சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் ...
வேலூர் கம்பன் கழகம் - ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழா!
வேலூர் கம்பன் கழகம் மற்றும் ஊரீசு கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு துவக்க விழாவினைச் சிறப்பாக நடத்தின. விழாவிற்கு வேலூர் கம்பன் கழகத்தின் தலைவரும் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவருமான முனைவர் கோ.வி. செல்வம் தலைமை தாங்கினார்.
விழாவில் முனைவர் கோ.வி. செல்வம் தலைமையுரை பேசியதாவது,
``1965-இல் ஆனந்த விகடன் பத்திரிகை நிருபர் ஒருவர் கண்ணதாசனிடம், “உங்களது இந்தக் கவிதைத் திறமையின் ஆதாரம் எது?” என்று கேட்கிறார். அவர் தயங்காமல் சொன்ன பதில் ‘கம்பராமாயணம்’. கம்பன் இல்லையென்றால் இந்தக் கண்ணதாசன் இல்லை. கம்பனைப் படிக்கவில்லை என்றால் நான் கவிஞன் ஆகி இருக்கமாட்டேன்" என்றார்
கண்ணதாசன் நாத்திகராக இருந்து ஆத்திகரானதற்குக் ஒரே காரணம் கம்பன். அந்தக் காலத்தில் ஒருமுறை கம்பராமாயணத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். எரிப்பதற்காக அனைவரிடமும் கம்ப ராமாயணத்தைத் தந்திருக்கிறார்கள். கண்ணதாசனிடமும் ஒரு பிரதி தரப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அதனை எரிக்க, கண்ணதாசனோ எரிக்கிறதுதான் எரிக்கிறோம், படித்துவிட்டு எரிப்போம் என கம்ப ராமாயணத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரால் புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. படிக்க படிக்க கம்பன் கண்ணதாசனுக்குள் ஆழமாகப் பதிந்தார். கம்பனால்தான் நமக்குக் கவியரசர் கிடைத்தார்.
பேரறிஞர் அண்ணா தனது கட்டுரை ஒன்றில் இப்படிச் சொல்கிறார். ”கண்ணதாசன் வாழும் இக்காலத்தில் ஒருவேளை கம்பன் இருந்திருந்தால் என் கவிதை வாரிசு இவன்தான் என்று உச்சிமோரந்து பாராட்டி உலகத்திறகு அறிவித்திருப்பார்”
காளிதேவியின் கருணையில் உருவானார் காளிதாசன்
கலைமகளின் கடைக்கண் பார்வையால் உருவானார் கம்பர் .
அபிராமி அன்னையின் அருளால் உருவானார் அபிராமிபட்டர்
கண்ணனை உள்வாங்கி உருவானவர் கண்ணதாசன்..
கண்ணதாசனைப் போல் கண்ணனைப் பாடியவர்கள் யாராவது உண்டா?
ஆயர் பாடி மாளிகையில் – புல்லாங்குழல் கொடுத்த – கண்ணா கருமை நிறக் கண்ணா- ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா – நீயும் நானுமா கண்ணா – இன்னும் இன்னும் சொல்லிகொண்டே போகலாம்..

கண்ணதாசனை ஏன் பிறவிக் கவிஞர் என்று சொல்கிறோம் தெரியுமா?
அவர் சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் ‘கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்..' என, வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைக் கூட கவிதை வடிவில் எழுதிப் பார்ப்பார். இதைப் பார்க்கும் அவரின் தாய்.. நாளை என் மகன் ஆயிரமாயிரம் பாடல்களுக்குப் பல்லவி கொடுப்பான் என்று சொல்வாராம். தாய் சொல்லைத் தட்டாதவர் அதனால் தான் வசனம் எழுத வந்தவர் கவிஞனாக மாறி வரலாறு படைத்தார்..
வாழ்க்கையை அவரைப்போல் ரசித்துச் சுவைத்துப் பாடியவர்கள் யாரும் இல்லை..
"வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா..
”நான் போகும் பாதையில் 4000முட்கள் இருக்கின்றன. அவை எல்லாம் நான் போட்டது” என்பார் கண்ணதாசன் . என் வாழ்க்கையில் வரும் அத்தனை இன்ப துன்பங்களுக்கும் நான்தான் காரணம்.. மற்றவர்கள் மீது குறை சொல்லாத அந்தக் குணம்தான் கண்ணதாசன்.
வாழ்க்கையில் அவர் பார்க்காத உயரமும் இல்லை.. துயரமும் இல்லை. பாடல் பதிவுக்குக் கண்ணதாசனை அழைத்துச் செல்வதற்காக தி.நகர் வீட்டில் காலை நேரத்தில் தயாரிப்பாளர்கள் கார்களுடன் வரிசையில் காத்திருப்பார்கள். கண்ணதாசன் அன்றைக்கு யாருடைய காரில் ஏறுகிறாரோ? அந்த நிறுவனத்தின் படத்துக்குத்தான் பாட்டு எழுதப் போகிறார் என்று அர்த்தம். மற்றவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். மீண்டும் மறுநாள் வந்து அதே போன்று காத்துக்கிடப்பார்கள்.
1982 வடிவங்கள் திரைப்படத்தில் ஒரு பாடல்..
"எட்டுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன்" இந்தப் பாடலைக் கவனித்துப் பாருங்கள் .. சிலப்பதிகாரத்தின் இருபெரும் தலைவிகளின் மனநிலையை ஒரே பாடலில் சொல்லியிருப்பார்.
பல்லவியில் கண்ணகியின் கலக்கத்தைக் காட்சிப்படுத்தியிருப்பார்..
சரணத்தில் மாதவியின் மயக்கத்தைக் காட்டியிருப்பார்.
வியாசர் இயற்றிய மகாபாரதத்தை எந்தெந்த மொழியிலோ யார் யாரோ பக்கம் பக்கமாக எழுதினார்கள். ஆனால் நான்கே வரியில் மகாபாரதத்தை எழுதி முடிதவர் நம் கவியரசர்.
"பாஞ்சாலி புகழுக்காக தன் கை கொடுத்தான்..
அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்..
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கு கொடுத்தான்..
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்"..
வார்த்தை விளையாட்டை அவரைப்போல் விளையாட இந்த வையகத்தில் யாருமில்லை.
தேன் தேன் என்று ’பார்த்தேன் சிரித்தேன்’ பாடலில் ஒரு சொட்டுத் தேன்கூட சிந்தாமல் ரசிக்க வைத்தார்!
காய் காய் என்று எழுதி அத்திக்காய் பாடலை ருசிக்க வைத்தார்.
எந்த ஊர் என்றவனே பாடலில் ஊர் ஊராய் நம் உள்ளத்தை சுற்றவைத்தார்..
எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். எண்ணங்கள்தான் நம் வாழ்வை செதுக்கும் உளிகள்.
"உள்ளம் என்பது ஆமை... அதில் உண்மை என்பது ஊமை...
சொல்லில் வருவது பாதி... நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி...
தெய்வம் என்றால் அது தெய்வம்... அது சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டென்றால் அது உண்டு... இல்லை என்றால் அது இல்லை'
எல்லாமே மனம் எடுக்கும் முடிவுகள் தான்..
தமிழ் சினிமா என்றாலே இரண்டு வசனங்கள் இன்றுவரை யாராலும் மறக்க முடியாதவை.

நாடோடி மன்னன் படத்தில் நம் புரட்சித் தலைவர் “என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. ஆனால், என்னை நம்பிக் கெட்டவர்கள் இதுவரை இல்லை” என்பார்.. இந்த வசனத்துக்குச் சொந்தக்காரர் நம் கவியரசர்.
1957 இல் வெளிவந்த மகாதேவி திரைப்படத்தில் பி.எஸ். வீரப்பா பேசும் ”மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி” வசனமும் கவியரசரின் கைவண்ணம்தான் .
மயக்கமா கலக்கமா பாடல்தான் கவிஞர் வாலியை உருவாக்கியது என்பது எல்லோருக்கும் தெரியும். வாலி கண்ணதாசன் பாடல்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
"மூனு தாரம் இருந்தாலும் அவருக்கு தமிழ் தான்யா மூலாதாரம். என்னையா அவரைவிட எத்தனையோ ஆயிரம் பாடல் எழுதியிருக்கேன், ஆனா ஒருதடவை கூட என் கஷ்டத்த / வலியை நினைக்கும்போது என் பாட்டு ஒன்னு கூட என் நியாபகத்துக்கு வருவதில்லை கண்ணதாசன் பாட்டுத்தான் முன்னாடி வருதுய்யா..
தன் பாடல்களில் தத்துவத்தையும் தனித்துவத்தையும் கடை பிடித்தவர் கண்ணதாசன்..

1981இல் இசைஞானி இளையராஜாவும் கலைஞானி கமல் சாரும் ஒரு படத்துக்கு பாடல் எழுத கண்ணதாசனை அழைக்கிறார்கள். கண் தெரியாத ஒரு இசைக்கலைஞனின் காதல் கதை. படத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று குழப்பமா இருக்கு என்று கவிஞரிடம் கமல் சார் சொல்கிறார். உடனே ராஜ பார்வைன்னு வைப்பா என்கிறார் கவிஞர். கமல் சாரின் 100வது படத்திற்குத் தலைப்பிட்டவர் கண்ணதாசன்..
இறந்தவர்களுக்கு எழுதப்படுவது இரங்கல் பா.. உலகில் தனக்குத்தானே இரங்கல்பா எழுதிக் கொண்ட ஒரே நபர் கண்ணதாசனாகத்தான் இருக்கும். அதேபோல தான் வளர்த்த நாய் "சீசர்" இறந்தபோது, அதற்கும் ஒரு இரங்கற்பா இயற்றினார். வளர்ப்பு நாயின் மறைவிற்கும் இரங்கற்பா இயற்றிய முதல் கவிஞர் கண்ணதாசன்தான்.
எம்.எஸ்.வி.க்கும் கண்ணதாசனுக்கும் எப்படிப்பட்ட நட்பு இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இது இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் வந்த பொருத்தம் அல்ல. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து கொண்டதால் வந்த இணக்கம். அவர் எப்படி இசையமைப்பார் என்பது இவருக்கும் இவர் எப்படி எழுதுவார் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும் . ”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” எனும் பாடல் தோன்றியது அந்தப் பின்னணியில் தான்.. கவிஞர் கண்ணதாசனும் எம்எஸ்வியும் ஒரு பாடலை கம்போஸ் செய்வதே அழகான கவிதையாக இருக்கும் என்பார்கள் இந்தக் காட்சியை பலமுறை பார்த்து ரசித்த கமல் சார்,."வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் "சிப்பிஇருக்குது" பாடலாக உருவாக்கியிருப்பார்,
'தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்' என எத்தனையோ விமர்சனங்களுக்கு மத்தியிலும் விடாப்பிடியாய்த் தத்துவங்களைக் கடை பிடித்தவர். கண்ணதாசன்.
"வெயில்காலம் வந்துவிட்டது என்பதற்காக கொக்கு கவலைபடக்கூடாது.
அதோ மழைக்காலம் வருகிறது!”
”மழைக்காலம் வந்துவிட்டது என்பதற்காக நதிகள் ஆா்ப்பரிக்கக் கூடாது.
அதோ வெயில் காலம் வருகிறது”.
வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தெரிந்து தெளிந்தவர் . அதனால்தான்
”மாற்றம் ஒன்றே மானிடத் தத்துவம்” என்று சொன்ன அவரே 'யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதருக்காகவும் நீ மாற வேண்டியிருக்கும் எனச் சொன்னார்..
1961 இல் திமுகவில் இருந்து வெளியேறி தமிழ்த்தேசியக் கட்சியில் இணைந்து திருக்கோஷ்டியூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அதில் தோல்வியடைகிறார். அதை மனதில் வைத்து அன்னை படத்தில் எழுதிய பாடல் தான்,
"புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை ".
”மானுட இனத்தை ஆட்டிவைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதைப்பாடி வைப்பேன்” எனச் சொன்னவர். எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருக்குமான பாடல்களைப் படைக்க கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.
காதலில் தோற்றுப்போய் அவளைக் காணமுடியாமல் தவிக்கும்போது கண்ணீரோடு எல்லோரும் முணுமுணுக்கும் பாடல்…
"கண்கள் இரண்டும் என்று
உன்னைக் கண்டு பேசுமோ!
காலம் இனிமேல் நம்மை
ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ!"
காதலில் வெற்றிடைந்தவர்கள் குதூகலத்தோடு மகிழ்ச்சியில் திளைத்துப் பாட ,
"கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா…..நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா!
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா?"
மற்ற கவிஞர்கள் எல்லாம் வக்கீல்கள் போல வாதாடுவார்கள் .. கண்ணதாசன் மட்டும்தான் நீதிபதியாக நின்று நியாயம் சொல்வார்.
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று"
இந்த இரண்டு வரிகள் போதும்... கண்ணதாசனின் மேன்மையைச் சொல்ல!
”வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்”
- தற்கொலை எண்ணம் தலைதூக்கும் போதெல்லாம் தூரத்தில் இருந்து ஒலிக்கும் கண்ணதாசனின் இந்த பாடல், ஒருவனது தற்கொலை எண்ணத்தையே கொலை செய்துவிடும், அவனை வாழ வைத்துவிடும்.
1964இல் வெளிவந்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் ஆறு மனமே ஆறு எனும் ஒரேபாடலில் 8 திருக்குறள்களை எடுத்தாண்டிருப்பார். அவருக்குத் திருக்குறள் முழுவதற்கும், புதுமையான முறையில் உரையெழுத ஆசை இருந்தது ஆனால், நேரமில்லை முப்பாலில் மூன்றாம் பாலாகிய இன்பத்துப் பாலுக்கு மட்டும் அவர் உரை எழுதியிருக்கிறார். காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் காதலிப்பதாகச் சொல்லிச் சுற்றிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல் அது."
இந்த விழாவில், வேலூர் கம்பன் கழகத்தின் செயலாளர் வெ. சோலைநாதன் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் வேலூர் கம்பன் கழகத்தின் பொருளாளர் அ. திருநாவுக்கரசு, துணைத்தலைவர் கவிஞர் மா.சோதி, இணைச்செயலாளர் வீ. இராசேந்திரன் , துணைச்செயலாளர் மருத்துவர் இனியன் சமரசம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கி. வினோத்குமார், இரா.பா. ஞானவேலு, வி. என். டி. சுரேஷ், முனைவர் ச. இலக்குமிபதி, கவிஞர் சு. சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழியக்கத்தின் பொதுச்செயலாளர் கவியருவி பேராசிரியர் அப்துல்காதர் தலைமையில் "திரை இசைப்பாடல்களுக்குத் தீந்தமிழ் இலக்கியத் தகுதி பெற்றுத் தந்தவை காதல் பாடல்களே! தத்துவப் பாடல்களே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இசைக்கப்பட்ட இசை கச்சேரி நடைபெற்றது.


















