``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசார...
லாட்டரி வெற்றியை மனைவியிடம் மறைத்து, ஆடம்பர வாழ்க்கை - மனஉளைச்சலில் முடிந்த ஜப்பானிய முதியவரின் கதை
கனவில் கூடக் காண முடியாத ஒரு அதிர்ஷ்டம், கோடிக்கணக்கான பணம் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவார். ஆனால், ஜப்பானில் 66 வயதான ஒருவருக்குக் கிடைத்த லாட்டரி வெற்றி, நிம்மதியைக் கொடுக்காமல், தனிமையையும், மன உளைச்சலையும் மட்டுமே பரிசளித்தது. மனைவியிடம் மறைக்கப்பட்ட அந்தக் கோடீஸ்வர ரகசியம் ஒரு சாபமாக மாறிய கதை இதுதான்.
ஜப்பானைச் சேர்ந்த 66 வயதான அந்த முதியவர் எஸ், லாட்டரியில் 600 மில்லியன் யென் (சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 34 கோடி) என்ற மிகப்பெரிய தொகையை வென்றார்.
'எஸ்'ஸும் அவரது மனைவியும் டோக்கியோவில் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் இருவரும் மாதம் தோராயமாக $2,000 கூட்டு ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தனர். அவரது மனைவி தீவிரச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்.

மனைவியின் குணம்... மறைந்த `எஸ்’
மனைவியின் இந்த எல்லைமீறிய சிக்கன குணம் காரணமாக, தான் இவ்வளவு பெரிய தொகையை வென்ற உண்மையை அவரிடம் வெளிப்படுத்த 'எஸ்' அஞ்சினார். உண்மையைச் சொன்னால், அவள் நிச்சயமாக அந்தப் பணத்தைக் கடுமையாக கட்டுப்படுத்துவாள் என்று அவர் நம்பினார்.
எனவே, தன் மனைவியிடம் தான் வெறும் 5 மில்லியன் யென் (சுமார் $32,000) மட்டுமே வென்றதாகவும், அந்தப் பணத்தை வீட்டைப் பழுதுபார்க்கப் பயன்படுத்தப் போவதாகவும் பொய்யுரைத்து, உண்மையான அதிர்ஷ்ட தனக்குள்ளேயே பூட்டிவைத்தார்.
அந்தப் பொய்யை மறைத்துக்கொண்டு, 'எஸ்' ரகசியமாகத் தன் ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். அவர் அந்தப் பணத்தைக் கொண்டு விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான பல கார்களை வாங்கினார். ஜப்பான் முழுவதும் உள்ள உயர்தர ரிசார்ட்டுகளில் (Hot Spring Resorts) ரகசியமாகத் தங்கினார், மற்றும் தனியாகப் பயணம் செய்தார். முதல் ஆறு மாத காலத்திற்குள் அவர் சுமார் $116,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 95 லட்சம்) தொகையைச் செலவழித்திருந்தார்.
தன் ரகசிய வாழ்க்கையை மறைக்க, அவர் வெளியே செல்லும்போதும், வீட்டில் இருக்கும்போதும் பழைய ஆடைகளையே அணிந்தார். புதிய கார்களை ஓட்டும்போது, சந்தேகத்தைத் தவிர்க்க வேண்டி, அவர் முதலில் பூமிக்கு அடியில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்று அங்கிருந்து அவற்றை ஓட்டிச் சென்றார்.
இருப்பினும், இந்த இரகசிய ஆடம்பர வாழ்க்கை 'எஸ்'ஸுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக, தான் தன் குடும்பத்திற்குச் செய்த துரோகம் என்ற குற்ற உணர்ச்சியும், தான் சம்பாதித்த பணத்தைக்கூடத் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பகிர முடியவில்லையே என்ற கடும் தனிமையும் அவரை ஆட்கொண்டது. இந்த ரகசியமும், மன உளைச்சலும் சேர்ந்து அவரைப் பெரும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளின.

என் வாழ்க்கையை ஆட்டம் காண வைக்கிறது!
"இந்த பணம் என் சொந்த முயற்சியால் சம்பாதித்திருந்தால், நான் பெருமைப்பட்டிருப்பேன். ஆனால் முயற்சி இல்லாமல் கிடைத்த செல்வம் விரும்பத்தகாத நினைவுகளைத் தூண்டி, என் வாழ்க்கையை ஆட்டம் காண வைக்கிறது," என்று அவர் பின்னர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
இறுதியில், இந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாத 'எஸ்' ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டார். அதன் அடிப்படையில், அவர் வென்ற தொகையில் சுமார் 500 மில்லியன் யென் ($3.2 மில்லியன்) ஐ காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தார். மேலும், அந்தக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பயனாளிகளாகத் தன் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயரிட்டார். இந்தச் செயலின் மூலம், தன் மறைவுக்குப் பிறகு இந்தப் பணம் தன் குடும்பத்தினரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் நம்புவதாக தெரிவித்திருக்கிறார்,




















