Madurai மாவட்ட தொகுதிகள் DMK, ADMK, TVK, NTK-வில் யார் யார் போட்டி? | TN Electio...
விஜயகாந்தின் முதல் தேர்தல்: எம்.ஜி.ஆர் வாகனமும் அதிமுக-வை சிதறடித்த தொண்டர் படையும்! | முதல் களம் 4
(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல் களம்’ எனும் தொடர்.)
2005-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கிய விஜயகாந்த், 2006 தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் பெற்ற முதல் அதிரடி வெற்றியும், மற்ற தொகுதிகளில் அவரது கட்சிக்கு கிடைத்த வாக்குகளும் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்துக்கான தொடக்கமாகவே பார்க்கப்பட்டது.
அந்த வகையில், விஜயகாந்துக்கு கிடைத்த இந்த வெற்றி, தமிழக அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது, தன்னுடைய முதல் தேர்தலிலேயே பாமக வலுவாக இருந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் தீர்மானித்தது ஏன் என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள 2000-ஆம் ஆண்டுகளின் மத்திய காலகட்டத்துக்குச் செல்ல வேண்டும்.

1977 ல் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, தமிழ்நாட்டின் அரசியல் போக்கு, திமுக–அதிமுக என்கிற இரண்டு சக்திகளால்தான் கட்டுப்படுத்தப்பட்டு வந்தன. அந்த அளவுக்கு இந்த இரு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றி, வாக்காளர் தளத்தைக் கைப்பற்றி இருந்தன.
நீண்டகால வலையமைப்பும், உள்ளாட்சி அமைப்புகளின் மீதான கட்டுப்பாடும், பல ஆண்டுக்காலம் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய அனுபவங்களும் கொண்டிருந்த இரு திராவிட கட்சிகள் மீதும் மக்களிடையே அதிருப்திகள் இல்லாமல் இல்லை. மாற்று அரசியலை முன்வைத்து தொடங்கப்பட்ட பாமக, மதிமுக போன்ற சிறிய கட்சிகளும், பட்டியிலின அமைப்புகளும் குறிப்பிட்ட மாவட்டங்கள் அல்லது தொகுதிகளில் செல்வாக்கு செலுத்தினாலும், அவை பெரும்பாலும் கூட்டணி பங்காளிகளாகவே இயங்கின.
தனித்து நின்று வாக்குகளை ஈர்க்கக்கூடிய புதிய, சுயேட்சையான கட்சி ஒன்று என்பது இல்லாத சூழ்நிலையே காணப்பட்டது. தேசியக் கட்சியான காங்கிரஸின் நிலைமையோ, இரு திராவிடக் கட்சிகளின் தோளில் மாறி மாறி பயணித்து, அரசியலில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்குத்தான் இருந்தது.
இந்தச் சூழலில்தான், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாது, மக்களில் பலரிடமும் காணப்பட்டது. ஏனெனில், 1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்ததிலிருந்தே, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற பேச்சுகள் எழத்தொடங்கி விட்டன. ஊடகங்களிலும் அது குறித்த கவர்ஸ்டோரிகள் கூடுதல் பரபரப்பைக் கிளப்பி இருந்தன.
போதாதற்கு ரஜினியும்,1995 ல் வெளியான தனது 'முத்து' படத்தில் தொடங்கி, அதன் பின்னர் வந்த பல்வேறு படங்களில், தான் அரசியலுக்கு வர இருப்பதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமான காட்சி அமைப்புகளையும் வசனங்களையும் இடம்பெறச் செய்தார். ஆனால், அந்த எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக தொடரவும்தான், அது அவரது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் சலிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இந்த இடைவெளியில்தான், ரஜினியைப் போன்றே தமிழ்த் திரையுலகில் தனித்த செல்வாக்குடன் வலம் வந்த விஜயகாந்த், தயக்கங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, 2005 ல் அதிரடியாக தனது தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய முதல் நாளிலேயே திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதாக அறிவித்தார். அந்த வகையில், விஜயகாந்தின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
விஜயகாந்த் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தது என்பது ஒரே நாளில் ஏற்பட்ட திடீர் மாற்றமோ மேலோட்டமானதோ அல்ல. 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த அவரது திரை வாழ்க்கையில், ஊழலற்ற, நேர்மையான, நீதிக்காக போராடக் கூடியவராக மக்கள் மனதில் பதியக்கூடிய அளவுக்கான பிம்பத்தை அவர் தொடர்ச்சியாக வளர்த்தெடுத்தார். இந்தப் பண்புகளை ரசிகர்கள் அவரது நிஜ வாழ்க்கைக்கும் தாராளமாகப் பொருத்தினர்.
கூடவே இயற்கைப் பேரிடர்களின் போது உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது என வாரி வழங்கினார் விஜயகாந்த். மேலும், தனது ரசிகர் மன்றங்களையும் இதேபோன்ற உதவிகளை வழங்கும் சமூக சேவை அமைப்புகளாகவே நீண்டகாலம் செயல்பட வைத்தார். இந்த மனிதாபிமானப் பிம்பம்தான், அவரது ஆதரவாளர்கள் மத்தியில், அவரது அரசியல் தலைமையை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளச் செய்தது.

2005-ல் அவர் முறைப்படி தேமுதிக-வைத் தொடங்கியபோது, சினிமாவுக்கு அப்பாற்பட்ட நம்பகமான பொது அடையாளத்தை ஏற்கனவே உருவாக்கியிருந்தார். அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு ஊழல் இல்லாத, தூய்மையான, வளர்ச்சி சார்ந்த மாற்றத்தை வழி நடத்திச் செல்ல விஜயகாந்த் தயாராக இருப்பதாக சொல்லும் விதமாக அவரது செய்தி நேரடியாக இருந்தது.
மேலும், திராவிட அரசியல் பாரம்பரியத்திலிருந்து குறிப்பிடத்தக்க மாறுபாடாகவும் அமைந்தது. தேமுதிகவை குடும்ப அரசியல் மற்றும் அதிகார குழுமங்களிலிருந்து விலகிய, சாமானிய மக்களுக்கான கட்சியாக நிலைநிறுத்தினார். 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் அவரது பொதுக்கூட்டங்கள், ஆச்சரியம் தரும் வகையில் மக்கள் கூட்டத்தை ஈர்த்தன.
அவரது கூட்டங்களுக்கு, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு இணையான பார்வையாளர்கள் வந்ததாக அப்போதைய ஊடக செய்திகள் வியப்புடன் விவரித்திருந்தன. இந்தக் கூட்டம் வாக்குகளாக மாறுமா என அரசியல் ஆய்வாளர்கள் விவாதித்தபோதும், விஜயகாந்த் தமிழ்நாட்டு வாக்காளர்களில்—குறிப்பாக இளைஞர்களிடமும், முதல் தலைமுறை வாக்களர்களிடமும், ஆதிக்க அரசியல் கலாச்சாரத்தில் ஏமாற்றமடைந்தவர்களிடமும், குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
2006 சட்டமன்ற தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவது என்கிற அவரது முடிவு மிகவும் திட்டமிட்ட ஒன்றாக இருந்தது. கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தொகுதி, விவசாய சமூகங்கள், வணிகர்கள், கணிசமான தொழிலாளர் வர்க்க மக்கள் என்கிற கலவையான மக்கள் தொகை அமைப்பைக் கொண்டிருந்தது.
அதே சமயம், பாமக-வுக்கு ஓரளவு செல்வாக்குள்ள தொகுதியாகவும் இது இருந்ததால்,விஜயகாந்த் இந்தத் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார் என வியப்பு மேலிடாமல் இல்லை. விவசாயம், உள்ளூர் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் அப்போது வெகுவாக தலைதூக்கி இருந்தன. தாம் வெற்றிபெற்றால், அவற்றைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுப்பதாக பிரசாரத்தின்போது விஜயகாந்த் உறுதியளித்தார். மிகவும் நகர்ப்புறமோ மிகவும் கிராமப்புறமோ அல்லாத இந்தத் தொகுதி, பரந்துபட்ட வாக்காளர்களிடம் பெற விரும்பும், ஒரு புதிய அரசியல் தலைவருக்கு ஏற்ற சோதனை களமாக அமைந்தது.

இந்த நிலையில்தான், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2006-ஆம் ஆண்டு, மே 8 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில், விருத்தாச்சலம் தொகுதியின் வாக்குப்பதிவும் அதே நாளில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட இத்தொகுதியில் 7 முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனால், விஜயகாந்தின் வெற்றி வாய்ப்பு கணிக்க முடியாததாக ஆனது. அவரது முக்கிய எதிரியாக கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடியவராக பாமக-வைச் சேர்ந்த ஆர். கோவிந்தசாமி இருந்தார்.
வலுவான சாதி அடிப்படை ஆதரவும், கூட்டணி கட்சி ஆதரவும் இருந்தது. இந்தத் தேர்தலில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. அதிமுக சார்பில் ஆர். காசிநாதன் களமிறங்கினார். அவருக்கும் உள்ளூரில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது. இவர்களைத் தவிர, பாஜக, சுயேட்சைகள், சிறிய கட்சிகள் எனப் பல வேட்பாளர்கள் இருந்தனர்.
அரசியல் கோட்பாட்டளவில் பார்த்தால், இத்தகைய பலமுனை போட்டி, விஜயகாந்தைப் போன்ற ஒரு புதியவருக்கு, வாக்குகளை ஒருங்கிணைப்பதை கடினமாக்கியிருக்க வேண்டும். ஆனால், இதே சூழல்தான் விஜயகாந்துக்கு, பாரம்பரிய அரசியல் விசுவாசிகளுக்கு அப்பாற்பட்ட பரந்த ஆதரவு தளத்தை உருவாக்க உதவியது.
விஜயகாந்தின் விருத்தாசலம் பிரசாரம் அசாதாரண ஆற்றலும் உணர்வுபூர்வமான ஈர்ப்பும் கொண்டதாக இருந்தது. தொகுதி முழுவதும் அவர் தீவிரமாக சுற்றி வந்தார். பெரிய பொதுக்கூட்டங்களிலும், சிறிய கிராமக் கூட்டங்களிலும் பேசினார். அவரது பேச்சுகள் நேரடியான வாக்குறுதிகளையும், ஊழலுக்கு எதிரான விமர்சனங்களையும், அவரது திரைப்பாத்திரங்களில் பழக்கப்பட்ட நீதி-நேர்மைத் தொனியையும் ஒருசேரக் கொண்டிருந்தன.
பல வாக்காளர்களுக்கு, அவர் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவராக தெரிந்தார். அடுக்குமொழி பேச்செல்லாம் இல்லாமல் நேரடியாக, இயல்பான மொழியில் பேசினார். இது, அவரை எளிதில் அணுகக்கூடியவராக மக்களிடம் காட்டியது. பெண் வாக்காளர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவருக்கான ஆதரவு என்பது, வெறும் திரை பிம்பத்தின் மீதான ரசிக மனநிலையைத் தாண்டி, உண்மையான அரசியல் ஆதரவாக அமைந்தது என்றே கூறலாம்.
அதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது தேர்தல் முடிவுகள். மாநில அளவில் திமுக கூட்டணி 163 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தபோதிலும், விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் 61,337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்த பாமக வேட்பாளர் ஆர். கோவிந்தசாமி 47,560 வாக்குகள் பெற்றார். மூன்றாம் இடத்தில் அதிமுகவின் ஆர். காசிநாதன் 35,876 வாக்குகள் பெற்றார். மீதமுள்ள வாக்குகளை பல சிறிய வேட்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர். விஜயகாந்தின் வெற்றி வித்தியாசம், 13,777 வாக்குகள். ஒரு வருடமே ஆன புதிய கட்சியின் முதல் முறை வேட்பாளருக்கு கிடைத்த இந்த வெற்றி, ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.

மாநிலமெங்கும் கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டபோதும், ஒரே ஒரு இடத்தை மட்டுமே, விஜயகாந்ததின் வெற்றி மூலம் அக்கட்சி கைப்பற்றியது. ஆனால் அவரது தொண்டர் படை அதிமுகவின் வாக்குகளைப் பெரிதும் சிதறடித்தது. குறிப்பாக அதிமுகவின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டக் கோட்டைகளில் சுமார் 8 சதவீத வாக்குகளைப் பெற்று அதிர்ச்சி கொடுத்தது.
சில தொகுதிகளில் தேமுதிக 20,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது. "திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு விஜயகாந்தின் தேமுதிகதான் காரணம்" என மறைந்த அரசியல் விமர்சகர் சோ ராமசாமி அப்போது குறிப்பிட்டிருந்தார்.
எம்.ஜி.ஆரின் வாகனத்தை, தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய விஜயகாந்த், எம்.ஜி.ஆர். ஈர்ப்பைத் தூண்டி கிராமப்புற ஏழைகளை ஈர்த்தார். திமுக பொதுச்செயலாளர் கே. அன்பழகன் சென்னை துறைமுகம் தொகுதியில் வெறும் 400 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். அப்போதைய தொழில்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் வெறும் 780 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இதற்கு தேமுதிக பெற்ற வாக்குகளே முக்கிய காரணமாக அமைந்தன.
விஜயகாந்துக்கு விருத்தாச்சலம் தொகுதியில் கிடைத்த வெற்றியும், அவரது கட்சிக்கு இதர தொகுதிகளில் கிடைத்த வாக்குகளும், தேமுதிகவுக்கு 2009 நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத வாக்குகளையும், 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 29 இடங்களையும் பெற்றுக்கொடுத்து, முதன்மை எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தந்தது. சட்டசபையில் அவர் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கும், முதலமைச்சரின் இருக்கைக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 10 அடிதான்.
இதைக் குறிப்பிட்டுதான் நடிகர் ராதாரவி, " அவர் அவ்வளவு தூரம் வந்துட்டாரு... முதலமைச்சர் இருக்கைக்கு வர இன்னும் 10 அடி தூரம்தான் மீதமிருந்தது. ஒருவேளை, அவர் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருந்தால், முதலமைச்சராகவும் ஆகி இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டதாக திரைத்துறையினர் சொல்வார்கள்.

அந்த வகையில், ஒரு புதிய கட்சி தனித்து நின்று வெல்ல முடியும், வாக்காளர்கள் பழைய கட்சி அமைப்புகளுக்கு அப்பால் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் நிரூபித்தது, 2006 தேர்தலில் விஜயகாந்துக்கு கிடைத்த விருத்தாச்சலம் தேர்தல் வெற்றிதான்!


















