கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு மு...
``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது" - ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள்.

பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது." எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்." என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார்.











