பெரம்பலூர்: எம்.எல்.எம் பாணியில் மோசடி; ஒரு கிராமமே பல லட்சங்களை ஏமாந்த அதிர்ச்ச...
வேலூர்: இலவச முகாம்... இன்ஸ்டா விளம்பரம்... பெண்ணின் உயிரைப் பறித்ததா `அபூர்வ மூலிகைச் சாறு’?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள குடிபல்லி கிராமம் சென்னராயசுவாமி கோயில் வளாகத்தில் `ஆஞ்சநேயா ஜனசேவா அறக்கட்டளை’ சார்பாக மாதந்தோறும் 11-ம் தேதி கண் பாதிப்புகளுக்கு இலவசமாக மூலிகை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
`நாங்கள் வழங்கும் அபூர்வ சித்த வைத்திய மூலிகைச் சாற்றை கண்களுக்குப் போடுவதால் கிட்டப் பார்வை, தூரப்பார்வை மற்றும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும். கண்ணில் ஏற்படும் புரை மற்றும் சதை வளர்ச்சியும் குணமாகும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் நாள்கள் தள்ளிப்போதல் என எல்லாவற்றையுமே குணமாக்கக் கூடிய ஒரு அபூர்வ சித்த வைத்திய மூலிகைச் சாறு இது. 5 வயது முதல் 100 வயது வரை உள்ள ஆண், பெண் என அனைவரும் இந்த மருந்தை இட்டுக்கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது’ என்று விளம்பரப்படுத்தினர்.
இவர்களின் பேச்சை நம்பி ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். பச்சிலைச் சாற்றை ஒரு துணியால் முடிந்தபடி கண்களில் சொட்டு மருந்தைப்போல விடுகின்றனர். `இது என்ன வகையான மூலிகை’ என்பதைக்கூட பொதுமக்கள் கேள்வியெழுப்பாமல் கொஞ்சமும் யோசிக்காமல் அங்கு சென்று பாதிப்புக்குள்ளாவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கண்களில் பச்சிலை மூலிகைச் சாற்றை விட்டுக்கொண்ட பெண் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பேரணாம்பட்டு அருகேயுள்ள கீழ் ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மனைவி ரமாதேவி (45) கண்களுக்கு பச்சிலை மூலிகை மருந்து விடுவதற்காகத் தனது சகோதரி ஸ்ரீதேவி மற்றும் 20 பேருடன் சென்னராயசுவாமி கோயிலுக்கு நேற்றைய தினம் சென்றனர்.
ரமாதேவிக்கு ஏற்கெனவே உடல்நலன் பாதிப்பு இருந்ததாகவும், கண் பார்வை குறைபாடு மற்றும் ரத்த அழுத்த பாதிப்புக்குச் சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
`சென்னராயசுவாமி கோயிலில் விடப்படும் பச்சிலை மூலிகைச் சாற்றை கண்களில் விட்டுக்கொண்டால், உடலிலுள்ள எல்லா பிரச்னைகளும் குணமாகிவிடும்’ என்று இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ விளம்பரங்களைப் பார்த்து பலரும் நம்பிக்கையாகச் சொன்னதால், ரமாதேவியும் அங்கு சென்றிருக்கிறார்.
மதியம் 1 மணிவரை நீண்ட வரிசையில் காத்து நின்ற ரமாதேவிக்குத் தலைசுற்றலாக இருந்ததால் 100 ரூபாய் டோக்கன் பெற்று 2.30 மணியளவில் கண்களுக்கு மூலிகைச் சாற்றை விட்டுக்கொண்டார். இதையடுத்து, உணவு சாப்பிட்டுவிட்டு மாலை 3.30 மணியளவில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கோட்டைச்சேரி கிராமம் அருகே வந்தபோது, ரமாதேவி திடீரென மயக்கமடைந்தார்.

உடனடியாக அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரமாதேவி இறந்துவிட்டதாகக் கூறினர். இதனால், உடன் சென்றிருந்த உறவினர்கள் பேரதிர்ச்சிக்குள்ளாகினர். பச்சிலை மூலிகை மருந்தை விட்டுக்கொண்டதால்தான் ரமாதேவி இறந்துவிட்டதாகக் கூறி, பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் அவரின் சகோதரி புகாரளித்தார்.
இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீஸார், சென்னராயசுவாமி கோயிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி முகாமை நிறுத்தினர். ரமாதேவியின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், `இயற்கைக்கு மாறான மரணம்’ என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.




















