திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album
தண்ணீருக்கு பதில் ஆசிட் ஊற்றி சமையல்; சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம் - போலீஸார் விசாரணை
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கட்டால் என்ற கிராமத்தில் வசிக்கும் சந்து சன்யாசி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் அக்குடும்பத்தினரின் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். யாராவது சாப்பாட்டில் விஷம் கலந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்ய முயன்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்
ஆனால், குடும்பத்தினரை விசாரித்தபோது சாப்பாட்டில் தவறுதலாக ஆசிட் கலந்திருப்பது தெரியவந்தது. அக்குடும்பத்தில் உள்ளவர்கள் காப்பர் மற்றும் சில்வர் தொடர்பான தொழிலில் வேலை செய்வதால் வீட்டில் எப்போதும் ஆசிட் வைத்திருப்பது வழக்கமென தெரிந்தது. தண்ணீரை பாத்திரத்தில் சேமிப்பது போலவே ஆசிட்டையும் பாத்திரத்தில் சேமித்து வைத்திருப்பதாக கூறப்பட்டது.

ஆரம்ப கட்ட விசாரணையில், சந்து சன்யாசி வீட்டிற்கு ஒரு உறவினர் வந்திருந்தார் அந்த உறவினர் வீட்டில் சமையல் செய்தபோது தவறுதலாக தண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்துப் பாத்திரத்தில் ஊற்றி, அதில் அரிசி வேகவைத்து குழம்பையும் தயாரித்துள்ளார்.
அதனை சாப்பிட்ட 6 பேரும் உடனே பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் மூச்சுவிடுவதில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களது உடல் நிலை மோசமடைந்ததால் பின்னர் கொல்கத்தா மருத்துவமனையில் மாற்றி சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் குழந்தைகள் ஆவர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.


















