செய்திகள் :

விடுகதை போட்டி! - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

டீச்சர் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, சத்தம் போடாதீங்க… எல்லாரும் இங்க கவனிங்க! டேய் விஜய்குமார், உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? இங்க கவனிக்க மாட்டியா?” என்று அதட்டிவிட்டு சாக் பீஸை எடுத்து கரும்பலகையில் “சமூக அறிவியல் – எட்டு: காலணி ஆதிக்கம்” என எழுதியது தான் தாமதம்; வகுப்பறையில் மீண்டும் மாணவர்களின் கூச்சல் தொடங்கிவிட்டது.

இதனால் பொறுமையை இழந்த டீச்சர் சட்டென்று திரும்பி, “டேய், ஒரு முறை சொன்னால் புரியாதா உங்களுக்கு? குச்சி எடுத்தால்தான் அமைதியா இருப்பீங்களா?” என அதட்டினார்.

ஆனாலும் கடைசி வரிசையில் சத்தம் குறையவில்லை. பார்க்கவே தேவையில்லை — வழக்கம்போல குமார், சுரேஷ் இருவரும் பனிப்போரில் ஈடுபட்டிருப்பார்கள் என டீச்சர் கணித்தார். “டேய் குமாரு… சுரேஷ்… ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசாம உட்கார மாட்டீங்களா?” என கத்தினார்.

குமார், சுரேஷ் — சிறுவயதிலிருந்தே இரண்டு–மூன்று நாட்களுக்கு மட்டும் இணை பிரியும் சண்டைக்கார நண்பர்கள். புரிந்திருக்குமே… இல்லாவிட்டாலும் பரவாயிலை. அந்த காவிய கதைகளுக்குள் மீண்டும் இறங்க வேண்டியதில்லை.

ஆசிரியர்களின் கருணை ஊற்றில் குளித்து சுகம்காணும் “படிக்கும்” மாணவர்களுக்கு உபத்திரவம் அளித்தல், வீட்டுப்பாடம் செய்யாததால் கணக்கு வாத்தியாரின் வண்டியில் வாரம் ஒரு முறை காத்து புடுங்கி விடுதல், 15 வருடங்களுக்கு முன் இறந்த தாத்தாவுக்கே மாதம் இருமுறை விடுப்பு எடுத்து தேவசம் கொண்டாடுதல், “ஏன் தாமதமா வந்திங்க?” என்றால் தொண்டைச் சலித்துக்கொண்டு,

“ஹ்ம்ம்… அதுவா மீஸ்… எங்க ஊர்ல முனுசாமி அண்ணன் இருக்கார்ல…” என்று ஊரையே கதையில் கதாபாத்திரமாக்குதல், தலைமை ஆசிரியர் மாறப் போகிறார் என வீட்டில் பணம் வாங்கி சின்னராசு அண்ணா கடையில் முட்டாய் வாங்கி தின்பது — இவை எல்லாம் பரமேஸ்வரன் அருளால் இந்த இரண்டு புனித ஆத்மாக்கள் செய்வதற்கான திருப்பணிகளுக்கு முடிவே இல்லை.

இந்த புனித திருப்பணியில் நடுவில் வரும் சண்டைகள் இரண்டு நாட்கள் பனிப்போராக நடக்கும். சரி, இவர்களின் வீர வரலாறு போதும் - மீண்டும் வகுப்பறைக்கு வருவோம்.

ஆசிரியைரின் அதட்டலுக்குப் பிறகு குமார் மெதுவாக எழுந்து, “மிஸ்… சுரேஷ் என்னுடைய ரப்பர் எடுத்துட்டு தர மாட்டுறான் மிஸ்…” என்றான். ஆசிரியை கீழே அமர்ந்திருந்த சுரேஷை பார்த்தார்.

அவசரமாக எழுந்த சுரேஷ், “இல்ல மிஸ்… இவன் பொய் சொல்றான்! நேத்துதான் மிஸ்… இந்த ரப்பரை நான் வாங்கிட்டு வந்தேன்,” என்றான்.

உடனே குமார், “பொய்யு மிஸ்! இவன் பொய்யா சொல்றான் மிஸ்!” என்று எதிர்த்தான்.

சுரேஷ் தலை மீது கை வைத்து, “எங்க அம்மா சத்தியமா நான் நேத்து தான் வாங்கிட்டு வந்தேன் மிஸ்…” என்கிறான்.

இரு தரப்பையும் கேட்ட வகுப்பின் நீதிபதியான சமூக அறிவியல் ஆசிரியை, “டேய்… ஒரு நாளாவது சண்டை போடாம அமைதியா இருங்கடா…” என்று புலம்பினார். இருந்தாலும் வழக்கை ஒத்திவைக்க விரும்பாத சுரேஷ், “மிஸ்… இவன்தான் மிஸ்!” என பிடிவாதம் விட்டான்.

“சுரேஷ், பொய் சொல்லாதடா… அப்புறம் உன்னை அடிச்சிடுவேன்,” என்றான் குமார்.

“அப்படியா? வெளிய வாடா… ஒத்தைக்கு ஒத்தை மோதிக்கலாம்!” என்றான் சுரேஷ்.

இதைக் கேட்ட ஆசிரியை கோபத்தின் உச்சிக்கு சென்றார். கையில் இருந்த சாக் பீஸை இருவர்மீதும் வீசினார். வழக்கம்போல் குறித்தவரைத் தவிர்த்து, யாருக்கும் வம்பு செய்யாத அப்பாவி மாணவன் மனோபாலா மீது விழுந்தது.

ஆசிரியை மன்னிப்பு கேட்டுவிட்டு கடைசி வரிசைக்கு சென்று, “உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு திமிர் இருந்தா என் முன்னாடியே சண்டை போடறேன்னு சொல்லுவீங்க?” என்று இருவரின் காது மடல்களைப் பிடித்து துருவினார்.

வலியில் சுரேஷ், “மிஸ்… விட்டுரங்க மிஸ்… இவன்தான் மிஸ்! என் ரப்பர் எடுத்தான். வீட்டுக்குப் போனா அப்பா திட்டுவார் மிஸ்…” என்றான்.

குமாரும், “எங்க அப்பாவும் திட்டுவாரு மிஸ்!” என்றான்.

அதோடு நிறுத்துகிறானா குமார்? இல்லை. “மிஸ்… எங்க மாமா இந்த ரப்பரை மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்தாரு பீஸ்!” என்றதும் வகுப்பறையில் ஒரே சிரிப்பலை.

திரும்பி அனைவரையும் அதட்டி அமைதிப்படுத்தி ஆசிரியை மெதுவாக நடந்து போய் தனது இருக்கையில் அமர்ந்தார். பிறகு மேசை மீது இருந்த நீல வண்ண தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துவிட்டு, “உங்க ரெண்டு பேரும் தொல்லை தாங்க முடியலடா… எப்ப பாரு ஏதாவது பிரச்சனை பண்ணுறீங்க…” என்று சலித்துக்கொண்டார்.

உடனே இந்த இரண்டு புனித ஆத்மாக்களும் ராமலிங்க அடிகளாரின் பக்தர்களைப் போல சாந்தம் கலந்த பரிதாப முகத்துடன் ஆசிரியரைக் கண்டனர். பஞ்சத்தில் அடிபட்டவர்களைப் போல நின்று கொண்டிருந்த இவர்களின் பரிதாபம் - அந்த ரப்பர் யாருடையது என்ற தீர்ப்புக்காகவே என்பதை ஆசிரியை நன்கு உணர்ந்தார். இறுக்கமான முகத்துடன் தலை மீது கை வைத்து யோசிக்கத் தொடங்கினார். பிறகு சட்டென கண்களைத் திறந்து பேசத் தொடங்கினார்.

“சரிடா… நான் உங்க ரெண்டு பேரையும் சில விடுகதைகள் கேட்பேன். யார் அதிகமான பதில் சொல்றாங்களோ… அவங்களுக்குத்தான் இந்த ரப்பர் சரி…?”

‘விடுகதை’ என்ற வார்த்தை வந்தவுடன் இருவரின் வாய்களிலும் வழக்கம்போல் தீபாவளி கோழக்கட்டைகள் வெடித்தது.
“என்னடா முழிக்கிறீங்க… சொன்னது கேட்டுச்சா இல்லையா?” என்றார் ஆசிரியை.
வேறு வழியின்றி, “சரிங்க மிஸ்…” என்றார்கள் இருவரும்.

பிறகு முன் வரிசையின் இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த பிரியாவை பார்த்து, “ஏய் பிரியா… இந்த ரெண்டு பேரு பெயரையும் போர்டுல எழுதி போடு. யார் ஜெயிப்பாங்கன்னு பாப்போம்,” என்றார் ஆசிரியை. பிரியா எழுந்து சென்று குமார், சுரேஷ் என எழுதினாள்.

திடீரென்று முன் வரிசையில், “மிஸ்!” என்று ஒரு மாணவர் எழுந்தார்.
“என்னடா?” என்று ஆசிரியை கேட்டார்.
“மிஸ்… இந்த பிரியா பொண்ணு ‘எஸ். சுரேஷ்’ க்கு பதிலா ‘வி. சுரேஷ்’னு என் பேரு எழுதி இருக்காங்க மிஸ்!”

வகுப்பறையில் மீண்டும் சிரிப்பலை.
“ஐயோ சரி மிஸ்!” எனச் சொல்லி பிரியா திருத்தினாள்.

“இன்னைக்கு நான் வீட்டுப்பாடமே பண்ணலடா மிஸ் அடிப்பாங்கன்னு இருந்தேன்… நல்லவேளை, குமாரும் சுரேஷும் காப்பாத்திட்டாங்க!” என்ற கடைசி வரிசை மாணவர்களின் உற்சாகத்தில் போட்டி இனிதே ஆரம்பமானது.

முதலாவது விடுகதையை கேட்டார் ஆசிரியை. சட்டென கையை உயர்த்திய குமார் சரியான பதிலை சொன்னான். ஒரு புள்ளி கிடைத்தது. இரண்டாவது விடுகதைக்குக் கூட சரியான பதில் சொன்னதால் மேலும் ஒரு புள்ளி.

முதல் மூன்று புள்ளிகள் எடுப்பவன்தான் வெற்றியாளர்; அவனுக்குத்தான் ரப்பர் சொந்தம். தோற்றவர் எந்த சூழலிலும் அதைக் ‘சொந்தக்கொள்ளக் கூடாது’ — இருவரின் அம்மாக்களும் போட்டி தொடங்கும் முன்பே சத்தியம் செய்து வைத்திருந்தனர்.

இன்னும் ஒரு விடுகதைக்கு பதில் சொன்னாலே ரப்பர் தனது வசமாகிவிடும் என்ற எண்ணத்தில் குமார் குதூகலித்துக்கொண்டிருந்தான்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது விடுகதைக்கு சரியான பதிலை சொன்னான் சுரேஷ். வகுப்பறையில் ஒரே ஆரவாரம் — “குமாரு!” “சுரேஷு!” என்று இரண்டு அணிகளாகப் பிளந்து ஆரவாரம்.

சுரேஷ் சொன்ன பதில் குமாரை எவ்வளவு கஷ்டப்படுத்தியதோ தெரியாது… ஆனால் ஆசிரியரை மிகுந்த கஷ்டத்தில் ஆழ்த்தியது உறுதி. ஏனென்றால், ஆசிரியரின் விடுகதைக் கையிருப்பு முடிந்துவிட்டது.

நான்காவது விடுகதையை எப்படியோ யோசித்து கேட்டார். அதற்கும் சரியான பதிலை சுரேஷ் கூறிவிட்டான். வகுப்பறையில் மீண்டும் அலப்பறை. குமாரின் நிலைமை பரிதாபம்; ஆனால் ஆசிரியரின் நிலையை ஒப்பிட்டால் பரவாயில்லை.

அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்த ஆசிரியை. மாணவர்களிடம் கேட்டு மானம் போய்விட வேண்டாமென்று நினைத்தார்.

இந்த வழக்கில் வெள்ளப் போவது தர்மமா… அதர்மமா… நல்ல சக்தியா… தீய சக்தியா… சோட்டா பீம்மா… அல்லது கில்மாடாவா… என்று மாணவர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

நீண்ட சிந்தனையிலும் பதில் கிடைக்காத ஆசிரியை, விரக்தியில் — “இப்போ கேட்கப் போற கேள்விக்கு இருவரும் பதில் சொல்லக்கூடாது” என்று முடிவு செய்து, தானே ஒன்றை உருவாக்கி கேட்டார்:

“கண்மூடியும் நடக்குமாம்…
காற்றிலே பறக்குமாம்…
ஆற்றையும் கடக்குமாம்…
அது என்ன?”

இருவருக்கும் பதில் தெரியாமல் நீண்ட நேரம் திணறினர். ஆதரவாளர்களின் முகங்கள் கசந்தன.

இதையே பயன்படுத்தி இந்த வழக்கை கிடப்பில் போடலாம் என ஆசிரியை நினைக்கத் தொடங்கினார்.

அந்த நேரத்தில்—

“மிஸ்… எனக்கு பதில் தெரியுமே மிஸ்!” என்று கத்தினான் சுரேஷ்.

ஆசிரியை உள்ளுக்குள் திணறினாலும் வெளியில் காட்டவில்லை. “சரி… சொல்,” என்றார்.

சுரேஷ் உற்சாகமாக:
“இதுக்கு பதிலே எங்க அப்பா மிஸ்!”

வகுப்பு வெடித்தது.
ஆசிரியருக்கோ கோபம் எழுந்தது.

“டேய் சுரேஷ்! எவ்வளவு திமிரு இருந்தா? இவ்வளவு சீரியஸா கேள்வி கேட்டிருக்கேன்… நீ சிரிப்பா காட்டுறியா?” என்றார்.

“இல்ல மிஸ்… இதுக்குப் பதில் எங்க அப்பாதான் மிஸ்…” என்றான் சுரேஷ்.

“அப்படியா? எப்படிப் உங்க அப்பா?” என்று ஆசிரியை கேட்டார்.

சுரேஷ் நிதானமாக,
“நீங்கதானே சொன்னீங்க… கண்மூடியும் நடக்குமாம் ன்னு. எங்க அப்பா கூட கண் மூடிட்டு நல்லா நடப்பாரு மிஸ்! வேணும்னா நம்ம கிளாஸ்ல இருக்கும் வீராசாமிய கேட்டு பாருங்க!” என்றான்.

இந்த முறை ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.

ஆசிரியை சிரிப்பை அடக்கி, “சரிடா… உங்க அப்பா கண்மூடினாலும் நடப்பாரு. ஒத்துக்குறேன். ஆனா விடுகதையிலிருந்து மீதமுள்ள பகுதிகளுக்கும் பதில் சொல்லிட்டு ரப்பர் வாங்கிக்கிட்டு போ,” என்றார்.

மகிழ்ச்சியில் குதித்த சுரேஷ் குழந்தைத்தனமான பாஷையில் தொடங்கிவிட்டான்:

“அதுவா மிஸ்…

போன வருஷம் எங்க அப்பா செத்துப்போனார்ல மிஸ்… அப்போ அந்த தொறமாருங்க இருக்குற ஊர் வழியா எங்க அப்பா ஒடம்பு போகக்கூடாதுன்னு… மேல தெரு பாலத்துக்கு பின்னாடி இருந்து ஜனங்க எல்லாம் எங்க மேல கல் எடுத்துக்கிட்டு அடிச்சாங்க மிஸ்… அப்போ நானும் எங்க அம்மாவும் பாலத்துக்கீழே போய் நின்னோம். மேலிருந்து எங்க பெரியப்பா பசங்க எல்லாம் எங்க அப்பாவை ஒரு கையித்துல கட்டி மேலிருந்து கீழே இறக்கினாங்க மிஸ்… அப்ப எங்க அப்பா காத்துல அப்படியே பறந்து வந்தாரு மிஸ்…

அப்புறம் பாலத்துக்கீழே தண்ணி நிறைய இருந்துச்சு மிஸ்… அதனால எங்க அப்பாவை பிடிச்சுட்டு எங்க ஊர்ல இருக்கிற அண்ணன்கள் எல்லாம் தண்ணில நீச்சல் அடிச்சிட்டு போனாங்க மிஸ்… அப்போ எங்க அப்பா தண்ணியில மிதந்துபோனாரு. இந்த ஊரே பார்த்துச்சு மிஸ்! வேணும்னா யார்கிட்டயாவது கேட்டு பாருங்க… அதை டிவில கூட போட்டாங்க!”

வகுப்பறை முழுவதும் அமைதி.

“அப்புறம் என்ன ஆச்சு…?” என்று குமார் மெதுவாக கேட்டான்.

“அப்புறம்… எங்க அண்ணனை மட்டும் கூட்டிட்டு போயிட்டு… எங்க அப்பாவை மேல மண்ணுவாரிச் சூட்டி மூடிட்டாங்க. தண்ணி நிறைய போகுதுன்னு சின்ன பசங்க யாரையும் கூட்டிட்டு போகலை… எங்க அப்பாவை நான் கடைசியா பார்க்க கூட இல்லை மிஸ்…”

சிறிது நேரம் அமைதியின் பின்—

“சரி… அத விடுங்க மிஸ். நான் சொன்ன பதில் சரிதானே மிஸ்?” என்று சுரேஷ் நிர்ப்பாவமாக கேட்டான்.

தேர்தல்

குறை நம் பார்வையில்தான்! - மன்னிப்பு கேட்க துடிக்கும் மனம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமாகியிருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92. கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர... மேலும் பார்க்க

சேலம்: புது பொலிவுடன் அரசு அருங்காட்சியகம்; என்ன ஸ்பெஷல், பார்க்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள் என்ன?

சேலம் மாவட்டம் மணக்காடு அருகில் ரூ.4.91 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்துடன் புது பொலிவில் மக்கள் பார்வைக்கு தயாராகி வருகிறது அரசு அருங்காட்சியகம் என்ற தகவலோடும், ஆர்வத்தோடும் என்ன நடக்கிறது அரசு அருங்க... மேலும் பார்க்க

அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா? - பேருந்தும் பாடல்களும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Vikatan Play: கலை கலைக்கானதா? மக்களுக்கானதா? எழுத்தாளர் இரா.முருகவேள் படைப்புகள் - ஆடியோ வடிவில்

“ தமிழ்ச்சூழலில் தான் கொண்ட பொதுவுடமை அரசியலை தன் களச்செயற்பாட்டில் மட்டுமின்றி படைப்பின் வழியிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் எழுத்தாளர் இரா.முருகவேள். அரசியல் செயற்பாட்டாளர், வழக்கறிஞர், மொழிப... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர் : கடந்து வந்த பாதை; பிரிவு 370 நீக்கம்... எதிர்காலம்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க