"பெண்கள் கரு முட்டைகளை சேமிக்க வேண்டும்"- விவாதம் தூண்டிய ராம் சரண் மனைவியின் கர...
உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு
கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவியை மனரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.

மாணவி குறித்து பெற்றோரிடம் புகார் அளிப்போம் என்று ஆசிரியைகள் மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மாணவி கடந்த அக்டோபர் 10-ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
மாணவி 45 சதவிகிதம் தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 35 நாள்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மாணவியின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் அவர், “ஆங்கில ஆசிரியர் என்னை அனைவரின் முன்பும் உருவ கேலி செய்தார். நான் நன்கு படிக்கும் மாணவி, என்னை சரியாக படிக்காத மாணவர்களுடன் அமர்ந்து படிக்க வைத்து மன உளைச்சலாக்கினர்.
தமிழ் ஆசிரியர், என் கன்னத்தில் அறைந்தார். அதை எல்லோரும் பார்த்தனர். அறிவியல் ஆசிரியரும் சரியாக படிப்பதில்லை வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டினார். சின்ன காயம் ஏற்படும் நினைத்து இப்படி செய்தேன். இவ்வளவு பெரிய காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















