டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்...
'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' - கண்டுகொள்ளாத அரசு?
பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் குறைந்தபட்சமாக 700 முதல் 800 ரூபாயிலிருந்தே அமர்ந்து செல்லும் வகையிலான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த வகை டிக்கெட்டுகள் குறைந்தபட்சமாக சராசரியாக 2500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது.
படுக்கைவசதியுடன் கூடிய இருக்கைக்கான டிக்கெட் குறைந்தபட்சமாக 3500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய்க்கும் விற்கபட்டு வருகிறது. அதேமாதிரி, மதுரையிலிருந்து சென்னைக்கான ஆம்னி பஸ்களின் டிக்கெட்டும் குறைந்தபட்சமாக 2500 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு குறைந்தபட்சமாக 1800 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரைக்கும் டிக்கெட் விற்கப்படுகிறது. கோயம்புத்தூரிலிருந்தும் குறைந்தபட்சமாக 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரைக்கும் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

இவை வழக்கமான நேரத்திலான கட்டணங்களை விட கிட்டத்தட்ட மூன்று நான்கு மடங்கு அதிகம். இதை வெளிப்படையாக டிக்கெட் புக்கிங் ஆப்களிலேயே தெரிவித்து விற்று வருகின்றனர். இதனால் சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்ப நினைக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.











பொங்கலை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், 'ஆம்னி பஸ்களை கண்காணிக்க சென்னைக்குள் 9 தணிக்கைக் குழுக்களும் மற்ற மாவட்டங்களில் 36 தணிக்கைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருக்கிறது' எனக் கூறியிருந்தார். கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும் ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காமல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்பு அரியலூரில் பேசிய சிவசங்கர், 'கடந்த ஆண்டுகளை விட மக்கள் அதிகளவில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். அரசுப் பேருந்துகளின் சேவை இல்லாத நீண்ட தூர ஊர்களுக்கு போகும் ஆம்னி பஸ்களில் வேண்டுமானால் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படலாம்' எனப் பேசியிருந்தார். மதுரை, திருச்சி, திருநெல்வேலியெல்லாம் அரசுப் பேருந்துகளின் சேவை இல்லாத ஊரா என்ற கேள்வியையும் பயணிகள் முன்வைக்கின்றனர்.












