தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” - வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையி...
TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம்.

விஜய்யின் அரசியலை கரூர் சம்பவத்துக்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம். கரூர் சம்பவத்துக்கு முன் தவெகவில் இணைய தயாராக இருந்த சில முக்கியப் புள்ளிகளை கூட காத்திருக்க வைத்து கடுப்பேற்றி அனுப்பியிருந்தார்கள். ஆனால், கரூர் சம்பவத்துக்கு பிறகு சில யதார்த்தங்கள் பனையூரின் முக்கிய நிர்வாகிகளுக்கு புரிந்திருக்கிறது.
அனுபவம் இல்லாத நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வைத்துக் கொண்டு திமுகவை எதிர்த்து நிற்பது இமாலயச் சவால் என்பதை உணர்ந்தனர். இதன்பிறகுதான் மாற்றுக்கட்சியினரை உள்ளே இழுப்பதன் முக்கியத்துவத்தை விஜய்க்கும் தெரியப்படுத்தி, அதற்கான வலையை விரிப்பதிலும் இறங்கியிருக்கிறது இரண்டு - மூன்று தரப்புகள்.

இந்த சமயத்தில்தான் செங்கோட்டையனும் ஓ.பி.எஸ், டிடிவியுடன் கரம் கோர்த்ததால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 'டெல்லிதான் அதிமுகவின் அணிகளை இணைக்கும் அசைன்மெண்டை எனக்குக் கொடுத்தது.' என ஓப்பனாக போட்டு உடைத்துப் பேசிய பிறகும் பாஜக தரப்பிலிருந்து செங்கோட்டையனுக்கு எந்தத் தரப்பும் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுக தொடங்கியதிலிருந்தே கட்சியில் இருப்பவர், எம்.ஜி.ஆரால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்டவர், கட்சியின் சூப்பர் சீனியர் அத்தனை பகுமானங்கள் இருந்தும் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் இருந்து செங்கோட்டையனின் நீக்கத்துக்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை.
எந்தப் பக்கம் நிற்கப் போகிறோம் என செங்கோட்டையன் தரப்பு குழப்பத்தில் இருந்த சமயத்தில்தான் அவரை ஆதவ் தரப்பு தொடர்புகொண்டு பேசியிருக்கிறது. 'உங்களைப் போன்ற சீனியர்கள் கட்சிக்குள் இருந்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உரிய மரியாதையும் கட்சிக்குள் கிடைக்கும்..' எனப் பேசி செங்கோட்டையனின் மனதை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆதவும் செங்கோட்டையனுடன் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். செங்கோட்டையனுடனான மீட்டிங்கின் அப்டேட்களும் விஜய்க்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டது என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருந்த சமயத்தில்தான் தவெகவின் S.I.R கண்டன கூட்டத்தில் சம்பந்தமே இல்லாமல், 'எம்.ஜி.ஆர் கிட்டயும் கட்டமைப்பு இல்லன்னு சொன்னாங்க. அவர்க்கிட்டயும் இளைஞர்கள்தான் இருந்தாங்க. செங்கோட்டையன் எம்.எல்.ஏ ஆன அப்போ அவருக்கு வயசு 26 தான்!' என அவரை புகழ்ந்து பொடி வைத்துப் பேசினார் ஆதவ்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவிலிருந்து விட்டு, ஒரு புதிய கட்சியை நோக்கி பார்வையை திருப்புவதில் செங்கோட்டையனுக்கும் பெரிய மனத்தடை இருந்ததாகவும் சொல்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். ஆனால், ஓ.பி.எஸ் யை போலவோ டிடிவியை போலவோ தனி அணியோ கட்சியோ கட்டும் சூழல் செங்கோட்டையனுக்கு இல்லை என்பதை அவர் உணர்ந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஓ.பி.எஸ்க்கும் டிடிவிக்கு அவர்கள் சார்ந்த சமூகம் புறக்கணிக்கப்படுகிறது என்கிற எமோஷன் அவர்களுக்கு கைக்கொடுக்கிறது. ஆனால், செங்கோட்டையனால் அப்படி சமூக அரசியலை கையிலெடுத்தும் பரிதாபத்தை சம்பாதிக்க முடியாது. இந்த இக்கட்டான சூழலையும் செங்கோட்டையன் தரப்பு உணர்ந்திருக்கிறது என்கின்றனர், இணைப்பு பேச்சுவார்த்தையை பற்றி பேசும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர்.
'மாற்றுக் கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேசுவது வழக்கமான விஷயம்தானே. அதேமாதிரிதான் செங்கோட்டையன் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். இந்த வார இறுதிக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்.' என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான முக்கிய நிர்வாகிகள்.
செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதியை பனையூர் பக்கமாக திருப்பி, விஜய்யிடம் இன்னும் நெருக்கமாக நினைக்கிறதாம் ஆதவ் தரப்பு. கட்சிக்குள் ஆதவ் வந்த போதும் பதவியோடுதான் வந்தார். அருண் ராஜ் வந்தபோதும் பதவியோடுதான் வந்தார். செங்கோட்டையன் க்ரீன் சிக்னல் காட்டும்பட்சத்தில், கொங்கு மண்டலத்துக்கென ஒரு பவர்புல் பதவி உருவாக்கி அவருக்கு கொடுக்கவும் தயாராக இருக்கிறது விஜய் தரப்பு என்ற தகவலும் கட்சிக்குள் ஓடுகிறது.
முடிவு செங்கோட்டையனின் கையில்!
















