'Our hearts are full.!' - திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்த அனிருத்| Photo Album
'வெற்றி Mentor திட்டம்' - தோனியை மீண்டும் ஆட வைக்க பிசிசிஐக்கு சில ஐடியாக்கள்!
ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். ரசிகர்களின் அன்பால் தோனி இத்தனை ஆண்டுகள் ஆடினார் என்றாலும், இதற்கு வணிகரீதியான காரணங்களும் இருக்கவே செய்கின்றன. தோனி ஐ.பி.எல் இல் ஆடுவது அதன் வணிகத்துக்கு அத்தியாவசியம். அதனால்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தோனிக்கென்றே 'Uncapped Player' விதிமுறையை பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்தது.

தோனிக்காக ஆட்டத்தின் விதிமுறைகளையே மாற்றும் பிசிசிஐ, மீண்டும் தோனியை மைதானத்துக்குள் கொண்டு வரவும் தங்களின் வணிகத்தை தக்கவைக்கவும் 'வெற்றி Mentor திட்டம்' என்ற பெயரில் சில புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினால் எப்படியிருக்கும்?
ஒரு வேடிக்கையான கற்பனை.
இம்பாக் மென்டார்!
இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறையை போல 'இம்பாக்ட் மென்டார்' என்கிற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தலாம். பேட்டிங் ஆடுகையில் 17-20 வது ஓவர்களில் அணிகள் இந்த ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை தோனியை சென்னை அணி அடுத்தடுத்த ஆண்டுகளில் கோச் ஆக மாற்றினால், இதே விதிமுறையை 'இம்பாக்ட் கோச்' என மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை சென்னை அணியில் எனக்கு எந்த ரோலும் வேண்டாமென அவர் ஒதுங்கிவிட்டாலும், இதை 'இம்பாக்ட் ரிட்டையர்டு ப்ளேயர்' என மாற்றி தோனியை அள்ளி வந்து ஆட வைக்கலாம்.

'தம்பி ஒரு பால் போடுப்பா....' - மென்டார் வெர்ஷன்!
தெருவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களிடம் 'தம்பி ஒரு பால் போடுப்பா...' என பேட்டை பிடுங்கி ரகளை செய்யும் மகான்களை இன்ஸ்பிரேஸனாக எடுத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை வடிவமைக்கலாம். ஒரு இன்னிங்ஸின் கடைசி பந்தை எப்போதுமே அணியின் மெண்டாருக்குதான் கொடுக்க வேண்டும். ஒரே ஒரு பந்துக்குதான் பேட்டிங் ஆட வேண்டுமென்பதால் பிட்னஸை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட வேண்டாம். 10 செகண்ட் பேட்டிங் பிடிப்பதற்காக, ஒரு ஒரு நிமிடத்திற்கு தோனி டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து க்ரீஸூக்கு நடந்து வர வேண்டியிருக்கும். இதை வளைத்து வளைத்து வெவ்வேறு ஆங்கிள்களில் படம்பிடித்து, மறுநாள் 'Mentor Mass Entry' என டிவியில் தனியாக ஹைலைட்ஸ் போடலாம்.
மென்டார் ஊக்குவிப்பு பந்துவீச்சு திட்டம்!
ஒரே ஒரு பந்துக்காக மைதானத்துக்குள் இறங்க வேண்டுமா, மாஸ் பிஜிஎம்மோடு பில்டப்பாக க்ரீஸூக்குள் இறங்கி சிங்கிள் தட்டினால் சங்கடமாக இருக்குமே என மென்டார்கள் யோசிக்கக்கூடாது என்பதற்காகவே இந்தத் திட்டம். இதன்படி மென்டார்கள் கடைசி பந்தில் ஸ்ட்ரைக் எடுக்கையில் மட்டும் பௌலர் நல்ல ஃபுல் லெந்தில் காலுக்குள் வாட்டமாக சிக்சர் அடிக்கும்படி பந்துவீச வேண்டும். வேறு எதாவது லெந்தில் வீசி மெண்டாரை திணறடித்தால் நோ - பால் வழங்கப்படும்.

வெற்றி மென்டார் சுண்டுதல் திட்டம்:
ஒருவேளை மென்டார்கள் பேட்டிங் ஆடவே விருப்பப்படவில்லை எனில், டாஸூக்கு கேப்டனுக்கு பதிலாக மெண்டார்தான் வர வேண்டுமென கடும் நிபந்தனை விதிக்கலாம். டாஸில் ரவிசாஸ்திரியுடன் 5 நிமிடமும் Post Match Presentation இல் ஹர்ஷாவுடன் 5 நிமிடமும் மெண்டாரை பேச வைக்கலாம். 'Definitely Not' 'comeback that's what we known for...' 'ரெண்டே ரெண்டு பேருக்குதான் போட்டியே.. ' என ரசிகர்கள் சில்லறையை சிதறவிடும்படி ஒரு மேட்ச்சுக்கு இரண்டு பன்ச்களை மெண்டார்கள் பேசியே ஆக வேண்டுமென்றும் ஒரு பாய்ண்ட் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறப்பு 'தல' தரிசனம்:
தோனி ஆடும்போது சேப்பாக்கத்தில் ப்ளாக்கில் பல மடங்கு அதிக விலையில் டிக்கெட் விற்பார்கள். தோனி இல்லை என்பதால் சேப்பாக்கத்தின் டிக்கெட் வருவாய் குறைய வாய்ப்பிருக்கிறது. அதை ஈடுகட்ட மெண்டாராக தோனி அமர்ந்திருக்கும் பெவிலியனுக்கு அருகே இருக்கும் ஸ்டாண்டுக்கு மட்டும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை போடலாம். வரிசையில் ரசிகர்களை விட்டு தோனியை பார்க்க பார்க்க அப்படியே வெளியே இழுத்து விடலாம்.
மலிவு விலையில் ஒரு மேட்ச்சுக்கு இப்படியாக 50000 தரிசன டிக்கெட்டுகளை ரிலீஸ் செய்தால், சேப்பாக்கம் தனது வருவாயை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதேமாதிரி, சேனல் வியூவர்ஷிப் கம்மி ஆகாமல் தடுக்கவும் ஒரு வழி இருக்கிறது திரையரங்குகளில் படங்களை ரீ ரிலீஸ் செய்வதைப் போல ருத்து தலைமையில் சென்னை ஆடும் கொட்டாவி போட்டிகளின் போது, தோனி மிரட்டிய பழைய போட்டிகளை ரீ டெலிகாஸ்ட் செய்யலாம். உறுதியாக லைவ்வில் நடக்கும் போட்டியை விட ரீ டெலிகாஸ்ட் செய்யப்படும் போட்டிக்கு அதிக வியூவர்ஷிப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த 'வெற்றி Mentor திட்ட'த்தில் வேறு என்னென்ன விஷயங்களை சேர்க்கலாம் என கமெண்ட் செய்யுங்கள்.

















