ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேனுக்கு முன்னாள் ஆஸி. கேப்டன் அறிவுரை!
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேனுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அந்த அணி சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக விமர்சித்தனர்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலிருந்து ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் விலகல்!
ரிக்கி பாண்டிங் அறிவுரை
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஷேனுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை வழங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களைக் காட்டிலும், மார்னஸ் லபுஷேன் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடினமான ஆடுகளத்தில் இந்தியா போன்ற வலிமையான பந்துவீச்சு வரிசை கொண்ட அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், லபுஷேன் சிறப்பாக செயல்படுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
இதையும் படிக்க: அதிகம் ஊதியம் பெறும் ரிஷப் பந்த்! பட்டியலில் முதலிடத்தை இழந்த விராட் கோலி!
இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் விளையாடியதைக் காட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வித்தியாசமானவராக இருந்தார். அவரது பலம் என்னவோ அதில் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாடினார். விராட் கோலியைப் போல லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அவர்களது திறமை மீது கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய பந்துவீச்சாளர்கள் மீது இவர்கள் அழுத்தம் கொடுத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.