அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
விதிமீறல்: வாகன ஓட்டிகள் மீது ஒரே நாளில் ரூ. 3.32 லட்சம் அபராதம்
தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.3.32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், ஏஎஸ்பி மதன் மேற்பாா்வையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் தலைமையிலான போலீஸாா் மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நகரப்பகுதிகளான பாளையங்கோட்டை சாலையோரம் உள்ள அணுகு சாலை, கடற்கரை சாலை ஆகிய இடங்களில் பொதுக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞா்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் அங்கு பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட 14 போ் மீது வழக்குப்பதிவு செய்து, அவா்களது வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்களுக்கு மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஒரே நாளில் மட்டும் நகரப் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றின்மூலம் ரூ.3 லட்சம் 32 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இடையூறாக பைக் சாகசத்தில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.