TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா...
நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெரிய வந்தது.
பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர்.
தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தர்மேந்திரா சாமானிய மக்களின் ஹீரோ என்று கூறி நீண்ட ஒரு பதிவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தர்மேந்திராவின் மரணம் இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவு.
தர்மேந்திரா ஜியின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் ஒரு சின்னத்திரை ஆளுமை; அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கவர்ச்சியையும் ஆழத்தையும் கொண்டு வந்த ஒரு தனித்துவமான நடிகர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நடிகை ஜெயபிரதா ஆகியோரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். தர்மேந்திராவின் மரணம் குறித்த செய்தி இணையத்தில் பரவத் தொடங்கியவுடன், கரண் ஜோஹர், கஜோல், கரீனா கபூர் கான் மற்றும் மணீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மறைந்த நடிகரை சமூக ஊடகங்களில் நினைவுகூர்ந்து மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
பலத்த பாதுகாப்புடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சூழ, குடும்பத்தினர் முன்னிலையில் தர்மேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தர்மேந்திரா இறப்பதற்கு முன்பு கடைசியாக சமூக வலைத்தள பக்கத்தில் தனது இரண்டாவது மனைவி ஹேமாமாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தர்மேந்திராவிற்கு புனே அருகில் 100 ஏக்கரில் பண்ணை வீடு இருக்கிறது.



















