TAPS: `இது ஓய்வூதியத் திட்டமல்ல, சிறு சேமிப்புத் திட்டம்'- ஒரு தரப்பு அரசு ஊழியர...
வேலூர்: கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்; மஃப்ளர் மாட்டி பைக்கில் தூக்கிச் செல்லப்பட்ட சடலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பத்தியாவரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரின் மகன் டேனியல் வல்லரசு (19), வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பி.ஏ பாதுகாப்புத்துறைப் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
வகுப்புப் பிரதிநிதியாகவும் (Class Representative), ஆசிரியர்களிடம் நற்பெயருடன் இருந்து வந்திருக்கிறார் மாணவன் டேனியல் வல்லரசு. கல்லூரி படிப்பிற்காக, வேலூர் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த டேனியல் வல்லரசு, ஊரீஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் ஜூனியர் மாணவன் ஒருவரையும் தன்னுடன் தங்க அனுமதித்திருக்கிறார்.
அதேபோல, ஆரணி இந்திரா நகரைச் சேர்ந்த கிஷோர் கண்ணன் (19) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி (19) ஆகிய 2 மாணவர்களும்கூட ஊரீஸ் கல்லூரியில் பி.ஏ பாதுகாப்புத்துறை இரண்டாம் ஆண்டில்தான், டேனியல் வல்லரசுடன் பயில்கின்றனர்.
இதில், கிஷோர் கண்ணன் சிறு வயதில் இருந்தே டேனியல் வல்லரசுடன் நெருங்கிப் பழகும் நண்பர் ஆவார். கல்லூரி வகுப்பிலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. வகுப்பில் ஏற்பட்ட பழக்கத்தில் பார்த்தசாரதியும் இவர்களுடன் நெருக்கம் ஆனார்.
கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி இருவரும் தங்குவதற்காக வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவிலுள்ள மாடி வீட்டில் வாடகைக்கு அறை எடுத்துக்கொடுத்திருக்கிறார் டேனியல் வல்லரசு.

இந்த நிலையில், டேனியல் வல்லரசுடன் தங்கியிருந்த ஜூனியர் மாணவர் கடந்த டிசம்பர் 25-ம் தேதி சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, டேனியல் வல்லரசும், தனது நண்பன் கிஷோர் கண்ணனுடன் ஆரணியில் உள்ள அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். புதுச்சேரியைச் சேர்ந்த மாணவன் பார்த்தசாரதி மட்டும் தனது வீட்டுக்குச் செல்லாமல், வேலூரிலேயே தங்கியிருந்தார்.
இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு அன்று, பார்த்தசாரதி போன் செய்து இருவரையும் வேலூருக்கு வருமாறு அழைத்திருக்கிறார். டேனியல் வல்லரசும், கிஷோர் கண்ணனுடன் புறப்பட்டு வேலூர் வந்திருக்கிறார். அன்று நள்ளிரவில், டேனியல் வல்லரசை நண்பர்கள் இருவருமே சேர்ந்து இரும்பு ராடால் தாக்கி படுகொலை செய்திருக்கின்றனர்.
இதையடுத்து, டேனியல் வல்லரசுவின் உடல்மீது படிந்திருந்த ரத்தத்தைக் கழுவி சுத்தப்படுத்திய நண்பர்கள் இருவரும், வேறு பேண்ட், சர்ட் எடுத்து உடலுக்கு அணிவித்திருக்கின்றனர். பிறகு, முகத்தை மஃப்ளர் மாட்டி மறைத்து, பைக்கில் நடுவில் அமரவைத்து தூக்கிச் சென்றிருக்கின்றனர். `
பார்ப்பவர்களுக்கு மது மயக்கத்தில் இருப்பதைப்போலத் தெரியவேண்டும் என்பதற்காக, இப்படிச் செய்திருக்கின்றனர். பைக்கில், ஆந்திர மாநில எல்லையோரமிருக்கும் சித்தப்பாறை கிராமத்தின் மலை அடிவாரம் வரை கொண்டுசென்று உடலை வீசிவிட்டு, டேனியல் வல்லரசுவின் செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து தூக்கியெறிந்துவிட்டு, அவரவர் வீடுகளுக்கு இருவரும் சென்றிருக்கின்றனர்.
இந்த நிலையில், டேனியல் வல்லரசுக்கு அவரின் பெற்றோர் நேற்று காலை முதலே போன் செய்திருக்கின்றனர். `அரியலூரில் நடைபெறும் என்.சி.சி கேம்ப்பில் கலந்துகொள்வதற்காக மகன் சென்றிருக்கலாம்’ என்று பெற்றோர் நினைத்திருக்கின்றனர்.
மாலை தொடர்புகொண்டபோதும், போன் சுவிட்ச் ஆஃப்பிலேயே இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு விசாரித்திருக்கின்றனர். `என்.சி.சி கேம்ப் 3-ம் தேதியான சனிக்கிழமைதான் நடக்கிறது’ என்று தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, மகனின் நண்பர்களில் ஒருவரான ஆரணி பகுதியைச் சேர்ந்த கிஷோர் கண்ணனுக்குப் போன் செய்து பெற்றோர் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, நேற்று இரவு 8 மணியளவில், பாகாயம் காவல் நிலையம் விரைந்து வந்த பெற்றோர், மகனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி புகார் மனு அளித்தனர். முதற்கட்டமாகச் சந்தேக கோணத்தில், நண்பன் கிஷோர் கண்ணனைப் பிடித்து விசாரித்தபோது, டேனியல் வல்லரசு கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
இதைக் கேட்டு, பெற்றோரும், போலீஸாரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடலை வீசிய இடத்துக்கு நண்பனை அழைத்துச் சென்ற போலீஸார், டேனியல் வல்லரசுவின் உடலை இன்று அதிகாலை 3 மணிக்கு மீட்டனர். விடியற்காலை 5.30 மணியளவில், உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை முடிந்து, இன்று மாலை 3 மணியளவில், பெற்றோரிடம் மாணவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, கிஷோர் கண்ணனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த போலீஸாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
முதற்கட்ட விசாரணையில், மாணவன் டேனியல் வல்லரசு திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
``தங்களுக்கு விருப்பமான ஒரு மாணவியை `கரெக்ட்’ செய்வதாக டேனியல் வல்லரசு `சேலஞ்சு’ செய்தான். அந்த ஆத்திரத்தில்தான் அவனைக் கொலை செய்தோம்’’ எனக் கிஷோர் கண்ணன் வாக்குமூலம் அளித்திருப்பதாக, முதற்கட்ட தகவல்கள் வருகின்றன.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரிக்குத் தப்பி ஓடிய மற்றொரு மாணவனான பார்த்தசாரதியைப் பிடிக்கவும் போலீஸார் அங்கு விரைந்திருக்கின்றனர். இந்தக் கொடூரச் சம்பவம், வேலூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



















