“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” - ஐ....
100 பேர் கொள்ளும் பரிசல்; கஞ்சி தொட்டி; கலவரச் சூழல்... நினைவுகளைச் சுமக்கும் நண்பர்கள்| அணை ஓசை 37
தற்போது மேட்டூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பொறியாளர் திரு.N.P.K. வெங்கடேஷ் இந்த மேட்டூர் அணை தொடர் எழுத உதவி புரிந்தவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் ஆவார். நான்கு வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் அவரை தொடர்பு கொண்டு மேட்டூர் அணை குறித்த விவரங்களை கேட்ட போது பிரிட்டிஷ் மேற்பார்வை பொறியாளர் சி.ஜி.பார்பர் எழுதி வைத்த HISTORY OF CAUVERY-METTUR PROJECT என்ற குறிப்பு நூல் குறித்து அறிந்து அதற்காக மெனக்கெட்டு தேடி அலைந்து அதை பிரதி எடுத்து எனக்கு அளித்து உதவி புரிந்தவர். மட்டுமன்றி மேட்டூரில் பல தசாப்தங்களாக தையல் கடை ஒன்றை நடத்தி வந்த “பெங்களூர் டைலர்ஸ்” உரிமையாளர் திரு.சுகுணசேகரன் என்ற அவரது நண்பரை பேட்டி எடுக்க உதவி புரிந்தார். சுகுணசேகரன் அவர்களின் வயது 86. அவரின் தந்தை திரு.கே.பி.தங்கவேலு.
சுகுணசேகரன் பகிர்ந்த நினைவுகள்
தங்கவேலு மேட்டூர் அணை கட்டுமானத்தின் போது “சார்ஜ்மேன்- மெக்கானிக்கல்” என்ற பராமரிப்பு பிரிவில் பணிபுரிந்துள்ளார். அவருக்கு கீழ் முப்பது லஸ்கர் என்ற உதவியாளர்கள் வேலை பார்த்து உள்ளனர். அப்பாவுக்கு என்னையும் சேர்த்து 12 குழந்தைகள். மேட்டூரில் அப்போது அரசு குடியிருப்புகளை தவிர வேறு எதுவும் இல்லை. ஆரம்பத்தில் மார்க்கெட் பகுதியில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. மேல்மட்ட கால்வாய் மதகுகள் எட்டு மற்றும் கீழ் மட்ட கால்வாய் மதகுகள் ஐந்து மேலும் எல்லீஸ் 16 கண் மதகுகள் நிர்மாணிக்கும் போதும் பராமரிப்பிலும் மற்றும் ‘கோலியாத் கிரேன்’ என்ற மெஷினை இயக்கத் தெரிந்தவராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இவருக்காக ஒதுக்கப்பட்ட ஹையர் கிரேடு மெக்கானிக் குவார்ட்டர்ஸ் (HGM TYPE) என்ற வீட்டுப் பிரிவில் வீடு என் 31 இல் குடியிருந்ததாக நினைவு கூர்ந்தார்.
அணை கட்டுமானத்தின் போது காவிரி ஆற்றை கடக்க பயன்படுத்திய பரிசல் சுமார் 100 பேர் கொள்ளும் வகையில் பெரிதாகவும் வடிவமைத்து பயன்பாட்டில் இருந்திருக்கிறது. பல்வேறு அளவுகளில் பரிசல்களை வடிவமைத்து அப்போது பயன்படுத்தியிருக்கிறார்கள். அணை கட்டுவதற்கு முன்பு காவிரியிலும், கட்டிய பிறகு அணையில் மீன் வளத்தை பெருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. ஜாவா சுமத்ரா நாடுகளில் வசித்து இங்கு திரும்பி வந்த திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட பீட்டர் தேவதாஸ் என்பவரை மீன் துறை பொறுப்பாளராக அரசு நியமித்தது. அவர் மூலம் மீன் வளத்தைப் பெருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அவர் வெளிநாட்டில் இருந்து பலவித ரக மீன் குஞ்சுகளை கொண்டு வந்து இங்கு காவிரி ஆற்றில் மற்றும் அணையில் விட்டு இனப்பெருக்கம் செய்து பெருமளவில் மீன் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுத்துள்ளார். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கெண்டை, கட்லா, இறால், கல்பாஸ் மற்றும் கருமுழிக்கெண்டை போன்ற வகை மீன்கள் காவிரி ஆற்றில் அதிகமாக இருந்திருக்கிறது. நீர்நாய் அப்போது காவிரியில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, காவிரி ஆற்றின் கரையில் திப்புசுல்தானால் கட்டப்பட்ட பழைய கோட்டைக்கு தனது சிறு வயதில் தனது நண்பர்களுடன் சுகுணசேகரன் சென்று வந்ததையும் தற்போது நீரில் அது மூழ்கியதால் முழுவதும் சிதலமடைந்து போய்விட்டதாகவும் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அந்த கோட்டைக்கு அருகில் குகை ஒன்று இருந்தது. இதன் மூலம் எதிரிகளிடமிருந்து சுலபமாக தப்பிக்க இயலும் படி இருந்தது என்று கூறுவார்கள் என்று நாம் சந்தித்த பலரும் கூறியதை போலவே இவரும் கூறினாலும் இந்த குகை இருந்ததற்கு உண்டான சாட்சிகளோ அதிகாரப்பூர்வ தகவலோ நமக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை!
அவரின் வாலிப பருவ வயதில் அங்கிருந்த மலை முகடுகளில் மற்றும் காட்டுக்குள் சென்று தேனீக்களின் கூட்டை கண்டடைந்து தீப்பந்தம் மூலம் எரித்து அந்த வெப்பத்தால் கூட்டில் தேனீக்களை விரட்டி தேன் எடுத்துக் குடித்த நினைவுகளை பகிர்ந்தார் சுகுணசேகரன். அந்தக் காலங்களில் அவருக்கு நினைவு தெரிந்து மீன் ஒரு கிலோ ரூபாய் ஆறு என்ற விலையில் விற்கப்பட்டுள்ளது. 1962 இல் தனது தந்தை இறந்தார் என்றும் கூறி தனது பழைய நினைவுகளில் மூழ்கினார்.

அவரது தந்தை தங்கவேலு 1899 இல் பிறந்தவர். ஆரம்பத்தில் K.G.F எனப்படும் கோலார் தங்க வயலில் சுரங்கப் பிரிவில் (TUNNEL) மெக்கானிக்காக வேலை பார்த்தவர். பின்னர், மேட்டூர் வந்து அணை கட்டுமானத்தில் பணிபுரிந்து இருக்கிறார். அவரிடம் வேலை பார்த்த ‘முழுமா நாராயணன்’ என்ற உதவியாளர் ஆற்றிலும், அணையிலும் தண்ணீருக்குள் மூழ்கி சென்று வெறும் கைகளால் மீன் பிடித்து வரும் திறமையை பெற்றவராக இருந்துள்ளார். சுகுணசேகரன் இவருடன் அணையிலும், ஆற்றிலும் விளையாடி கழித்த நினைவுகளை கூறி மகிழ்ந்தார். தற்போதைய காலகட்டத்தில் 2000 பரிசல்களுக்கு மேல் மீன் பிடிக்கும் லைசென்ஸ் பெற்று வலை போட்டு மீன் பிடிக்கிறார்கள்.
சுகுணசேகரன் பெங்களூர் நகரம் சென்று தையற்கலை கற்று திரும்பி வந்து மேட்டூரில் “பெங்களூர் டைலர்ஸ்” என்ற கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகன் பொறியியல் பட்டதாரி தற்போது குவைத்தில் உள்ளார். இரண்டு மகள்கள். ஒருவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பொறியாளர் மற்றொருவர் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முக்கிய பதவியில் உள்ளார். இந்த மூன்று குழந்தைகளையும் மேற்படிப்பு படிக்க வைக்க அவருடைய தையல் கடை வருமானம் போதாமல் இருந்திருக்கிறது. ஆனால் கடன் வாங்கி இருவரையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.
சுகுணசேகரனின் நண்பர் ஒரு நாள் ஒரு மஞ்சப்பையுடன் அவரது வீட்டுக்கு வந்து தனது ரிட்டயர்மென்ட் மூலம் வந்த பணம் ரூபாய் 3 லட்சத்தை அவர் கையில் கொடுத்து கடனை முதலில் அடை என்று அவருக்கு உதவி புரிந்ததை கண்ணீர் மல்க கூறி உணர்ச்சிவசப் படுகிறார் சுகுணசேகரன். அந்த காலத்தில் இது பெரிய தொகை அல்லவா? இப்போது நல்ல நிலையில் அவர் இருந்தாலும் ‘ஜார்ஜ் ஜோசப்’ என்ற அந்த நண்பரும் இவரும் முதல் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். ஜார்ஜின் தந்தை பிரிட்டிஷார் ஆரம்பித்த புகழ்பெற்ற ‘மேட்டூர் பியர்ட்செல்’ (METTUR BEARDSELL LTD) என்ற நூற்பு மற்றும் ஜவுளி ஆலையில் மின் பொறியாளராக வேலை பார்த்தவர்.
“வாழ்வில் எனது மறக்க முடியாத நண்பர் ஜார்ஜ் ஜோசப். அவர் மறைந்து விட்டார். ஆனால் அவரின் நினைவுகளும், தக்க சமயத்தில் காலமறிந்து அவர் ஆற்றிய உதவியும் எப்போதும் என் நெஞ்சில் குடியிருக்கும்” என்கிறார் சுகுணசேகரன். காவிரி ஆற்று நீரைப் போல வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. பலரது வாழ்க்கையும் இப்படித்தான்! அணை கட்டுமானத்தின் போது எனது தந்தைக்கு வாழ்வளித்தது இந்த காவிரி. பிறகு மக்கள் தொகை அங்கே அதிகமான போது தையல் தொழில் மூலம் எனக்கும், என் குடும்பத்துக்கும் இந்த காவிரியும், அணையும் பாதுகாப்பு அளித்தது என்று நன்றி பாராட்டுகிறார். அணை கட்டுமான பசுமையான நினைவுகளில் இவரது வாழ்க்கையும் முக்கியமான ஒன்று.
இவர் போன்று பலரது வாழ்க்கையில் காவிரியும், மேட்டூர் அணையும் பெரும் பங்கு வகித்தது உண்மை!
சம்மனசு நாதன் மற்றும் புலவர் அந்தோணிசாமி
நாம் மீண்டும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டத்தில் உள்ள மார்ட்டள்ளி, கௌதள்ளி, ஜாகேரி போன்ற இடங்களுக்கு இப்போது பயணிப்போம். மாதேஸ்வரன் மலைக்கு மேற்கே மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மார்ட்டள்ளி கிராம மக்களை குறித்து நாம் ஏற்கனவே பகுதி எண் 17-ல் வாசித்திருப்பது நினைவிருக்கலாம். அந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ‘சம்மனசு நாதன்’ தனது 94வது வயதிலும் நமக்கு பல விதங்களில் உதவி செய்தார். கொள்ளேகால் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கும் நம்மை அவரே முன்னின்று வழி நடத்திச் சென்றார். 2001 மக்கள் தொகை ‘சென்சஸ்’ படி மார்ட்டள்ளியின் மொத்த மக்கள் தொகை 13182, கௌதள்ளியின் மக்கள் தொகை 8433. இந்த கிராமங்களில் இன்றளவும் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் மேட்டூரை அடுத்த காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களான ஞாயம்பாடி, சாம்பள்ளி மற்றும் அருகில் உள்ள பல கிராமங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.
நாம் இப்போது குறிப்பிடும் சம்மனசுநாதன் ஐயா அவர்கள் ஞாயம் பாடி கிராமத்தில், அணை நீர் தங்கள் வீடுகளை ஆக்கிரமித்த போது அங்கிருந்து வெளியேறி தங்கள் உறவினர்கள் ஏற்கனவே மார்ட்டள்ளி கிராமத்தில் வசித்து வந்ததால் அங்கு புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் இவர் போன்ற இவரது பல உறவினர்களும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள். மார்ட்டள்ளி கிராமம் சென்ற பிறகு ஆசிரியராக பணியை துவக்கி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றவர். ஏறத்தாழ மேட்டூரில் இருந்து புலம்பெயர்ந்த அனைவரையும் நன்கு அறிந்தவர்.

மிகுந்த தன்னம்பிக்கையும், அயராத உழைப்பையும் நல்கி, நல்ல ஆசிரியராக புகழ்பெற்றவர். இந்த வயதிலும் ‘கீபோர்டு’ (KEY BOARD) அருமையாக வாசிக்கிறார். இவரே பாடல்களை எழுதி இசையமைக்கும் வல்லமை பெற்றிருக்கிறார். உலக விஷய ஞானம் கொண்டவர். தனது 94 வருட வாழ்க்கையையும் நம்மிடம் பேசிவிட்டார் என்ற அளவுக்கு பல விஷயங்களை பரிமாறிக் கொண்டார். இவரது மனைவி காவிரி கரையோர கிராமம் ஞாயம்பாடியிலிருந்து மார்ட்டள்ளிக்கு குடிபெயர்ந்தவர்.
19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மெட்ராஸ் மாகாணத்தில் நிலவிய பஞ்சம் மக்களை மதம் மாற வைத்தது. புலம்பெயர வைத்தது. ஆனால், கொள்ளேகால் மாவட்ட கிராமங்களில் தமிழ் மக்கள் உழைத்த உழைப்புக்கு காலம் செல்ல செல்ல நல்ல பலன் கிடைத்தது என்கிறார் இவர். காடழித்து நாடாக்கும் முயற்சியில் தமிழ் மக்களுக்கு நிலங்கள் கிடைத்தன. உழுது சீராக்கி விவசாயம் செய்து முதலில் பஞ்சத்திலிருந்து மீண்டு பின்பு தன்னிறைவை மக்கள் அடைந்தனர். இன்று அவர் தம் வாரிசுகள் கல்வியில் சிறந்து பல்வேறு வேலைகளில் நன்கு சம்பாதிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிகின்றனர். ஒரு விதத்தில் புலம் பெயர்ந்து வேறு இடத்திற்கு வந்ததில் நல்லதே நடந்திருக்கிறது என்று நேர்மறையாக கருத்துக்களை தெரிவிக்கிறார் இவர்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் வேற்று மொழி பேசும் இங்குள்ள மக்கள் தமிழ் மக்களைக் கண்டு சற்று பொறாமை அடைந்தாலும் நாளடைவில் அது நட்பாக மாறியது. அதே சமயம் சுதந்திரத்திற்கு பிறகு காவிரி நதிநீர் பிரச்சனை தலை தூக்கிய போதெல்லாம் மாநில எல்லையில் வசித்து வந்த இந்த மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டது. இவர்களில் பலர் பலிகடா ஆனார்கள். பலர் இந்த இடத்திலிருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடினர். அந்த கலவர சூழ்நிலைகளில் கிராமத்தைக் காக்கும் பொருட்டு ஆண்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் காவல் காத்தனர். குழந்தைகள், பெண்களை வீட்டுக்குள் வைத்து பத்திரமாக பூட்டி விட்டு வெளியில் ஆண்கள் காவல் காத்த தினங்கள் ஏராளம். ஆனால், அதைப் போல பிரச்சினைகள் தற்போது பல வருடங்களாகவே இல்லை. எல்லோருக்கும் ‘மெச்சூரிட்டி’ வந்திருக்கிறது என்கிறார் சம்மனசுநாதன். இப்போது இரண்டற கலந்து எந்த பிரச்சனைகளும் இன்றி ஒற்றுமையாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். போற்றத்தக்க அளவில் இவர்களது உறவு பின்னிப் பிணைந்து உள்ளது. 1947 சுதந்திரம் அடைந்த பிறகு மாநில பிரிப்பு நடந்த போது கொள்ளேகால் மாவட்டம், கர்நாடக மாநிலத்தோடு இணைக்கப்பட்டது. இந்த பகுதி மக்கள் அனைவரும் கர்நாடக மாநில மக்களாக கருதப்பட்டாலும் தொப்புள் கொடி உறவு மேட்டூரோடு தான் இணைந்து இருக்கிறது என்று கூறலாம். அங்கு உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சேவை புரியும் பங்கு தந்தையர் அனைவருக்கும் சம்மனசுநாதன் நன்கு அறிமுகமானவர்.
கொம்புதூக்கி, கொக்குவாரை, தொட்டனை, தோகரை போன்ற 4 ஊர்களில் பெரும்பாலானோர் ‘லிங்காயத்’ சமூக மக்கள். ‘சோளகர்’ என்ற சமூகத்தினர் பொன்னாச்சி என்ற கிராமத்தில் வசிக்கிறார்கள். மலை சார்ந்த பகுதிகள் இவை என்று பூகோளரீதியான விஷயங்களையும் எடுத்துரைத்து நம்மிடம் காண்பித்தார்.
ஒரு சமயத்தில், மார்ட்டள்ளி பகுதிகளுக்கு குடி பெயர்ந்த மக்கள் பெரியம்மை பாதிப்பால் மிகவும் துயரமுற்றனர். நிமோனியா காய்ச்சல் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தியது. இவற்றிலிருந்து எல்லாம் உயிர் தப்பி பிழைத்த குடும்பங்கள் தான் இன்று நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். முன்னர் இங்குள்ள மக்கள் ஆரியம், தினை, குதிரைவாலி(கோராலி), சாமை, பனிவரகு போன்றவற்றை உணவாகக் கொண்டனர். அவரைக்கொட்டை குழம்பு எப்போதும் எல்லோருக்கும் ஏற்ற உணவாக இருந்திருக்கிறது. இப்போது உணவு பழக்கங்கள் இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு மாறியிருக்கிறது.
மார்ட்டள்ளி கிறிஸ்தவ தேவாலயம் ஆரம்பத்தில் நிறுவப்பட்டு அதிலிருந்து 120 பாதிரியார் மற்றும் 250 சிஸ்டர்ஸ் என்னும் அளவுக்கு இதுவரை அங்கிருந்து பயிற்சி எடுத்து வெவ்வேறு இடங்களில் தேவாலயங்களில் பணி மற்றும் சேவை புரிந்து வருகின்றனர். இவரின் மருமகன் திரு செல்வராஜ் என்பவர் ஆசிரியராக உள்ளார். அவரும் எல்லா இடங்களுக்கும் நம்மோடு வந்து உதவி புரிந்தார். இவர் ஹனூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்.
மாதேஸ்வரன் மலை வழியாக சாலை அமைத்தது சுதந்திரத்திற்கு வெகு காலத்திற்கு பிறகு. ஆனால் 1920 - 1940 கால கட்டங்களில் மார்ட்டள்ளியில் இருந்து கொளத்தூர் சந்தைக்கு வியாழன் மதியம் கிளம்பி மாட்டு வண்டியில் மக்கள் செல்வார்கள். ஒரே சமயத்தில் மொத்தம் 30 வண்டிகளுக்கு குறையாமல் செல்லும். எல்லா மாட்டு வண்டிகளிலும் லாந்தர் விளக்கு கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். மலை வழியே பாலாறு ஆற்றின் கரையோரமாக காட்டின் வழியே வண்டிகள் செல்லும். பாலாறு காவிரியில் கலக்கும் இடத்திலிருந்து தண்டா வழியாக கொளத்தூர் சென்றடையும். வெள்ளியன்று நடைபெறும் சந்தையில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அன்று இரவு கொளத்தூரில் இருந்து மார்ட்டள்ளி ஊர் திரும்புவோம். மலைக்காற்று வீச, லாந்தர் விளக்கு வழி காண்பிக்க வண்டியின் கீழே வெளிச்சம் பரவி மாட்டுவண்டிகள் வரிசை செல்ல, மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ஓசை தாலாட்ட, மனிதர்கள் பெரும்பாலும் வண்டியிலேயே தூங்கி விடுவார்கள். நன்கு பழகிய பாதை என்பதால் மாடுகள் சீராக நடந்து சனிக்கிழமை விடியற்காலை வண்டிகளை ஊர்கொண்டு வந்து சேர்த்துவிடும். அது ஒரு காலம்” என்று மோட்டு வளைவை பார்த்தபடி பழைய நினைவுகளில் ஆனந்தமாக மூழ்கினார் சம்மனசு நாதன்.
“இரவில் காட்டுப் பகுதியில் ஓடைகள் குறுக்கிடும் பகுதிகளில் சில முறை யானைகள் வழிமறிப்பதை அனுபவித்து இருக்கிறோம். ஆனால், இதுவரை எங்களில் யாரையும் யானைகள் எதுவும் தொந்தரவு செய்ததில்லை. அவை பாட்டுக்கு தண்ணீர் குடித்துவிட்டு சென்று விடும்” என்று நமக்கு திகில் ஊட்டும் தருணங்களை இயல்பாக பகிர்ந்து கொண்டார். “யானைகளால் நமக்கு எதுவும் தொந்தரவு இல்லை. மனிதர்கள்தான் யானைகளை எதிரிகளாக பார்க்கும் மனோபாவம் அதிகரித்துள்ளது” என்று யதார்த்த உண்மைகளை பகிர்ந்தார்.
காவிரி கரையோர கிராமங்களில் பஞ்சம் ஏற்பட்ட போது கஞ்சி தொட்டி திறந்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளனர் முக்கியமான சில குடும்பத்தார். மேட்டூர் காவிரி கரை ஞாயம்பாடியிலிருந்து ஆரம்ப காலத்தில் நான்கு குடும்பங்கள் முதலில் புலம்பெயர்ந்து வந்ததாகவும், அதை தொடர்ந்து பல குடும்பங்கள் மார்ட்டள்ளிக்கு வந்தனர் என்றும் தன் நினைவுகளை பகிர்ந்தார். பெரும்பாலான வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இவர்களை, கிறிஸ்தவ மதத்திற்கு மத மாற்றம் செய்தவர் வில்லியம் பிரதர் என்ற பிரெஞ்சு பாதிரியார். அவரின் கல்லறை இப்போது மைசூர் அருகில் சாம்ராஜ் நகரத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.
அந்தக் காலங்களில் ஊர்களில் பிரச்சனை என்றால் ஊருக்கு நியாயம் பேச போனவர் ஊர் கவுண்டர். மணியக்காரர் மற்றும் கோல்காரர் போன்ற கிராம பதவிகளில் உள்ள பெரிய மனிதர்கள் கஞ்சித் தொட்டி திறந்து மக்களை காப்பாற்றி உள்ளனர். காவிரி கரையோர கிராமங்களில் விளையும் மிளகாய் வெகு பிரசித்தம், இன்னமும் கூட! பின்னாளில் ஞாயம்பாடியிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் கொள்ளேகால் மாவட்டத்தில் ஜல்லி பாளையம், ஜக்கள்ளி, தோமையார் பாளையம், பிரகாஷ் பாளையம், ஜாகேரி, புஷ்பகிரி, ஜம்பனள்ளி, மரியமங்கலம் மற்றும் மார்ட்டள்ளி உட்பட பல ஊர்களில் நிரந்தரமாக தங்கி செட்டில் ஆனார்கள்.
ஜாகேரி என்ற இடம் சிவனசமுத்திரம் அருவி விழும் இடத்துக்கு அருகில் உள்ளது. அங்கே திரு சம்மனசுநாதன் அவர்களின் நண்பர் திரு புலவர் அந்தோணிசாமி என்பவரை சந்தித்தோம். மேற்கண்ட இருவரும் நீண்ட நாள் நண்பர்கள். பல வருடங்கள் கழித்து நம்முடன் வந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கண்களில் ஆனந்த கண்ணீருடன் ஒருவரை ஒருவர் தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர். தனது மனைவி, மகன்கள், பேரக்குழந்தைகளுடன் முக்கியமாக மாடு, ஆடு, கோழி என எல்லா சொந்தங்களுடன் விவசாயம் நடத்தி நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் புலவர். சிறுவயதிலிருந்து கவிதைகள் புனைவதில் வல்லவர். நோட்டுப் புத்தகத்தில் அவர் எழுதிய பல கவிதைகளை நமக்கு காண்பித்து மகிழ்ந்தார். விவசாயம் தான் முக்கியம் மற்றதெல்லாம் அப்புறம்தான் என்று புன்னகைத்தார். ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஒரு சிறிய குன்று போல் உள்ள இடத்தின் மேல் உள்ளது அவரது வீடு. ஆஹா! என்ன ஒரு அற்புதமான இடம்.
“உறவுகள் வளர்ந்து கொண்டே இருந்தது. நான் கொஞ்சம் சுயநலமாக ஒரு புத்தகம் போல தயாரித்து வைத்தேன். கவிதைகளை அவ்வப்போது அதில் எழுதி வைத்தேன். கவிதைகளை புத்தகம் ஆக்கி இருக்கலாமே என்ற கேள்விக்கு “கொள்கைகள் மட்டும் இருந்தால் போதாது, ஐயா! இதைப்போல கலைகள் குடும்ப வாழ்க்கைக்கு நேராக நமக்கு உதவாது. இதை முழு நேர தொழிலாக வைக்க இயலாது. உங்களுக்கு தெரியுமா? காரல் மார்க்ஸின் குழந்தை இறந்த போது இறுதி சடங்கு செய்ய அவரிடம் அப்போது காசு இல்லை. கொள்கைகளையும், நடைமுறை வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. இது எனது கருத்து” என்றார் புலவர் அந்தோணிசாமி.
“எனக்கு கன்னட மொழியும் தெரியும், எழுத்தில் பெயர் வாங்க வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்பட்டதில்லை. ஆனால் தமிழின் தொடர்பு விட்டுப் போகாமல் இருக்க தமிழில் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஞாயம்பாடியில் இருந்த தொடர்புகள் தற்போது எனக்கு இல்லை. இங்குள்ள உறவுகள் சவேரியார் பாளையம், மாசிலாபாளையம் போன்ற இடங்களில் இருந்தும் வந்து செட்டில் ஆகி இருக்கின்றனர். கொளத்தூருக்கு அருகில் உள்ள பூமனூர் மற்றும் ஞாயம்பாடி கிராமங்களில் இருந்து இங்கு வந்தவர்கள் தான் ஏராளம்” என்றார்.

“நாங்கள் பூர்விகமாக காவிரி ஆற்றங்கரை ஓரம் உள்ள குமாரபாளையம் ஊரைச் சேர்ந்தவர்கள். எனது 2 வயதிலிருந்து 18 வயது வரை அங்கே நெசவுத்தொழிலைக் கற்றேன். தறி ஓட்டுவேன், வார்ப்பு தயார் செய்வேன், ஸ்பின்னிங் மில் வேலை தெரியும். என் அப்பாவுக்கு நிலங்களில் விவசாயம் செய்ய வேண்டும் என்று பேரவா! அப்போது எங்கள் குடும்பத்தில் சேர்த்து வைத்த பணம் ரூ2800/- ஐ அவர் கையில் கொடுத்து அனுப்பினோம். ஜாகேரி வந்து நிலத்தை தயார் செய்தார். பின் நாங்களும் இணைந்தோம். கடும் உழைப்பு. இன்று நிம்மதியாக எனக்குப் பிடித்த விவசாயத்தை செய்து கொண்டிருக்கிறேன்” என்கிறார்.
“காவிரி கரையோர வாழ்க்கை அற்புதம். நான் சுடுதண்ணீரில் ஒருமுறை கூட நீராடியதில்லை. ஓட்டமாக ஓடி வந்து காவிரியில் ‘டைவ்’ அடித்து குளிப்பதே அன்றாட பழக்கம். இங்கே ஜாகேரி வந்த பிறகு ‘முதியோர் கல்வி திட்டத்தில்” வயதில் பெரியவர்களுக்கு மாலையில் பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையும் செய்தேன். சிறு வயதில் தறி ஓட்டும் போது புத்தகத்தை தறி மேல் வைத்து படித்துக்கொண்டே தறியும் சேர்த்து ஓட்டுவேன்” என்றார்.
திருக்குறள் நூலின் மீது அளவற்ற பற்று உடையவராக உள்ளார். தொடர்ந்து பல நூல்களை வாசிக்கிறார். ஒரு மகன் வாடிகன் சிட்டி, கொலம்பியா போன்ற நாடுகளில் பணி செய்துவிட்டு தற்போது ஸ்பெயினில் ‘மாட்ரிட்’ நகரில் பணிபுரிந்து வருகிறார்”.
ஜாகேரியில் உள்ள இவரது தோட்டத்திலிருந்து சிவனசமுத்திர அருவி வெகு அருகில் உள்ளது. காவிரியில் மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக உள்ள போது அருவியில் நீர் கொட்டும் பேரோசை இவரது வீட்டிலிருந்து நன்கு கேட்கும் என்கிறார். ஒரு மழைக்காலத்தில் இங்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற அவா ஏற்படுகிறது.
காவிரியின் ஓசை மக்களின் வாழ்க்கையிலும் இதுபோன்று நல்லோசையாக இசைப்பது இனிதல்லவா? மேலும் பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு



















