திருப்பூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தந்தை, இளைஞர் கைது
`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?
ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஆர்.சி.பி அணியும் சென்றுவிட்டது.
தற்போது டியாஜியோ நிர்வாகம் மது தயாரித்து விற்கும் பிரதான தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ஆர்.சி.பி அணியை விற்றுவிடும் முடிவுக்கு வந்திருப்பதாக அந்நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிரிக்கெட் அணியை வைத்துக்கொண்டு மது தயாரித்து விற்பனை செய்வதில் முழு கவனம் செலுத்த முடியாத காரணத்தால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக டியாஜியோ நிறுவனம் மும்பை பங்குச்சந்தையிலும் தகவல் கொடுத்துள்ளது. எனவே வரும் மார்ச் மாதத்திற்குள் ஆர்.சி.பி அணியை விற்றுவிட டியாஜியோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
6 நிறுவனங்கள் போட்டி
அந்த அணியை விலைக்கு வாங்க 6 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. இதில் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரித்த ஆடர் பூனாவாலாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பூனாவாலா குடும்பம் 2010ம் ஆண்டு ஐ.பி.எல் அணியை நடத்திய அனுபவம் இருக்கிறது. எனவே அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஆர்.சி.பி அணியை வாங்க முயன்று வருவதாக கூறப்படுகிறது.
களத்தில் இறங்கிய அதானி
இது தவிர ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனமும் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் டெல்லி அணியில் ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு 50 சதவீத பங்கு இருக்கிறது. அந்த பங்கை விற்பனை செய்தால் மட்டுமே புதிய அணியை விலைக்கு வாங்க தகுதி பெற முடியும். அதானி நிறுவனமும் ஆர்.சி.பி அணியை வாங்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு முன்பு 2022ம் ஆண்டு அகமதாபாத் அணி ஏலத்திற்கு வந்தபோது அதனை அதானி நிறுவனம் வாங்க தவறவிட்டது. எனவே பெங்களுரு அணியை வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.
அதானி நிறுவனம் அனைத்து தொழில்களிலும் கால் பதித்து இருக்கிறது. ஆனால் அந்நிறுவனத்திடம் கிரிக்கெட் அணி மட்டும் இல்லை. அந்த குறையை பெங்களூரு அணி மூலம் நிவர்த்தி செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த இரண்டு நிதி நிறுவனமும் ஆர்.சி.பி.யை வாங்க முயன்று வருகிறது. தற்போது ஆர்.சி.பி அணியை 2 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 17 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

ஆனால் இந்த அளவுக்கு விற்பனையாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆர்.சி.பி அணியை விற்பனை செய்ய டியாஜியோ நிறுவனம் சிட்டி பேங்க் உட்பட இரண்டு தனியார் வங்கிகளை நியமித்து இருக்கிறது. அதோடு இன்னும் விஜய் மல்லையா ஆர்.சி.பி அணியில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே ஆர்.சி.பி. நிர்வாகிகள் அணியை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்று வந்துள்ளனர். டியாஜியோ நிறுவனம் லண்டனை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதோடு விஜய் மல்லையாவும் லண்டனில்தான் இருக்கிறார். ஆர்.சி.பி அணி தற்போது நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது. அப்படி இருக்கும்போது டியாஜியோ நிர்வாகம் எப்படி அணியை விற்பனை செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த ஜூன் 4ம் தேதி பெங்களுரு ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழக்க நேரிட்டது. அதனை தொடர்ந்தே அணியை விற்று விடலாம் என்ற முடிவுக்கு டியாஜியோ வந்ததாக அந்நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




















