சி.கே. குமாரவேல் குடும்பத்தின் ‘நெக்ஸ்ட்பேஸ்’- அதிநவீன தோல் பராமரிப்பு பிராண்ட் ...
``போலி வாக்குகளை நீக்கினால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது, திமுக அஞ்சுகிறது'' -அதிமுக சரவணன்
"போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வருகிறது" என்று அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை ஆய்வு செய்த அவர், பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் பேசிய போது,
"தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் இந்த எஸ்.ஐ.ஆர். பணி நேர்மையாக நடத்தப்பட வேண்டும். திமுக நிர்வாகிகளின் மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் நீங்கள் அடிபணியக்கூடாது.
இறந்த வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள், இடம் மாறிப் போன வாக்காளர்களை நீக்க வேண்டும்.
மேலும் உண்மையான வாக்காளர்கள் விட்டு போகக்கூடாது.
திமுகவினரிடம் படிவங்களை வழங்கக்கூடாது. நீங்களே வீடு வீடாக சென்று ஆய்வு செய்து படிவங்களை வழங்க வேண்டும்," என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்று வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஆனால், திமுக இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றபோது, சரியான சம்மட்டியடியை நீதிமன்றம் கொடுத்துவிட்டது.
தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக செய்யும் குளறுபடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் விழிப்புடன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக தற்போது குறுக்கு வழியை மேற்கொண்டு, எப்படியாவது தங்களின் போலியான வாக்காளர்களை காக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. “தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறோம்; அதனால் தங்களுக்கு சாதகமாக நீங்கள் செய்ய வேண்டும்” என்று அலுவலர்களுக்கு மிரட்டல் விடப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் 2 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம். அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 7 சதவீத வாக்குகளை இழந்தது.
தற்போது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர். பணியின் மூலம் போலி வாக்குகளை நீக்கினால், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வர முடியாது என்ற அச்சத்தில் உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தற்போது 27,40,631 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளில் 3,076 நிலை அலுவலர்களும், 290 மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்களும் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள்.
ஆனால் சில இடங்களில் திமுக பகுதி முகவர்களே விண்ணப்பப் படிவங்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆகவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்கவும் திமுக முயற்சி செய்து வருவதாக செய்திகள் வருகிறது," என்றார்.
















