மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்க...
'வெட்கமா இல்லையா திமுக அரசே?' - கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்; குண்டுக்கட்டாக கைது!
தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 140 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே கூடி கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பிராட்வேயின் குறளகம் அருகே இருந்து தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று முதல்வரிடம் மனு கொடுக்கப் போவதாக அறிவித்தனர்.

தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காலை முதலே காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்றத்தை சுற்றியிருக்கும் குறளகம், ஹைரோடு, NSC போஸ் ரோடு ஆகியவற்றில் வெவ்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்து போராடினர். இதை எதிர்பார்க்காத காவல்துறையினர் தடுமாறிப் போயினர்.
'நர்ஸூங்க மட்டும் கேட்ட உடனேயே வேலை கொடுக்குறீங்க. நாங்க இத்தனை நாளா தெருல இறங்கி போராடுறோமே உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா. சாதி பார்த்து ஒதுக்குறீங்களா? குப்பை அள்ளுறவங்கதானேன்னு குப்பையா தூக்கி போடுறீங்களா?' என தூய்மைப் பணியாளர்கள் கோஷம் எழுப்பி கொந்தளித்தனர். கிட்டத்தட்ட 35 பேருந்துகளில் பெண் தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர்

போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி பேசுகையில், '140 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். மாநகராட்சி சார்பில் யாருமே பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. செவிலியர்கள் போராடியவுடன் அவர்களுக்கு பணி நிரந்தரம் கொடுக்கிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் இத்தனை நாட்கள் போராடியும் எந்த தீர்வும் இல்லை.










அடுத்தக்கட்டமாக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் வீட்டை நோக்கி போராட்டத்தை முன்னெடுப்போம்.
எங்களுக்கு தீர்வை கொடுக்கமால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தினால், சென்னையில் குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது போராட்டம் நடத்துவோம்.
ராம்கி நிறுவனம் சம்பாதிப்பதற்காக ஏழைகளை நசுக்குவதா? பெண்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வீதியில் இறங்கி போராடி குண்டுக்கட்டாக கைது செய்யப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு வெட்கமாக இல்லையா?' என்றார்.















