BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! ...
BB Tamil 9: சீசன் 9-ல் அதிக சம்பளம் வாங்கியவர்களும், சம்பளம் இன்றி போனவர்களும்! யார் யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 2017 ல் தொடங்கிய முதல் சீசன் தொட்டு ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும்போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாங்கும் சம்பளம் குறித்த செய்தியை வெளியிட்டு வந்துள்ளோம்.
இந்த சீசனிலும் போட்டியாளர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவலை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
தற்போது இந்த சீசனின் அதிக தொகை வாங்கிய போட்டியாளர் யார் எனப் பார்க்கலாமா?
சந்தேகமே வேண்டாம், ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர்தான் அந்த நிகழ்ச்சியை வைத்து அதிக பரிசுத் தொகை பெறுபவராக இருப்பார். ஏனெனில் டைட்டிலுக்கான பரிசுத் தொகையுடன், அவர் நூறு நாள், சரியாக சொல்வதென்றால் 105 நாள்கள், அந்த வீட்டில் இருந்நதற்கான சம்பளமும் கிடைக்கும்.
இதில் வெற்றியாளருக்கான பரிசுத் தொகைக்கு 30 % வரி பிடித்தம் இருக்குமென்கிறார்கள்.
டைட்டில் வின்னரை அடுத்து பணப் பெட்டியை எடுத்துச் செல்பவருக்கும் அதிக தொகை கிடைக்குமென தெரிகிறது. ஏனெனில் பெட்டியில் எடுத்துச் செல்லும் பணம் தவிர்த்து அவர் அந்த வீட்டில் தங்கியிருந்த நாட்களூக்கான சம்பளமும் அவருக்குக் கிடைக்கிறது.
அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது. டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.
அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும். தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர்.

அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது.
அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம்.
வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள்.
நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார். பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.


















