சேலம்: சந்தை ஏற்ற இறக்கங்களில் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு!
வந்துவிட்டது GTA 6 : ஏன் ஒரு கேம் நாடுகளை தாண்டிப் பேசப்படுகிறது? 5 காரணங்கள் இதோ!
‘இதுகூட நடந்துவிட்டது, இன்னும் GTA 6 வரவில்லை!’
இணையத்தில் எதிர்பாராத சம்பவம் எது நடந்தாலும், அதற்குக் கீழே இப்படியொரு மீம் வந்துவிடும். ஒரு கட்டத்தில், அந்த கேமை ஆடாதவர்களுக்குக்கூட அந்த நகைச்சுவை புரிந்தது. இப்போது அந்த மீமுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது GTA 6.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கே நியூசிலாந்தில் கேம் வெளியானது. யூடியூபில் பலர் உடனடியாக கேமை நேரலை செய்யத் தொடங்கினர். அந்த நேரலைகளை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர். இந்தியாவில் நவம்பர் 19 தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு கேம் வெளியாகிறது. ஒரு வீடியோ கேமின் வெளியீடு ஏன் இவ்வளவு கவனம் பெற்றிருக்கிறது? அதற்கு ஐந்து காரணங்கள் இருக்கின்றன.

GTA 4-க்கும் GTA 5-க்கும் இடையே ஐந்து ஆண்டுகள்தான் இடைவெளி. ஆனால், 2013-ல் GTA 5 வெளியான பிறகு அடுத்த பாகம் வர 13 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இதற்கிடையில் GTA Online தொடர்ந்து புதிய உள்ளடக்கத்துடன் ரசிகர்களைத் தக்கவைத்தது. அடுத்த பாகம் எப்போது வரும் என்ற கேள்வியும் உயிர்ப்புடன் இருந்தது. அந்தக் காத்திருப்புதான் காலப்போக்கில் ‘Before GTA 6’ மீமாகி, கேம் ரசிகர்களைத் தாண்டியும் பரவியது.
GTA 5 முதலில் பிளேஸ்டேஷன் 3, எக்ஸ்பாக்ஸ் 360 ஆகிய கன்சோல்களில் வெளியானது. அதே கேம் அடுத்த இரண்டு கன்சோல் தலைமுறைகளுக்கும் வந்துவிட்டது. இப்போது GTA 6, பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் X|S-ல் வெளியாகிறது. இந்த இடைவெளியில் கிராபிக்ஸ், செயலாக்கத் திறன், நினைவக வசதி எனப் பல அம்சங்கள் மேம்பட்டிருக்கின்றன. கடற்கரையில் திரண்டிருக்கும் கூட்டத்திலும், இரவில் நகரம் ஒளிரும் விதத்திலும் அந்த மாற்றத்தை டிரெய்லரிலேயே பார்க்க முடிகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனை மாநிலம்தான் லியோனிடா. வைஸ் சிட்டியைத் தாண்டி கடற்கரைகள், சதுப்புநிலங்கள், சிறிய ஊர்கள் என அதன் வரைபடம் விரிகிறது. ராக்ஸ்டார் தெரிவித்த தகவலின்படி, GTA 4, GTA 5, ரெட் டெட் ரிடெம்ப்ஷன் 2 ஆகிய மூன்று கேம்களிலும் சுற்றிப் பார்க்கக்கூடிய பகுதிகளைச் சேர்த்தால் கிடைக்கும் பரப்பளவை, GTA 6-ன் நிலப்பரப்பு கிட்டத்தட்ட நெருங்குகிறது.
புளோரிடாவின் மயாமி நகரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனை நகரம்தான் வைஸ் சிட்டி. பழைய GTA: வைஸ் சிட்டி என்றாலே நியான் விளக்குகளும், காரில் கேட்ட 1980-களின் பாடல்களும் பலருக்கு நினைவுக்கு வரும். இப்போது லூசியா, ஜேசன் ஆகியோரின் கதையுடன் அதே நகரத்துக்குத் திரும்புகிறோம். அன்று கார் ரேடியோ வழியாக அந்த நகரத்தின் கலாசாரத்தைக் காட்டிய ராக்ஸ்டார், இன்று ஸ்மார்ட்போன்களும் சமூக ஊடகங்களும் நிறைந்த வைஸ் சிட்டியைக் காட்டுகிறது.
GTA Online ரோல்பிளே சர்வர்களும் யூடியூப் நேரலைகளும் GTA-வுக்குப் புதிய பார்வையாளர்களைக் கொண்டுவந்திருக்கின்றன. பழைய வைஸ் சிட்டியை நினைவில் வைத்திருக்கும் ரசிகர்களும், ஸ்ட்ரீமர்கள் வழியாக GTA-வை அறிந்த புதிய தலைமுறையும் இப்போது ஒரே வெளியீட்டை எதிர்பார்த்திருக்கின்றனர். நியூசிலாந்தில் கேம் வெளியானதும் அந்த நேரலைகளுக்குக் கிடைத்த வரவேற்பே அதற்குச் சான்று.
GTA 5 வெளியான மூன்றே நாள்களில் ஒரு பில்லியன் டாலர் விற்பனையை எட்டிச் சாதனை படைத்தது. GTA 6 அந்த மைல்கல்லை வெளியீட்டுக்கு முன்பே முன்பதிவுகள் மூலம் எட்டியதாகக் கூறப்படுகிறது. பதின்மூன்று ஆண்டுகளாக ‘GTA 6 எப்போது வரும்?’ என்று கேட்ட இணையம், இப்போது அந்த கேமில் முதலில் என்ன செய்வது என்று பேசத் தொடங்கியிருக்கிறது.


















