விஜய் அடித்த முதல் அரசியல் சிக்ஸர்(?) - திராவிட கட்சிகளுக்கு `ஆட்சி ஆதிகார பகிர்வு' நெருக்கடியா?
த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், "கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும்தான் எதிர்க்கப் போகிறேன். ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரைப் பூசி, ஃபாசிசம் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?. இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி.
சினிமா என்றால் பாட்டு, நடனம், பொழுதுபொக்கு மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வாழ்வியல், பண்பாடு, என்று அனைத்தையும் உள்ளடக்கியது. சினிமாதான் தமிழகத்தில் சமூக அரசியல் புரட்சிக்கு உதவியது. திராவிட சித்தாந்தத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சினிமாதான். என்னை ‘கூத்தாடி’ என்று அழைக்கின்றனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த போதும் அவர்களை இதே பெயர் சொல்லித்தான் விமர்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும்தான் தமிழ்நாடு, ஆந்திராவில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினர். நான் சினிமாவுக்கு வந்தபோது என் தோற்றத்தை வைத்து அவமானப்படுத்தினர். ஆனால் அதுபற்றிக் கவலைப்படாமல் உழைத்து மேலே வந்தேன். கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை. இரண்டும் நமது இரண்டு கண்கள். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்" என்றார்.
இதையடுத்து "ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்" என விஜய் பேசியது திராவிட கட்சிகளுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு என விஜய் கூறியதால் திராவிட கட்சிகளுக்கு நெருக்கடி என இப்போது கூற முடியாது. 15 மாதங்கள் கழிந்து விஜய் என்ன முடிவு எடுக்கிறார். ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?, இல்லையா? என்பதையெல்லாம் தி.மு.க கூட்டணி கட்சிகள் பார்ப்பார்கள். அதற்கு வாய்ப்பு இல்லாதவர் அதிகாரப் பகிர்வு என சொன்னால் என்ன.. சொல்லவில்லை என்றால் என்ன.. அதேநேரத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பு விஜய்க்கு பிரகாசமாக இருக்கிறது என்றால் தி.மு.க-வுக்கு நெருக்கடிதான். விஜய் கொடுக்கும் நம்ம்பிக்கையை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். மேலும் விஜய்க்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்றே தெரியவில்லை. 2026 தேர்தலில் விஜய் கட்சி என்னமாதிரியான செல்வாக்கை பெற்றிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஏற்கெனவே அவருக்கான எதிர்ப்பு அதிகமாகிவிட்டது. அவருடைய செயல்பாடுகளை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும்" என்றார்.
மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேசுகையில், "விஜய்யின் வருகை தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அவரிடம் கட்சி கட்டமைப்பு இல்லை. தனித்துப் போட்டியிடாமல் உஷாராகக் கூட்டணி என அறிவித்துவிட்டார். தி.மு.க, அ.தி.மு.க என அனைத்து கட்சிகளைப் பின்பற்றுவோரின் குடும்பத்திலும் விஜய் ரசிகர்கள் இருப்பார்கள். எனவே எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் இருக்கும். விஜய்க்கு 5 முதல் 6% வாக்குகள் கிடைக்கும். அதேநேரத்தில் அவர் சொல்லியிருப்பது திராவிட கொள்கைகள்தான். ஆனால் தேர்தல் நேரத்தில் சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்போதுதான் வாக்குகள் கிடைக்கும். விஜய்க்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்று தெரியாமலே எப்படி அதிகாரத்தில் பங்கு கொடுப்பார். எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.
விஜய்யின் கருத்து திமுக, அதிமுக வில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்றால், முதலில் த.வெ.க-வும் அந்த அளவுக்கு கட்டமைப்பு கொண்ட கட்சியாக வளர வேண்டும். அப்போது தான் திமுக, அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விஜய் பக்கம் வருவதற்கு யோசிப்பார்கள். இல்லாமல் பேச்சுக்கு என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றால், திராவிட கட்சிகளின் கூட்டணிகள் விஜய் பக்கம் வர யோசிப்பார்கள். அது திராவிட கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாது. அதனால் கட்டமைப்பாக வலுவாக கட்சியாக மாறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb