INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா - இந்தியாவின் அத...
கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?
கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம்,


பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

















