"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்...
"10-வது தான் படிச்சிருக்கேன்; வீடு இல்ல" - கேரம் உலக சாம்பியன் காசிமேடு கீர்த்தனா அரசிடம் கோரிக்கை
7-வது கேரம் உலகக் கோப்பை டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6 வரை மாலத்தீவில் நடைபெற்றது.
இந்தியா, இலங்கை, மாலத்தீவு, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என மொத்தம் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்றனர்.

இதில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவிலும் குழு, இரட்டையர், ஒற்றையர் என அனைத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது.
அதிலும், சென்னையின் காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா மூன்று பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரசாந்த் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீனிவாஸ் - அபிஜித் இணை தங்கப் பதக்கம் வென்றது. குழு போட்டியிலும் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கீர்த்தனா - காஜல் குமாரி தங்கப் பதக்கம் வென்றது. மற்றொரு இந்திய ஜோடி காசிமா - மித்ரா இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
மகளிர் குழு பிரிவில் கீர்த்தனா, காஜல் குமாரி, காசிமா, மித்ரா என 4 பேர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
இவற்றில், தமிழக வீராங்கனைகள் கீர்த்தனா 3 தங்கப் பதக்கமும், காசிமா ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கமும், மித்ரா ஒரு தங்கப் பதக்கம் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
அதேபோல் தமிழக வீரர் அப்துல்லா ஆசிஃப் இதே தொடரில் ஸ்விஸ் லீக் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். நேற்று மாலை தமிழகம் திரும்பிய இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்களிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, ``இந்தியாவுக்காக விளையாடியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. SDAT ( Sports Development Authority of Tamilnadu) ரொம்ப உதவி பண்ணாங்க.
இந்த உலகக் கோப்பைக்கு எப்படி நான் போறதுன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல உதயநிதி சார் கூப்பிட்டாரு. ஒரு லட்சம் தருவார்னு நெனச்சேன் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கொடுத்தார்.

அவர் கொடுத்த காசுலதான் நான் போய்ட்டு ஜெயிச்சுட்டு வந்திருக்கேன். முதல்முறையா இந்தியாவுக்காக விளையாடுனது ரொம்பப் பெருமையா இருக்கு.
என்னோட குடும்பம் எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணாங்க. மரிய இருதயம் (அர்ஜுனா விருது வென்றவர்) சார், நாசர் அலிகான் அவர்களுக்கு நன்றி.
உதயநிதி சார் ஜெயிச்சுட்டு வரணும்னு சொன்னாரு. அவர் என்கரேஜ் பண்ணதுல ஜெயிச்சிட்டு வந்தது ரொம்ப பெருமையா இருக்கு.
டீம், டபுள்ஸ், சிங்கிள்ஸ் எல்லாத்துலயும் ஜெயிச்சிருக்கோம். நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். நாங்க ஏழ்மையான குடும்பம், வீட்டு வசதி இல்ல. எனக்கு ஏதாவது ஒரு அரசு வேலை, வீடு கட்டித் தருமாறு அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை வைத்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய காசிமா, ``நானும் கீர்த்தனாவும் 13 வருஷமா ஒரே கிளப்லதான் பயிற்சி எடுத்துட்டு இருக்கோம்.
என்னோட பார்ட்னர் கீர்த்தனா உலகச் சாம்பியனா ஆகியிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நான் சாதிச்சதும் கீர்த்தனா சாதிச்சதும் ஒன்னுதான். யுனிவர்சிட்டி அளவுக்கு கேரம் கேம் கொண்டு போனா, கிரிக்கெட் செஸ் அளவுக்கு கேரமும் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு" என்று கூறினார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பையில் மகளிர் 3 பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.





















