BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! ...
Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு திடீர் ப்ளீடிங்... புற்றுநோய் பரிசோதனை தேவையா?
Doctor Vikatan: என் வயது 55. மாதவிடாய் நின்று 4 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கு திடீரென ப்ளீடிங் ஆனது. மாதவிடாய் நின்றுபோன பிறகு இப்படி ப்ளீடிங் ஆனால், அது புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள் பலரும். அது உண்மையா... நான் புற்றுநோய்க்கான டெஸ்ட் செய்து பார்க்க வேண்டுமா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

``மெனோபாஸுக்கு பிறகு வரும் ப்ளீடிங் சாதாரணமானதல்ல. ஆனாலும் மெனோபாஸுக்கு பிறகு வரும் ப்ளீடிங், புற்றுநோயல்லாத காரணத்தாலேயே வருகிறது என்பது நல்ல செய்தி. 10 சதவிகிதப் பெண்களுக்கு புற்றுநோய் காரணமாகவும் இந்த ப்ளீடிங் ஆகலாம். மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு முற்றிலும் நின்றுபோவதால் வெஜைனா பகுதியிலுள்ள சருமம் சுருங்கிவிடும். அந்த இடத்தின் அதீத வறட்சி காரணமாக ப்ளீடிங் ஆவது சாதாரணமாக நடப்பதுதான்.
கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான செர்விக்ஸ் அல்லது கர்ப்பப்பையின் உள்பகுதியிலுள்ள எண்டோமெட்ரியம் ஆகிய பகுதிகளில் தொற்று ஏற்படுவதாலும் ப்ளீடிங் ஏற்படலாம். எண்டோமெட்ரியம் பகுதிக்குள் புற்றுநோயல்லாத கட்டிகள் சிலருக்கு இருக்கலாம். அதுவும் மெனோபாஸுக்கு பிறகான ப்ளீடிங் ஏற்பட காரணமாகலாம். மாத்திரை அல்லது பேட்ச் அல்லது ஜெல் வடிவில் ஹெச்ஆர்டி எனப்படும் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுக்கும் பெண்களுக்கும் இந்த ப்ளீடிங் ஏற்படலாம். இத்தகைய காரணங்களால் ஏற்படும் ரத்தப்போக்கை எளிதாக குணப்படுத்திவிடலாம்.

நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். ஈஸ்ட்ரோஜென் குறைவு காரணமாக ஏற்பட்டிருந்தால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் பரிந்துரைப்பார். அதை அளவுக்கதிமாகப் பயன்படுத்தக்கூடாது. இந்த க்ரீம் எல்லோருக்கும் உகந்தது அல்ல என்பதால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் எடுக்கக்கூடாது. தொற்று காரணமாக ஏற்பட்ட ப்ளீடிங் என்றால் ஆன்டிபயாடிக் மருந்துகள் உதவும். எண்டோமெட்ரியம் கட்டிகளை ஹிஸ்டரோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம்.
சிலருக்கு கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பை வாய்ப்பகுதியிலோ புற்றுநோய் வரலாம். இதனாலும் ப்ளீடிங் வரலாம். எனவே, மெனோபாஸுக்கு பிறகு ப்ளீடிங் ஏற்பட்டால் முழுமையான பரிசோதனை அவசியம். முதலில் பொதுவான பரிசோதனை, அடுத்து வெஜைனா பகுதியில் பரிசோதனை, கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கான பரிசோதனை செய்து கட்டிகளோ, புற்றுநோய்க்கான அறிகுறிகளோ தென்படுகின்றனவா என்று பார்ப்போம். புற்றுநோய்க்கான பாப் ஸ்மியர் டெஸ்ட்டும் செய்யப்படும்.

கர்ப்பப்பையின் உள்பகுதியான எண்டோமெட்ரியத்தின் உள் லேயர் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது என்றும் பார்க்கப்படும். மெனோபாஸுக்கு பிறகு இது மெலிந்தே இருக்கும். ஒருவேளை அடர்த்தியாக இருந்தால் புற்றுநோய் அறிகுறியாக இருக்குமோ என அந்தப் பகுதியை பயாப்சி பரிசோதனைக்கு அனுப்புவோம். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்தால்தான் காரணம் அறிந்து சிகிச்சை எடுக்க முடியும். புற்றுநோயாக இருக்கும் என்ற பயத்தில் அதைத் தவிர்ப்பது சரியானதல்ல. அப்படியே புற்றுநோயாகவே இருந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்திவிட முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















