ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவைக் கரம்பிடித்த நடிகை மிருணாளினி ரவி - வைரலாகும் ப...
2 கிலோ தங்கம் கொள்ளை; எதிர்கடைக்காரரின் மாஸ்டர் பிளான்; முன்னாள் ஊழியர் உட்பட ஐவர் சிக்கிய பின்னணி!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் சாலா பகுதியில் 'வைஷ்ணவி ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் தங்கம் சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வருபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தகுமார். கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு, 250 பவுன் (சுமார் 2 கிலோ) பழைய தங்கத்தைத் தனது தோள்பையில் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் அருகிலுள்ள வீட்டிற்குப் புறப்பட்டார். அவர் கடையிலிருந்து கிளம்பிய மூன்று நிமிடங்களுக்குள்ளாக, பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல், நந்தகுமாரின் தோள்பையைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் குறித்து நந்தகுமார் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், "என் கடைக்கு எதிரே உள்ள 'மாளவிகா ஜுவல்லரி' உரிமையாளர் ஜெயராம் என்னைத் தொழில் ரீதியாகத் தீர்த்துக் கட்டுவேன் என ஏற்கனவே மிரட்டியிருந்தார்" என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாநகரக் காவல் ஆணையர் அருள் ஆர்.பி. கிருஷ்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் ஜெயராமின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, நந்தகுமாரின் கடையில் முன்னாள் ஊழியராகப் பணியாற்றியவரும், தற்போது பழைய சாலாவில் 'ஆற்றுக்கால் கோல்ட் சில்வர் டெஸ்டிங்' நிறுவனம் நடத்தி வருபவருமான மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமுல் அசோக்குடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. காவல்துறையின் தீவிர விசாரணையில், நகை வியாபாரிகளுக்கு இடையிலான தொழில் பகைமையே இந்தக் கொள்ளைக்குக் காரணம் என்பது உறுதியானது. நந்தகுமாரிடம் வேலை பார்த்த அமுல் அசோக், பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கி பழைய சாலாவில் மூன்று மாடிக் கட்டடம் வாங்கும் அளவிற்கு உயர்ந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் நந்தகுமார் புதிய நகைக்கடையைத் தொடங்கிய பிறகு, அவரது பொருளாதார வளர்ச்சியைக் கண்டு அமுல் அசோக் மற்றும் எதிர்க்கடை உரிமையாளர் ஜெயராம் ஆகியோருக்குப் பொறாமை ஏற்பட்டது. நந்தகுமாரின் தொழிலை முடக்க வேண்டும் என்ற நோக்கில், அமுல் அசோக்கின் 'ஆற்றுக்கால் கோல்ட் சர்வீஸ் ஏஜென்சி' அலுவலகத்தில் வைத்து இந்தக் கொள்ளைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக திருட்டு வழக்குகளில் தொடர்புடைய அனூப் என்பவரை அமுல் அசோக் அணுகியுள்ளார். அனூப் தனது கூட்டாளியான அனில் பிரசாத் என்கிற ஷேடோ அனில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொள்ளையை அரங்கேற்றத் திட்டமிட்டார். திட்டத்தின்படி, கொள்ளை நடந்த வியாழக்கிழமை காலையில் நந்தகுமாரின் கடைக்குச் சென்ற அமுல் அசோக், ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை விற்றுப் பணம் பெற்றுள்ளார். இதன் மூலம், அன்று இரவு நந்தகுமார் அதிக அளவிலான தங்கத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதை அவர் உறுதி செய்துகொண்டார். மேலும், அடுத்த வாரம் காயங்குளத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு நந்தகுமார் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை வழங்க உள்ள தகவலையும் அறிந்துகொண்ட கும்பல், அதற்கு முன்பாகவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்தது. இதைத்தொடர்ந்தே கடந்த வியாழக்கிழமை இரவு நந்தகுமார் கடையிலிருந்து புறப்பட்ட தகவலைக் கூட்டாளியான ஸ்ரவன் என்பவர் செல்போன் மூலம் அனூப் மற்றும் அனிலுக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பைக்கில் பின்தொடர்ந்து வந்த அனூப்பும் அனிலும் நந்தகுமாரின் தங்கப் பையைப் பறித்துக்கொண்டு தப்பினர்.

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட புதிய ரக பைக்கின் பதிவு எண் மற்றும் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளைப் பின்தொடர்ந்த போலீஸார், வயநாடு மாவட்டம் படிஞாறத்தறா பகுதியில் பதுங்கியிருந்த அனில் பிரசாத், அனூப் மற்றும் வினோத் ஆண்டனி ஆகிய 3 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 488 கிராம் தங்கத்தை மீட்டனர். இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொள்ளையின் முக்கிய சூத்திரதாரியான அமுல் அசோக் மற்றும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்த அவரது நண்பர் திலீப் ஆகியோரை ஃபோர்ட் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதில் அனில் பிரசாத், அனூப், வினோத் ஆண்டனி, அமுல் அசோக் மற்றும் திலீப் ஆகிய 5 பேரும் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, மாளவிகா ஜுவல்லரி உரிமையாளர் ஜெயராமைப் போலீஸார் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய ஸ்ரவனையும் மீதமுள்ள தங்கத்தையும் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

















