செய்திகள் :

1977: கோட்டை விட்ட காங்கிரஸ்; தேசியக் கட்சிகளை காலி செய்த மாநிலக் கட்சிகள்! | அரசியல் ஆடுபுலி 01

post image

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால்... திமுக – பாஜக கூட்டணிகூட உருவாக வாய்ப்புள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை அதிமுகவின் சார்பாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது கட்சியை திமுகவுடன் இணைக்கப் போகிறார்.

இது போன்ற செய்திகள் அரசியல் பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் நடக்குமா?, இது சாத்தியமா? என்று நாமும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருப்போம். ஆனால் , அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் எதுவும் சாத்தியம். ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன.

அரசியல் ஆடுபுலி
அரசியல் ஆடுபுலி

காங்கிரஸை எதிர்த்து தொடங்கிய திமுக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், திமுக – அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தேர்தல் அரசியலில் பல திருப்பங்களை உண்டாக்கியுள்ளன. 

கூட்டணிக் கணக்குப் போட்டு தேர்தல் கணக்கில் கோட்டை விட்ட தேசியக் கட்சிகள், 1977 தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தலைதூக்கவே முடியவில்லை.

தேசியக் கட்சிகளை ஓடவிட்டு பெரும் திருப்பத்தைத் தந்த தேர்தல் 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல்!

தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்களாக இருந்த, மூதறிஞர் ராஜாஜி 1972-ம் ஆண்டு மறைந்தார். ஈ.வெ.ரா.பெரியார் 1973-ம் ஆண்டு மறைந்தார். பெருந்தலைவர் காமராஜர் 1975-ம் ஆண்டில் மறைந்தார். பேரறிஞர் அண்ணா 1969ஆம் ஆண்டிலேயே மறைந்திருந்தார்.

பெரும் ஆளுமைகள் இல்லாத அரசியல் வெற்றிடத்தை, கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் நிரப்பியிருந்தனர். 

அப்படியான சூழ்நிலையில்தான், இந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட நெருக்கடி நிலையைக் கடந்து, 1977இல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி 1976-ம் ஆண்டு கலைக்கப்பட்டதால், 1977இல் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலும் நடைபெற்றது. 

அரசியல் ஆடுபுலி
அரசியல் ஆடுபுலி

இந்திரா காந்தியை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் எதிர்கட்சிகளோடு கூட்டணி சேர்ந்தது. பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் ஸ்தாபன காங்கிரசோடு இணைந்து ஜனதா கட்சியாக மாறின. ஜனநாயக காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டது.

1977 மார்ச் 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், திமுக, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் எதிரெதிராகப் போட்டியிட்டார்கள்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 18, இந்திரா காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களில் வென்றனர்.

திமுக கூட்டணியில் திமுக 1, ஜனதா (ஸ்தாபன காங்கிரஸ்) 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

தேர்தல் நேரத்தில் வெளியான சர்காரியா கமிஷனின் இடைக்கால அறிக்கையும், புதிதாக கட்சி தொடங்கிய எம்ஜிஆரின் செல்வாக்கும் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களாக கூறப்பட்டது. வடமாநிலங்களில் நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனதா கூட்டணி பெருவெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக வந்திருந்தது. ஆனாலும், ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.

தென் மாநிலங்களில் செல்வாக்கோடு இருப்பதாக காங்கிரஸ் நினைத்துக் கொண்டது. தன்னால்தான் காங்கிரசும் வெற்றி பெற்றது என்று எம்ஜிஆர் எண்ணினார். மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை உண்டாக்கின. 

அதனால், 1977 ஜூன் 12 மற்றும் 14 ஆகிய நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் கூட்டணிகள் சிதறிப்போயின.

எம்.ஜி.ஆர் - கருணாநிதி

திமுக அணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக பக்கம் தாவியது. அதிமுக அணியில் இருந்த இந்திரா காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது. திமுக அணியில் இருந்த ஜனதா கட்சியும் தனித்தே களம் கண்டது.

மத்தியில், மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்றதால், ஜனதா கூட்டணியை பகைத்துக் கொள்ள வேண்டாமென, காங்கிரஸ் கட்சியை எம்ஜிஆர் கழட்டி விட்டதாக கூறுவார்கள். 

திமுகவுக்கு ஒரு எம்பி மட்டுமே இருந்த நிலையில், ஜனதா கட்சி 3 எம்பிக்களை வென்று இருந்தது, மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்ததாலும் திமுக கூட்டணி வேண்டாமென ஜனதா கட்சி தவிர்த்துவிட்டது. திமுகவோடு இருந்தால் வெற்றி கிடைக்காது என்பதைக் கணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக பக்கம் ஒதுங்கிய நிலையில், அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும், கட்சித் தொடங்கியது முதல் துணையாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டுச் சேர்ந்து விட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக, ஜனதா கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி உருவானது.

எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக, பாலசுப்பிரமணியம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பி.கே.மூக்கையாத்தேவர் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, கே.எம்.காதர் முகைதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி ஒரு கூட்டணியாக இருந்தனர்.

மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்துடன், மணலி கந்தசாமி, ஏ.கே.சுப்பையா ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கூட்டணியில் இருந்தது. கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் திமுகவை ஆதரித்தது.

ஜி.கருப்பையா மூப்பனார் தலைமையிலான இந்திரா காங்கிரஸ், கல்யாணசுந்தரம் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது.

பழைய காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் உடன், பாரதிய லோக்தளம், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சிகள் இணைந்து உருவான கூட்டணியே ஜனதா கட்சி என்பதால், மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி நம்பிக்கையோடு தமிழகத்தில் தனித்து களம் கண்டது.

எம்.ஜி.ஆர்

அதிமுகவும், காங்கிரஸும் திமுகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்கு சேகரித்தனர்.

திமுகவும், ஜனதாவும் காங்கிரசுக்கு எதிராக, நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி பரப்புரை செய்தார்கள்.

காங்கிரஸ் மீது நெருக்கடி நிலை, மிசா சட்டத்தில் தலைவர்கள் கைது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும்,  திமுக மீது எம்ஜிஆரும், கம்யூனிஸ்டுகளும் எடுத்து வைத்த ஊழல் புகார்களும், கருணாநிதிக்குப் பின்னர் மு.க.முத்து வருகை என்கிற வாரிசு அரசியல் பிரச்னைகளும் 1977 தேர்தலில் பிரதானமாக பேசப்பட்டது.

நெருக்கடி நிலையில் கைதான திமுகவினர் மீதான அனுதாபத்தை விட, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் மீதான அனுதாபம் கிராமப்புறங்களில் அதிகளவு எதிரொலித்தது.

மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகின.

தாரமங்கலம் தொகுதியில் 19 வாக்குகள், திருமயம் தொகுதி 57 வாக்குகள், உதகமண்டலம் 129 வாக்குகள், கூடலூர் தொகுதி 129 வாக்குகள், மேலூர் தொகுதி 156 வாக்குகள், நாகர்கோவில் தொகுதி 193 வாக்குகள், நாங்குநேரி தொகுதி 204 வாக்குகள், காரைக்குடி தொகுதி 240 வாக்குகள், சங்கரன்கோவில் தொகுதி 337 வாக்குகள், கோவில்பட்டி தொகுதி 397 வாக்குகள், திருப்பத்தூர் தொகுதி 341 வாக்குகள், ஆத்தூர் தொகுதி 347 வாக்குகள், தாம்பரம் தொகுதி 426 வாக்குகள் என்று 103 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்த வாக்கு வித்தியாசம், வெறும் ஐயாயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே இருந்தன. 

காங்கிரஸ்

முதன்முதலாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்ட எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, 30.37 சதவீத வாக்குகளைப் பெற்று, 130 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

ஆளுங்கட்சியாக இருந்து கலைக்கப்பட்ட கருணாநிதி தலைமையிலான திமுக 24.89 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் 48 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

ஜனதா கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தன (16.66% வாக்குகள்), தேசியக் கட்சியான காங்கிரஸ் 27 இடங்களை மட்டுமே பிடித்து, 17.51 சதவீத வாக்குகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக இரு கட்சிகளின் கூட்டணியே முதல் இரண்டு இடங்களை வெல்ல முடிகிறது.

இந்திய விடுதலைக்குப் பின்னர், தமிழ்நாட்டு அரசியலில், தேசியக் கட்சியான காங்கிரஸும், திராவிடக் கட்சியான திமுகவும் எதிரும் புதிருமாக இருந்த நிலையை மாற்றி அமைத்தது 1977 சட்டமன்ற பொதுத் தேர்தல். 1952 தேர்தல் முதல் தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தேர்தல் களம் 1977 தேர்தலுக்குப் பின்னர் மாநிலக் கட்சிகளின் வசம் வந்தது. 

இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்தோம் என்று பெருமை பாராட்டிய இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்துதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது. 

(தொடரும்)

'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02

தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது ... மேலும் பார்க்க

"நாங்கள் கூட்டணிக்கு செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள்" - கூட்டணி குறித்து டிடிவி.தினகரன்

பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் ... மேலும் பார்க்க

தமிழே உயிரே! | உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு! | மொழிப்போரின் வீர வரலாறு – 4

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 41965-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ‘இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருக்கும்’ என்ற சட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அற... மேலும் பார்க்க

"ஜல்லிக்கட்டில் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; எந்தத் துறையில் பணி?

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.... மேலும் பார்க்க

அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். EPSஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்த... மேலும் பார்க்க