BB Tamil 9 Day 31: திவ்யாவின் பதவியைத் தூக்கிய பிக் பாஸ்; முன்னேறிச்செல்லும் விய...
மகாராஷ்டிரா: 'ஊதா, பச்சை அரிசி கிலோ ரூ.500' - ஜப்பான், இந்தோனேசியா நெல்ரகத்தை பயிரிடும் விவசாயி
மகாராஷ்டிரா விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் உலகில் பல்வேறு நாடுகளில் விளையும் அரிய வகை நெல் ரகங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிட்டு வருகிறார்.
மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் வசிக்கும் மினேஷ் காட்கில் என்ற விவசாயி இதற்கு முன்பு வெளிநாடுகளில் விளையக்கூடிய ஊதா மற்றும் பர்பிள் கலர் அரிசியைக் கொடுக்கக்கூடிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வந்தார்.
இது தவிர கருப்பு மற்றும் சிவப்பு அரிசியையும் பயிரிட்டுள்ளார். இந்த ஆண்டு புதிய முயற்சியாக வியட்நாமில் விளையக்கூடிய பச்சை கலர் அரிசியைக் கொடுக்கக்கூடிய நெல் ரகத்தைப் பயிரிட்டுள்ளார். சோதனை அடிப்படையில் முற்றிலும் இயற்கை முறையில் பயிரிடப்பட்டதில் நல்ல மகசூல் கிடைத்து இருக்கிறது.
இதன் மூலம் எதிர்காலத்தில் பெரிய அளவில் இந்த வகை ரக நெல்லைப் பயிரிட முடியும் என்று காட்கில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இந்த நெல் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த நெல் விளைவதற்கு 140 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

ஒரு ஏக்கரில் 1500 கிலோ நெல் கிடைக்கும் என்றும் காட்கில் தெரிவித்துள்ளார். ஜப்பான், இந்தோனேசியா, லெபனான், தாய்லாந்து, பூடான் போன்ற நாடுகளில் விளையக்கூடிய நெல் ரகங்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து விளைத்து பார்த்து வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற வழக்கமான அரிசி ரகங்களை ஒப்பிடுகையில், இந்த கலர் அரிசி ரகங்களில் அதிக சத்து இருப்பதாக காட்கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''கலர் ரக அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது தவிர நார்ச்சத்து, புரத சத்து, இரும்பு சத்து, வைட்டமீன் போன்றவை இந்த அரிசியில் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் நகரமயமாக்கல் காரணமாக நாளுக்கு நாள் விவசாய நிலத்தின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது. விவசாயத்திற்கு தொழிலாளர்களும் கிடைப்பதில்லை.
இதனால் விவசாயிகள் தங்களது நிலத்தை விற்பனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டுமானால் விவசாயத்தில் வருவாயை அதிகரிக்க வேண்டும். அதற்கு கலர் அரிசி ரகங்களை விளைவிப்பது தீர்வாக இருக்கும். வழக்கமான அரிசி ரகங்கள் 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனால் கலர் அரிசி ரகங்கள் ஒரு கிலோ 450 முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பை நான் ஆராய்ச்சி செய்ய விரும்பினேன், அதன் மூலம் அதை முறையாகச் சந்தைப்படுத்த முடியும். அதோடு அதில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

பர்ப்பிள் ரக அரிசி அதிக சத்து நிறைந்தது. இதில் அதிக அளவு துத்தநாகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் இருக்கின்றன. இதற்கான விதை நெல்லை அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வாங்கி வந்ததாக காட்கில் தெரிவித்துள்ளார்.
ரசாயனத்தில் எஞ்சினியரிங் முடித்துள்ள காட்கில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த வேலையை உதறிவிட்டு இப்போது விவசாயம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். விதை உமிகளில் இருந்து கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆல்கஹால்களைத் தயாரித்து அதற்கு மத்திய அரசிடம் காப்புரிமையும் பெற்று இருக்கிறார்.



















