``அதிமுக - தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'...
வரலாறு படைத்த இந்தியா; உலகக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்த அந்த 4 தருணங்கள்!
நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது இந்திய பெண்கள் அணி. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேட் கம்மின்ஸ் ஸ்டைலில், 'நாங்கள் வென்று இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' என தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபர்ட் கூறியிருந்தார்.

லாரா கடைசி வரை நின்று சதமடித்து போராடினார். ஆனாலும் இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்த முடியவில்லை. இந்திய வீராங்கனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியிருக்கின்றனர். போட்டியை இந்திய அணி பக்கமாக திருப்பிய அந்த முக்கிய மொமண்ட்கள் இங்கே.
கேப்டன் லாராதான் தென்னாப்பிரிக்க அணியின் மிகப்பெரிய பலம். அவரைச் சுற்றிதான் மற்ற வீரர்கள் அவரை ஒத்துழைத்து ஆடுவார்கள். இந்திய பௌலர்களால் லாராவை வீழ்த்த முடியவில்லையென்றாலும், இன்னொரு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

லாராவும் பிரிட்ஸூம் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இருவரும் நின்று நிதானமாக பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தனர். இதனால் முதல் சில ஓவர்களில் விக்கெட்டே எடுக்க முடியவில்லை. இந்த பார்ட்னர்ஷிப் வலுவாக மாறுவதைப் போல தோன்றியது. ஹர்மன் சில்லி மிட் ஆன் பீல்ட் எல்லாம் வைத்து பார்த்தும் கைகொடுக்கவில்லை. இந்தியா ஏங்கி தவித்த அந்த முதல் விக்கெட் ரன் அவுட் மூலம் வந்தது. மிட் விக்கெட்டிலிருந்து டைரக்ட் ஹிட்டாக த்ரோ அடித்து பிரிட்ஸை ரன் அவுட்டாக்கி அந்த பார்ட்னர்ஸிப்பை உடைத்தார். இதுதான் இந்தியாவின் டிபன்ஸில் முதல் ஹைலைட்.
அடுத்ததாக சர்ப்ரைச் கொடுத்தவர் ஷெபாலி வர்மா. பிரதிகாவுக்கு பதில் அணிக்குள் வந்து பேட்டிங்கில் 87 ரன்களை அடித்தவர் இன்று பௌலிங்கிலும் அசத்தினார். லீஸ் மற்றும் காப் என இரண்டு முக்கிய வீராங்கனைகளின் விக்கெட்டையும் அவரே வீழ்த்தினார். இருவரும் லாராவுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளவர்கள். அவர்களை பெரிய சேதாரமில்லாமல் பார்ட் டைமரான ஷெபாலி வீழ்த்தியது அசத்தல் சம்பவம்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் இன்னொரு முனையில் லாரா நங்கூரம் போல நின்றார். சதத்தை நோக்கி சென்றார். அவருடன் ஒருவர் நின்றால் கூட போட்டி மாறிவிடும் சூழல். டெர்க்சன் அந்த ஒருவராக மாறினார். அதிரடியாக ஆடி வேக வேகமாக ரன்களை குவித்தார். இந்த பார்ட்னர்ஷிப் பயமுறுத்தியது. டெர்க்சனுக்கு ஒரு கேட்ச்சையும் தீப்தி சர்மா கோட்டை விட்டார். ஆனால், கேட்ச் விட்டதற்கு பரிகாரமாக அவரே டெர்க்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். எந்த லெந்தில் வீசினாலும் அடித்து துவைத்த டெர்க்சனுக்கு ஒரு யார்க்கர் லெந்த் பந்தை வீசி போல்டாக்கினார்.
இப்போது சுமை மொத்தமும் லாராவின் மீது மட்டுமே. சதத்தைக் கடந்து கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். டெர்க்சன் அவுட் ஆன உடன் லாராவும் கொஞ்சம் நிதானம் இழந்தார். தீப்தி சர்மாவின் பந்திலேயே ஒரு பெரிய ஷாட்டுக்கு அரைகுறையாக முயன்றார். பவுண்டரி லைனிலிருந்து ஓடி வந்து அதை அமன்ஜோத் கவுர் அற்புதமாக கேட்ச் பிடித்தார். இந்திய ரசிகர்களின் ஆராவாரத்துக்கு எந்நேரமும் தடைபோடும் வாய்ப்புடைய லாரா 101 ரன்களில் காலி.

இதன்பிறகு தென்னாப்பிரிக்காவை காப்பாற்ற எந்த வீராங்கனையும் இல்லை. எஞ்சிய ஓவர்கள் சம்பிரதாயமாக முடிந்தது.
கடைசியாக 2011 இல் வான்கடேவில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருக்கும். இதோ இப்போது நவி மும்பையில் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் பெண்கள் அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. வான்கடேவை போலவே டி.ஒய்.பாட்டீல் மைதானமும் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. கபில்தேவின் படையை போல இந்த ஹர்மனின் படை பெண்கள் கிரிக்கெட்டின் புதிய எழுச்சியை தொடங்கி வைத்திருக்கிறது.












