செய்திகள் :

BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?

post image

பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு, வீடியோ கால் மூலம் வந்த நண்பர்களின் அறிவுரை ஒரு புதிய வெளிச்சமாக அமைந்திருக்கும். 

இந்த வெளிச்சம் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா, அல்லது அதே மாதிரியாகத்தான் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 50

காலையிலேயே கிச்சன் ஏரியாவில் ஒரு இனிப்பான சண்டை துவங்கியது. வியானா கேசரி செய்தது, அணுகுண்டு தயாரித்த பிரச்னை மாதிரி ஆகி ஐநா சபை வரை சென்று விடும் போலிருக்கிறது. இதையே ஒரு காரணமாக பிரஜின் கூறி வருகிறார். 

கேசரி பிரச்னையை வைத்தே வியானாவை வம்பிழுக்க முயன்றார் திவ்யா. “சர்க்கரை சுத்தமா இல்ல. இப்ப எதை வெச்சு டீ போடறது. கேசரில்லாம் பண்ணி சர்க்கரையை காலி பண்ணிட்டாங்க” என்று திவ்யா சொல்ல “வாரத்தோட கடைசி நாள் பொருட்களை செலவு செய்யலாம்.  நான் கேசரி செஞ்சும் ஒரு பாக்கெட் மிச்சம் இருந்தது” என்று எரிச்சலுடன் வியானா விளக்கம் அளிக்க “நான் ஒண்ணும் கம்ப்ளெயிண்ட் பண்ணலை. சாதாரணமாத்தான் கேட்டேன்” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் திவ்யா. 

BB Tamil 9 Day 50
BB Tamil 9 Day 50

“நான் வேணா தல கிட்ட பேசிக்கிறேன்” என்று வியானா அலட்சியமாக அகன்றதின் காரணம் ‘இப்போ தலயே என் பாக்கெட்லதான்’ என்கிற ரொமான்ஸ் தைரியமோ என்னமோ?!

“அடுத்த முறை நல்ல குக்கிங் டீமா போடுங்க. சாப்பாடு பத்த மாட்டேங்குது. பொருள் இருந்தாலும் செய்ய மாட்றாங்க.. மூணு தோசதான் கொடுக்கறாங்க.” என்று வியானா சொல்ல “அடுத்த முறை யாரு தலயா வந்தாலும் வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க. ஒரு கரண்டி மாவுல நாலு தோசை செய்வாங்க” என்கிற மாதிரி கடுகடுத்தார் திவ்யா.

அன்பு கேங்கும் வம்பு கேங்கும் மோதிக் கொண்ட நாமினேஷன்

நாமினேஷன் நேரம். தல போட்டி முடிந்த பின்னர்தான் இந்தச் சடங்கை பிக் பாஸ் செய்வார். தல போட்டியில் ஜெயித்தவர்களை நாமினேட் செய்ய முடியாது என்றும் இருக்கும். ஆனால் இந்த முறை இதை வித்தியாசமாக செய்ய முயற்சித்த பிக் பாஸ், முதலில் நாமினேஷனை ஆரம்பித்தார். 

‘தலைவலி’ திவ்யா, ‘மயக்கம் சாண்ட்ரா’ ‘பால்காரர் பிரஜின்’ ஆகிய மூவருக்கும் வாக்குகள் விழுந்தன. போலவே பாடாவதி பாருவிற்கும் சில வாக்குகள். சுருக்கமாகச் சொன்னால் அன்பு கேங்கும் வம்பு கேங்கும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குத்திக் கொண்டது. 

BB Tamil 9 Day 50
BB Tamil 9 Day 50

“என்னை எப்படி வேணா வெறுப்பேத்தட்டும். ஆனா பிக் பாஸையே மதிக்க மாட்றாங்களே?” என்கிற காரணத்தை சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்காக சொன்னார் விக்ரம். சாண்ட்ராவும் பிரஜினும் ஒன்றாக ஆடுவதும் காரணமாக சொல்லப்பட்டன.

ஆக, இ்ந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் = சாண்ட்ரா, பிரஜின், திவ்யா, கம்ருதீன், கனி, எஃப்ஜே, வி்க்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா, மற்றும் பாரு. கடைசி பெயரை சொல்லும் போது ‘ஆவலாக காத்துக் கொண்டிருந்த’ என்பதையும் ஜாலியாக கோர்த்து விட்டார் பிக் பாஸ். ‘அடப்பாவிங்களா.. இந்த வாரமாவது விட்டு வைக்கக்கூடாதா?” என்று ஜாலியாக புலம்பினார் பாரு. 

இரண்டாம் முறையாக வீட்டு ‘தல’யான எஃப்ஜே


நாமினேட் சடங்கு முடிந்தும் கூட தனது சதியாலோசனையை பாரு நிறுத்தவில்லை. “ஒருத்தரை ஜெயிக்க வெச்சு... தலயா அனுப்பினா.. அத வெச்சே அவங்களை வெளியே அனுப்ப முடியும். அந்த மாதிரி யாரைச் சொல்வே?” என்று எஃப்ஜேவிடம் பாரு கேட்டார். அவருடைய மைண்ட்டில் சுபிக்ஷா இருந்தார். “நீ என்னை கூட குத்திக்கோ. ஒண்ணும் பிரச்னையில்ல. நான் வெளியே போய் சுதந்திரப் பறவையா இருப்பேன்” என்று விட்டேற்றியாக சொன்னார் எஃப்ஜே. 

‘ஏதாவது என்டர்டெயின் பண்ணித் தொலைங்களேன்’ என்று பிக் பாஸ் அடிக்கடி சொல்கிறார் என்பதற்காக சபரியும் அரோராவும் இணைந்து ‘செய்திகள் வாசிப்பது’ என்கிற பெயரில் எதையோ முயன்று கொண்டிருந்தார்கள். சபரி சொல்லும் வாக்கியத்தை மாற்றி ‘இட்ல.. புட்ல.. மட்ல’ என்று மாட்லாடிக் கொண்டிருந்தார் அரோரா.

BB Tamil 9 Day 50
BB Tamil 9 Day 50

‘தல’ போட்டி ஆரம்பித்தது. ‘சாய்ஞ்சா போச்சு’ என்பது தலைப்பு. மற்றவர்களை இடித்துச் சென்று தள்ளுமுள்ளுவில் ஆடும் போட்டியாக அல்லாமல், நிதானத்துடன் ஆட வேண்டிய டாஸ்க். பொறுமையாக செய்யவேண்டிய விஷயங்களைப் பொதுவாக பெண்கள் முனைப்புடன் செய்வார்கள் என்பதால் சுபிக்ஷா இதில் வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருந்தது. ஒருவேளை அதுதான் பிக் பாஸின் பிளானோ என்னவோ. 

ஐந்து உருளைகளை பலகையில் நிற்க வைத்து கீழே விழாமல் ஒவ்வொன்றாக சோ்க்க வேண்டும். முதலில் சென்ற அணியில் விக்ரம் பயங்கரமாக சொதப்ப, கூர்மையான கவனத்துடனும் நிதானத்துடனும் செய்து கொண்டிருந்தார் சுபிக்ஷா. “விழுந்துடு.. விழுந்துடு’ என்று விக்ரம் நகைச்சுவையாக சொன்னாலும் அந்த நேரத்தில் சுபிக்ஷாவின் கவனத்தைக் கலைப்பது போல் சொன்னது முறையல்ல. 

21: 14 நேரத்தில் இந்த டாஸ்க்கை செய்து முடித்தார் சுபிக்ஷா. ஒருவேளை அவர்தான் வெற்றி பெறுவாரோ என்று தோன்றியது. ஆனால் அடுத்து வந்த கம்ருதீன் ஆச்சரியரமாக 17:59-ல் முடித்தது. ‘அவன் வொர்க்அவுட் பண்றது இதுக்குத்தான் யூஸ் ஆகுது” என்றார் கனி. கம்மு லீடர் ஆகப் போவதை நினைத்து பாருவிற்கு ஒரே குஷி. தானே வெற்றி பெற்றது போல மகிழ்ந்தார். பிரஜின் தோற்றுப் போனதில் பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் ‘தல’யாகி இருந்தால் வீடு ரணகளமாக மாறி விடும். 

அடுத்து வந்த எஃப்ஜே, பாருவின் மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டார். மற்றவர்களை விடவும் சுருக்கமான நேரத்தில் முடித்து (15:05) விட அவரே வீட்டு தல. தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் நபரும் இவர்தான். அன்பு டீம் ஹாப்பி. 


வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்


சபையைக் கூட்டிய பிக் பாஸ் “சேது சார்.. சொல்லிட்டுப் போனார்ல.. ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு.. அது என்ன தெரியுமா. நானும் சொல்லிப் பார்த்துட்டேன். சேதுவும் சொல்லிட்டார். ஆனா பலருடைய ஆட்டங்கள் மாறலை. எந்தத் திசைல போறதுன்னு தெரியல. இப்போ உங்களுடைய நண்பர்கள் வந்து அட்வைஸ் பண்ணாலாவது ஆட்டத்துல மாற்றம் தெரியுதான்னு பார்க்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் அப்போதே பரவசப்பட்டார்கள். 

BB Tamil 9 Day 50
BB Tamil 9 Day 50

அந்த வகையில் திவ்யா, சாண்ட்ரா, அரோரா ஆகியோர்களுக்கு வந்த நண்பர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் தங்களின் ஆலோசனைகளைச் சொன்னார்கள். பாருவின் நண்பராக வந்த ஷாலினி “நீ தனியா ஆடு” என்றார். அமித்தின் மனைவியான ஸ்ரீரஞ்சனி “இருக்கிற இடமே தெரியல. இறங்கி ஆடுங்க” என்றார்.

அரோராவின் நண்பரான ரியா “துஷார் போனதுக்கு உக்காந்து அழற. மத்த விஷயங்களுக்கும் அழற. பாரு உன்னைக் கழுவி கழுவி ஊத்தறா. கம்முனு வேடிக்கை பார்க்கறே. வெளியே ஊரை எதிர்த்த போதும் ஸ்ட்ராங்கா இருந்த பொண்ணு நீ. உள்ளே இப்படியா இருக்கறது.. அடிச்சு ஆடு” என்றார். 

‘சாண்ட்ரா.. வில்லியாக மாறிடாத’ - நண்பரின் அறிவுரை

திவ்யாவின் நண்பராக வந்த ரிதிகா “rude -ஆ இருக்கறத குறைச்சுக்கோ. க்ரூப்பிஸத்தை எதிர்த்து போன நீயே அதுக்குள்ள மாட்டியிருக்க” என்று சரியாக அட்வைஸ் சொன்னார். கனியின் சகோதரியான விஜி “நீ எங்களுக்கு மட்டும் அக்காவா இருந்தா போதும். அங்க கனியா இரு. சமைக்க மட்டும் போகலை. தனியா இறங்கி விளையாடு” என்று எச்சரிக்க உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் கனி. 

BB Tamil 9 Day 50
BB Tamil 9 Day 50

பிரஜினின் நண்பராக வந்த ஆரி “மனைவிகூட போனது வித்தியாசமா இருந்தாலும் அவங்கதான் உன் எமோஷனல் வீக்னெஸ். சாண்ட்ராவா இருந்தாலும் அவங்களை எதிர்த்து கேம் ஆடு” என்று அட்வைஸ் தந்தார். சாண்ட்ராவின் நண்பராக வந்த ஜெய்ஸ்ரீ சொன்ன அறிவுரை கிரிஸ்ப் ஆக இருந்தது. “நாமினேஷன் பாஸை உன் கணவருக்கு ஏன் கொடுத்தே? இதுதான் தனியா ஆடற லட்சணமா.. க்ருப்பிஸம் இருக்குன்னு சொல்லிட்டு நீயும் அதுக்குள்ளதான் இருக்க. தனித்தனியா ஆடு. வில்லத்தனத்தை குறைச்சுக்கோ” என்றெல்லாம் நேர்மையாக சொன்னார். 

தங்களுடைய நட்புகளும் உறவுகளை நெற்றியடியாக சொன்ன அறிவுரைகள் போட்டியாளர்களுக்கு உத்வேகத்தையும் ஆட்டத்தை மாற்றியாக வேண்டிய வழிகாட்டுதலையும் தந்திருக்கலாம். 

ஆனால் எல்லோருமே சொன்னதின் அடிநாதம் என்னவென்றால், “தனியா ஆடு. உறவுகள் சேர்க்க வரலை. மத்தவங்களோடு மோது. உன் வெற்றிதான் முக்கியம்” என்று முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த கருத்துக்களையே சொன்னார்கள். ஒருவகையில் அது உண்மைதான். பிக் பாஸ் என்பது சர்வைவல் ஆட்டம். 

சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?


ஆனால் ஒருவர் கூட “நீ உன் ஆட்டத்தில் கவனமாக இருக்கும் அதே சமயத்தில் மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகு. அந்த எல்லையை நிர்ணயித்துக் கொள். போட்டி என்பதைத் தாண்டி மனித உறவுகளும் முக்கியம்” என்பது போல் சொல்லவில்லை. 

“மத்தவனுக்கு ஹெல்ப் பண்ற வேலை உனக்கெதுக்கு.. உன் வெற்றிதான் முக்கியம். மத்தவனை இடிச்சாவது மேல போ” என்பதைத்தான் பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறது. 

BB Tamil 9 Day 50
BB Tamil 9 Day 50

ரியா சொன்ன அட்வைஸை அப்படியே வெளிப்படையாக கம்ருதீனுக்கு சொன்ன அரோரா அதற்கும் சிரிப்பாக சிரித்தார். “நீ வேணா பாரு கிட்ட போ” என்று கை கழுவ முயன்றார். “நாம இனிமே தனியா ஆடலாம்…” என்று கம்ருதீன் பாருவிடம் சொல்ல “ஏண்டா.. புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்று மறுபடியும் பாயைப் பிறாண்டிார். 

வியானாவின் நண்பராக வந்தவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று பார்த்தால். அட.. நம்ம ராணவ்! முந்தைய சீசனில் வந்தவர். அடடே! பிக் பாஸ் தொடர்பாக அட்வைஸ் எல்லாம் தரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. “ஆரம்பம்லாம் நல்லா இருந்தது. அப்புறம் ஆளைக் காணோம்” என்று தலைகீழான விமர்சனத்தைச் சாென்ன ராணவ்வின் கருத்தில் ஒன்றுதான் சரியாக இருந்தது. ‘வியானா. க்யூட்னஸ்ன்ற போ்ல ஒண்ணு பண்ற பார்த்தியா.. அதை குறைச்சுக்கோ’

வீடியோ நண்பர்களின் அறிவுரைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா? காத்திருந்து கவனிப்போம். 

BB Tamil 9: ``உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாது, ஆனா'' - பார்வதியிடம் ஓப்பனாக பேசும் கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெம... மேலும் பார்க்க

BB Tamil 9: `பிரின்சிபல் பிரஜின்; தமிழ் ஆசிரியை கனி’ - தொடங்கிய ஸ்கூல் டாஸ்க்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெம... மேலும் பார்க்க

கமல்ஹாசனை விமர்சித்த டிவி நடிகருக்கு பா.ஜ.க வில் பதவி - பின்னணி என்ன?

விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். சில படங்களிலும் நடித்திருந்தாலும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வருபவர்.சமீபமாக அரசியல் கருத்துகளை... மேலும் பார்க்க

Serial Update: விசாரித்த போலீஸ்,'நான் அவனில்லை'என்ற நடிகர்; சீரியல் தயாரிப்பில் பிஸி ஆகிவிட்ட நீலிமா

மீண்டும் தயாரிப்பில் பிஸிகுழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. வளர்ந்த பின் சீரியல் சினிமா என ஒரு ரவுண்டு வந்தார். ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

BB Tamil 9: "யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க, ஆனா!" - வாக்குவாதத்தில் வியானா, திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறி... மேலும் பார்க்க