திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிர...
`ஆக்கிரமிப்பு' - வங்கி படிக்கட்டுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்; ஏணியில் ஏறி சென்ற வாடிக்கையாளர்கள்
ஒடிசா மாநிலம் பத்ராக் நகரில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் இடித்தனர். அவர்கள் அங்குள்ள சரம்பா மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரையுள்ள பகுதியில் இருந்த சட்டவிரோத கடைகள், தற்காலிக கட்டுமானங்கள், குடியிருப்புக்களை இடித்தனர்.
அப்படி இடித்த போது, ஒரு கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த படிக்கட்டுகள் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அந்த கட்டிடத்தில் முதல் மாடியில் வங்கி செயல்பட்டு வந்தது. வங்கி இருந்தபோதிலும், நகராட்சி ஊழியர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளை இடித்து தள்ளினர்.
இதனால் வங்கிக்கு செல்ல சரியான வசதி இல்லை. படிக்கட்டுகளை இடிப்பதற்கு முன்பு, உள்ளாட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கும் வங்கி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் கொடுத்திருந்தது. ஆனாலும், அவர்கள் படிக்கட்டை சரி செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்தே படிக்கட்டுகளை இடித்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். உள்ளாட்சி ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலம் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும்படி அறிவித்தனர்.
அதனை அகற்ற இரண்டு நாள் அவகாசமும் கொடுக்கப்பட்டது. வங்கிக்கு செல்லும் படிக்கட்டு இடிக்கப்பட்டதால், முதல் மாடியில் இருக்கும் வங்கிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிராக்டர் ஒன்றை கொண்டு வந்து வங்கி அருகில் நிறுத்தினர். அதன் மீது ஒரு மர ஏணியை வைத்து அதில் ஏறி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வங்கிக்கு சென்றனர். வங்கியின் முகப்பில் இருபுறமும் SBI லோகோ உள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒருவர், வாடிக்கையாளர்கள் படிக்கட்டில் ஏறும்போது கீழே விழுந்தால், அவர்களுக்கு இலவச காப்பீடு வசதி செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிமெண்ட் படிக்கட்டு இடிக்கப்பட்டதால், கட்டிடத்தின் உரிமையாளர் உடனே விரைந்து செயல்பட்டு ஸ்டீல் படிக்கட்டு ஒன்றை கொண்டு வந்து பொருத்தி நிலைமையை சரி செய்து இருக்கிறார்.



















