திரிக்காய்க்குப் புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கு. புவிசார் குறியீடு கிடைச்சா, கோட்டிமுளை கத்திரிக்காய்க்கான விற்பனை வாய்ப்புப் பெருகும்னு எதிர்பார்க்கிறாங்க விவசாயிகள்.
களை எடுக்கும் செலவை மிச்சப்படுத்தும் கோனோ வீடர்!
என்னதான் 4, 5 சால் உழவு ஓட்டி நெல் நடவு செஞ்சாலும், களையை மட்டும் கட்டுப்படுத்துறது சவாலாத்தான் இருக்கு. அதுவும் ஆள் பற்றாக்குறையால களை எடுக்குறதுக்கு ரொம்பவே சிரமமா இருக்குனு விவசாயிகள் நொந்துக்குறாங்க. இதுக்குத்தான் ஒற்றை நாற்று நெல் நடவு முறையில நடவு செய்யுங்கனு விஞ்ஞானிகள் பரிந்துரைக்குறாங்க. ஒற்றை நாற்று நடவு முறையில பயிருக்குப் பயிர் 25 செ.மீ இடைவெளி விடுறதுனால, எளிதா கோனோ வீடர் ஓட்டி, களைகளை வேரோடு பெயர்த்து மண்ணுக்குள்ளார அழுத்திக் கட்டுப்படுத்திடலாம்.

அதேபோல வழக்கமான நெல் நடவு செஞ்சாலும், சீரான இடைவெளிவிட்டால், அதுலயும் கோனோ வீடர் கொண்டு களை எடுக்கலாம். நெற்பயிர்களோடு களைச்செடிகளும் வளரும்போது நெல்லுக்குக் கிடைக்குற சத்துகளை களைச்செடிகளும் எடுத்துக்குது. இதனால நெல்லுக்கு போதுமான சத்துகள் கிடைக்காம வளர்ச்சி குறையுது. நெல் நடவு செஞ்ச 10 - 15 நாள்கள்ல ஒரு களையும், 40 - 45 நாள்கள்ல ஒரு களையும் கண்டிப்பா எடுக்கணும். 10 ஆள்கள் சேர்ந்து 1 ஏக்கருக்கு களை எடுக்கணும்னா கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகும். ஒரு தடவை களை எடுக்க 3,000 ரூபாய் செலவாகும். 2 தடவைக்கு 6,000 ரூபாய் தேவைப்படும். இதையே சாதாரண கோனோ வீடர் கொண்டு களை அழுத்தினால் ஓர் ஆள் அதிகபட்சம் 2 நாள்கள்ல முடிச்சுடலாம். 1,400 ரூபாய் ஆகும். இதுலயே பெட்ரோல் அல்லது பேட்டரியில இயங்குற கோனோ வீடர் கருவியைப் பயன்படுத்தினா, அரை நாள்ல 1 ஏக்கர்ல களை எடுத்து முடிச்சுடலாம். இதுக்கு 1 லிட்டர் பெட்ரோல், 1 ஆள் கூலி கணக்கு பார்த்தா அதிகபட்சம் 1,000 ரூபாய்ல முடிச்சுடலாம். கைக்களை எடுக்கும்போது களைகளை பறிச்சு வெளியில போட்டுடுறாங்க. ஆனா, கோனோ வீடர் களைச்செடிகள் அழுத்தும்போது உரமா மாறிடுது. நெற்பயிர்களுக்கு இடையில சூரிய ஒளியும், காற்றோட்டமும் கிடைக்குது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் சிறப்பா செயல்பட வழியும் கிடைக்குது. மகசூலும் அதிகரிக்குது. அதனால சீரான இடைவெளியில நெல் நடவு செஞ்சு, அதுல கோனோ வீடர் மூலம் களை அழுத்தினா செலவும் மிச்சம். மகசூலும் அதிகரிக்கும். சாதாரண, பேட்டரி, இன்ஜின் உள்ளிட்ட விதவிதமான கோனோ வீடர் 1,000 ரூபாய்ல தொடங்கி 15,000 ரூபாய் வரையிலான விலையில கிடைக்குது.

கோயில்களில் பிரசாதமாக கேழ்வரகு லட்டு!
வழக்கமா, கோயில்களுக்குப் போனா புளியோதரை, பொங்கல், தயிர்சாதம்தான் பிரசாதமா கொடுப்பாங்க. ஆனா, சில கோயில்கள்ல மட்டுமே வித்தியாசமா ஏதாவது சத்துள்ள உணவுப் பொருளைக் கொடுப்பாங்க. அந்த வகையிலதான், அதிக சத்துகள் நிறைஞ்ச கேழ்வரகு லட்டை பிரசாதமா வழங்குறாங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றங்கரையில உள்ள பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகத்தினர். பிரபலமான இந்தக் கோயிலுக்கு சமீபத்துல போயிருந்தபோது கேழ்வரகு லட்டை பிரசாதமா கொடுத்தாங்க. கேழ்வரகு, நிலக்கடலை, எள், வெல்லம், காய்ச்சிய நெய் கலந்து, இந்த லட்டு தயாரிக்கப்படுறதா கோயில் நிர்வாகி சொன்னாரு.

கடந்த ஒரு வருஷமா கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கேழ்வரகு லட்டைத்தான் வழங்கிட்டு வர்றாங்க. சுற்றுப்புறத்துல இருக்குற விவசாயிகள்கிட்ட இருந்துதான் கேழ்வரகு, நிலக்கடலை, எள் கொள்முதல் செய்றாங்களாம். குறிப்பா, இந்தக் கோயில்களுக்கு பெண்கள் அதிகம் வர்றாங்க. கேழ்வரகுல கால்சியம், நார்ச்சத்து, வெல்லத்துல இரும்புச்சத்து, எள், நிலக்கடலையில போதுமான புரதச்சத்து, நெய்ல வைட்டமின்கள் ஏ, டி, ஈ, ஒமேகா-3 இருக்கு. பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளை வழங்கும் இந்த முயற்சியை, நிறைய பேர் பாராட்டுறாங்க. மத்த கோயில்கள்லயும் இதுபோல சிறுதானியங்கள அடிப்படையா கொண்ட பிரசாதம் வழங்கினா, சிறுதானிய சாகுபடி கணிசமா உயரும், மக்களுக்கும் சத்துள்ள உணவுப்பொருள் கிடைக்கும்னு சொல்றாங்க.
















