செய்திகள் :

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி: சித்தர்கள் மண்ணில் சிலிர்ப்பூட்டும் வனகாளி, பிலாவடிகருப்பர் சந்நிதிகள்

post image

சதுரகிரி... சித்தர்கள் தவம் செய்யும் புண்ணியபூமி. இங்கு வந்தாலோ அந்த மலையை தரிசித்தாலோ சிவம் உங்கள் வாழ்வில் எப்போதும் நிறைந்திருக்கும். காரணம், சிவலிங்கத்தின் 96 வகை வடிவங்களும் இங்கு மட்டும்தான் உண்டு என்பார்கள். ஆனால் அனைவராலும் அனைத்துவகை லிங்கங்களையும் தரிசிக்க இயலாது. குறிப்பிட்ட 6 லிங்கங்களை தரிசிக்கலாம். அதுவே இப்பிறவியின் பெரும்பயனாக அமையும் என்பது சித்தர் வாக்கு.

அந்த 6 லிங்கங்கள் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், இரட்டை லிங்கங்கள், கண லிங்கம், பெரிய மகாலிங்கம் ஆகியவைதான். இந்தச் சந்நிதிகள் மட்டுமல்ல, சதுரகிரி மலை முழுக்கவும் வல்லமை மிக்க பலன்களை அருளும் தெய்வச் சந்நிதிகள் நிறைய உண்டு. அவற்றில் சில சிலிர்ப்பூட்டும் சரிதம் உடையவை.

சதுரகிரி

மானுட உருவில் சஞ்சாரம் செய்யும் வனகாளி

சித்தர்களின் தாயாக விளங்குபவள் வாலாம்பிகை. சதுரகிரியில் சுந்தர மகாலிங்க சுவாமியை இந்திராதி தேவர்கள் பிரதிஷ்டை செய்து வணங்கியபோதே, ஈசனுக்குத் துணையாக அரூப வடிவில் வந்தவள் வாலாம்பிகை. ஈசனைப் போலவே இந்த அம்பிகையும் இங்கே ரூப வடிவில் நிரந்தரமாக தங்கவேண்டும் என்று விரும்பி சித்தர்கள் கடுமையாக தவம் இருந்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று வாலாம்பிகை இங்கே ஆனந்தவல்லியாக லிங்க ரூபிணியாக எழுந்தருளினாளாம்.

சுந்தர மகாலிங்கம் சந்நிதிக்கு பின்புறம் இவள் குடி கொண்டுள்ளாள். பௌர்ணமி, அமாவாசை நாள்களில் சித்தர்கள் எரிநட்சத்திர வடிவில் இங்கே வீழ்ந்து சுந்தர மகாலிங்க சுவாமியையும் ஆனந்தவல்லியையும் வழிபடுவதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த அம்பிகையை வழிபட சகல யோகங்களிலும் தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை.

இன்றைக்கும் சதுரகிரியில் வாழும் பழங்குடி மக்களுக்கு மானுடவடிவிலேயே தரிசனம் தந்து அருளும் அம்பிகை இவள். இங்குள்ள அபூர்வ மூலிகைகளுக்கும் மறைந்துள்ள செல்வங்களுக்கும் இந்தக் காளியே காவல்காரி என்கிறார்கள்.

ஒருமுறை சிறுமி ஒருத்தியிடம் வந்து ``வனகாளி கோயிலுக்கு போற வழி எது?’’ எனக் கேட்டாளாம் இந்த அம்மன். உடனே அந்தச் சிறுமி ``‘நீதானே வன காளி, நான்தான் தினமும் உன்னைப் பார்க்கிறேனே. நீ இருக்கும் இடத்துக்கான வழியை என்னிடம் கேட்கிறாயே’’ என்றாளாம். உடன் சிரித்தபடியே சென்றுவிட்டாளாம் வனகாளி. சந்தன மகாலிங்க சுவாமி சந்நிதியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் நடுக்காட்டில் இருக்கிறாள் இந்த வன காளி. இவளை வழிபட சகல பயங்களும் நீங்கும்.

சதுரகிரி பிலாவடி கருப்பர்

ஒரே ஒரு காய்தான் காய்க்கும் அதிசயப் பலா

சுந்தர மகாலிங்கக் கோயிலை அடைவதற்கு முன், பலா மரத்தடியில் வீற்றிருக்கும் கருப்பண்ண சுவாமியை தரிசிக்கலாம். இங்கே சுந்தர மகாலிங்க சுவாமிக்கு என்ன பெருமையும் மகிமையும் உள்ளனவோ, அவை அத்தனையும் இந்தக் கருப்பருக்கும் உண்டு. சதுரகிரியின் காவல் தெய்வம் இவரே. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை அந்நியர்கள் தாக்க வந்தபோது, அந்த அம்மையின் ஆபரணங்கள் அனைத்தையும் பாதுகாத்தவர் இந்த பிலாவடி கருப்பரே. காலம் மாறியதும் குண்டுமணி குறையாமல் திருப்பிக் கொடுத்தாராம்.

பிலாவடி கருப்பர் ஆலயம் அருகே உள்ள தைலக்கிணறு புகழ் பெற்றது. மீனாட்சியம்மனின் ஆபரணங்களை இந்தக் கிணற்றில் வைத்துதான் பாதுகாத்தாராம் பிலாவடி கருப்பர்.

வாமதேவர் என்பவர் சிவாலயம் கட்டுவதற்காக காலங்கி சித்தரிடம் உதவி கேட்டாராம். சித்தர்பெருமான் ரசவாத வித்தை மூலம் தைலம் ஒன்றை தயாரித்தார். அதைக் கொண்டு தாமிரத்தைத் தங்கமாக்கி வாமதேவரிடம் கொடுத்தார்.

வாமதேவரோ தங்கத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதியை சித்தரிடமே கொடுத்துவிட்டார். மீதமிருந்த அளவற்ற பொன்னையும், பொன் தயாரிக்கும் தைலத்தையும் பலா மரத்தின் அடியில் இருந்த கிணற்றுக்குள் போட்டார் சித்தர்.

இந்தப் புதையல் தீயவர்களின் கைகளுக்குப் போய் சேர்ந்துவிடக் கூடாது என்று மதுரையில் காவலிருந்த கருப்பரை வரவழைத்து, இந்தக் கிணற்றுக்குக் காவலிருக்கும்படி கேட்டுக்கொண்டாராம். அதன்படியே சொர்ணத்தைக் காக்கும் காவல் தெய்வமாக பிலாவடிக் கருப்பன் இருக்கிறார் என்கிறது ஒரு திருக்கதை.

சதுரகிரி

கருப்பரின் சந்நிதியில் உள்ள பலாமரத்தில் ஒரு காயே இருக்கும். அது கீழே விழுந்ததும் தான் மீண்டும் ஒன்று காய்க்கும். இந்த அதிசயம் இப்போதும் தொடர்கிறது. மலைக்கு மேல் செல்லும்போதும் இறங்கும் போதும் இவரிடம் உத்தரவு கேட்கவேண்டும் என்பது ஐதீகம். இவர் சந்நிதி எதிரே கொதிக்க கொதிக்க நீர் வெளியாகும் அதிசயச் சுனை ஒன்றும் உள்ளது. இப்படிப்பட்ட அற்புதமான சந்நிதிகள் பல சதுரகிரியில் அமைந்துள்ளன.

குறிப்பு : சதுரகிரி மலைப்பயணம் கொஞ்சம் கடினமானது. உரிய அனுமதி மற்றும் வழிகாட்டி இல்லாமல் செல்ல வேண்டாம். மேலும் மலையேற்றத்தில் அனுபவம் இருப்பது நல்லது. உடல் தகுதியை உறுதிப்படுத்திக்கொண்டு பயணம் மேற்கொள்வது நல்லது.

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: மன சஞ்சலங்கள் அகற்றும் மகாதேவர் சந்நிதி!

சந்திரன் சிவவழிபாடு செய்த தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட க்ஷேத்திரங்களாக... மேலும் பார்க்க

சென்னை குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயில் : திருமண வரம் தரும் திருத்தலம்!

சென்னையைச் சுற்றியிருக்கும் மூன்று அம்மன் தலங்களை ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். அவை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி கோயில், குன்றத்தூர் காத்யாயினி அம்மன் ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.!

திருநெல்வேலி: ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா.! மேலும் பார்க்க

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோவில் ஆடி அமாவாசை; பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு | Photo Album

பண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில் பக்தர் வழிபாடுபண்ணாரி அம்மன் கோவில... மேலும் பார்க்க

வேண்டுதலுக்காகக் கட்டிய மணிகளை விழுங்கும் அதிசய மரம்... கலியுக அற்புதம் சொரிமுத்து ஐயனார் கோயில்!

பிரார்த்தனை நிறைவேறினால் கோயிலில் மணி கட்டுவதாக வேண்டிக்கொள்ளும் வழக்கம் பல தலங்களில் உள்ளது. அப்படிக் கட்டப்பட்ட மணிகளை ஒரு மரம் ஏற்றுக்கொள்ளும் விதமாக விழுங்கிவிடுகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதல்லவா... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டம், திருநட்டாலம் சங்கரநாராயணர் : வழக்குகளில் வெற்றி... திருமண வரம் தரும் ஆலயம்!

ஈசன் சங்கரநாராயணராய் அருளும் தலங்கள் அனைத்துமே சிறப்புடையவை. தம்பதி ஒற்றுமையை அதிகப்படுத்துபவை. இந்த உலகில் வாழ்வதற்குத் தேவையான நலன்களை அருள்வதோடு உலகுக்குத் தேவையான ஞானத்தையும் வழங்குவன. அப்படிப்பட்... மேலும் பார்க்க