2026 T20 WC-ல் ரோஹித்துக்கு சிறப்பு அங்கீகாரம்; ஒரே குழுவில் IND, PAK; வெளியானது...
`விஜய்யின் தவெக-வில் இணையப் போகிறீர்களா?' - செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய நிருபர்கள்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக-வில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.
ஏற்கெனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிசாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையனும் எதிராக நிற்கும் நிலையில் அதிமுக-வை துண்டு துண்டாக்கியுள்ளது.

இந்த அதிகாரப்போட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர்.
இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுக-வினர் ஒன்று சேரவில்லை என்றால், புதிய கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று (நவ.25) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "50 ஆண்டுக்காலம் அதிமுக-விற்காக உழைத்திருக்கிறேன். பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறேன். கட்சிக்காக என்னை அர்பணித்திருக்கிறேன். இன்று அதற்குப் பரிசாக அதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். அதிமுக-வில் அடிப்படை உறுப்பினராகக்கூட இன்று நான் இல்லை. மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன்" என்றார்.

'விஜய்யின் தவெக கட்சியில் இணையப் போகிறீர்களா?' என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல், மெளனமாகச் சென்றிருக்கிறார் செங்கோட்டையன்.
'இந்த மெளனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாமா?' என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றிருக்கிறார் செங்கோட்டையன்.
திடீரென செங்கோட்டையன் விஜய்யின் தவெக கட்சியில் இணைவதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இதை அறிந்த செங்கோட்டையன் மறுப்புத் தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கின்றன.



















