Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய' குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னணி
உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான 'யாவ்டோங்' (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும், சீனாவில் இன்றும் சுமார் 4 கோடி மக்கள் இந்தப் பாரம்பரிய மண் குகை வீடுகளில் வசித்து வருகின்றனர்
'யாவ்டோங்' என்பதற்கு "சூளை குகைகள்" என்று பொருளாம். இவை பார்ப்பதற்கு செங்கல் சூளைகளின் வளைவான உட்புறத்தைப்போலவே இருக்குமாம். ஷாங்சி, ஷான்சி, கான்சு மற்றும் ஹெனான் ஆகிய மாகாணங்களில் இதுபோன்ற குகை வீடுகள் அதிகம் காணப்படுகின்றன.

இப்பகுதிகளில் காணப்படும் மண் வகையே, மலையைக் குடைந்து வீடு கட்டுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. கி.மு 2100–1600 காலத்திலேயே இந்த வீடுகள் தோன்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குகை வீடுகளின் மிகச்சிறந்த அம்சமே இவற்றின் இயற்கை வெப்பநிலை கட்டுப்பாட்டு முறை என்கின்றனர். வெளியில் வெயில் சுட்டெரித்தாலும், குகைக்குள் குளிர்ச்சியாக இருக்குமாம். அதேபோன்று கடும் குளிர் காலத்தில், இந்த மண் சுவர்கள் வெப்பத்தைத் தக்கவைத்து இதமான சூழலைத் தருமாம்.
மேலும் குளிர் காலத்தை சமாளிக்க இந்த வீடுகளில் 'காங்' (Kang) எனப்படும் ஒரு சிறப்பான அம்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட படுக்கை அமைப்பை வீட்டின் அடுப்பங்கரையுடன் இணைகின்றனர்.
சமைக்கும்போது ஏற்படும் வெப்பம் மற்றும் புகை, இந்தப் படுக்கைக்கு அடியில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று, படுக்கையை சூடுபடுத்துகிறது. இதுவே அவர்களை குளிர்காலத்தில் இதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நவீன நகர வாழ்க்கையைவிட, இயற்கையோடு இணைந்த இந்தக் குகை வாழ்க்கை முறை ஆரோக்கியமானது என்கின்றனர் இதில் வசிப்பவர்கள்.
எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்த வீடுகளில் சில ஆபத்துகளும் உள்ளன. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்படும்போது, மென்மையான மண் சரிந்து விழும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















