``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். குன்னூர் அருகில் உள்ள கோடமலை படுகர் சமுதாய மக்களின் கிராமத்திற்கு சென்ற அவர் அவர்களுடன் சேர்ந்து படுகர் நடமாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், " வரவிருக்கும் ஜனவரி 9 - ம் தேதி கடலூரில் தே.மு.தி.க - வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O என்ற பெயரில் நடத்தப்படும் அந்த மாநாட்டில் எங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படும்.

234 தொகுதிகளிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது. 2026 தேர்தல் மட்டுமின்றி அதற்கு அடுத்து நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும். வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் இந்த இயக்கம் கிடையாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணியை வலுவாக அமைப்போம் " என்றார்.
















