2027 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கோரும் ராகுல் காந்தி; தென்னிந்தியா...
2027 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கோரும் ராகுல் காந்தி; தென்னிந்தியாவுக்கு எதிரானதா?
நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது மத்திய பாஜக அரசு.
இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவளித்துள்ளது.
ராகுல் காந்தியின் 2027 பதிவு
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 28) ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "ஒவ்வொரு இளம் இந்தியரும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் - பாஜகவை அதிகாரத்தில் தக்கவைக்கவும், உங்கள் உரிமைகளைப் பறிக்கவுமே 850 என்ற எண்ணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நியாயமான தொகுதி மறுவரையறை இப்படித்தான் இருக்க வேண்டும்:
850 இடங்கள் அல்ல, 543 இடங்கள்
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ளாமல், 2027 சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைய வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் இடம்பெற்ற நடுநிலையான தொகுதி மறுவரையறை ஆணையத்தால் முடிவு செய்யப்பட வேண்டும். ஞானேஷ் குமாரின் கூட்டணியால் அல்ல.
543 இடங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, அதனுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) உள்-ஒதுக்கீடு" என்று பதிவிட்டுள்ளார்.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடப்பட்டால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும்.
தென்னிந்தியாவுக்கு எதிராக ராகுல் காந்தி?
இதைச் சுட்டிக்காட்டி எக்ஸ் பயனர் ஒருவர் ராகுல் காந்தி பதிவு குறித்து, "திடீரென்று ஏன் இப்படி தென்னிந்தியாவுக்கு எதிராக இத்தனை மோசமாகத் திரும்பிவிட்டார்?
2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்துவது தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் கூட ரொம்பவே மோசமானதாகத்தானே இருக்கும்? எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

டி.ஆர்.பி. ராஜா பதில்
இதற்குப் பதிலளித்துள்ளார் திமுகவின் முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா...
"நியாயமான தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக எடுத்துள்ள உறுதியான நிலைப்பாட்டிலிருந்து காங்கிரஸ் ஏன் விலகிச் சென்றிருக்கிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்!
மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய பிரதிநிதித்துவ விகிதத்தை அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கத் தவறும் எந்தவொரு தொகுதி மறுவரையறை நடவடிக்கையும் சில மாநிலங்களுக்கு நன்மை பயக்கலாம்;
ஆனால் #தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்கள் பலவற்றுக்கும், அதேபோல் வட மாநிலங்கள் பலவற்றுக்கும் இது பேரழிவாகவே முடியும்!
இந்திய அரசியலமைப்பின் கீழ் தொகுதி மறுவரையறை திட்டமிடப்பட்டுள்ளது. இது எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதே அடிப்படைக் கேள்வி.
ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட மசோதாவோடு ஒப்பிடும்போது, இந்தப் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் பிரதிபலிக்கும் முக்கிய மாற்றங்களுக்கு, நியாயமான தொகுதி மறுவரையறை மீதான திமுகவின் உறுதியான நிலைப்பாடும், தென் மாநிலங்களுக்கான நீதி கேட்டு அது நடத்தி வரும் ஓயாத போராட்டமுமே காரணமாகும்.
EXACTLY!
— Dr. T R B Rajaa (@TRBRajaa) November 29, 2026
NOW you know why the Congress has moved away from the #DMK’s consistent stand on #FairDelimitation!
Any delimitation exercise that fails to constitutionally protect the existing interstate representation ratio could benefit some States but prove DISASTROUS for… https://t.co/DY4ZticCmF
1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ விகிதத்தைக் குறைந்தபட்சம் 2051 வரையாவது பாதுகாக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்க, திரு. ராகுல் காந்தி தற்போது நடக்கும் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என்கிறார்!
இது முற்றிலும் அருவருக்கத்தக்க துரோகம்.
நியாயமான தொகுதி மறுவரையறைக்காகத் தலைவர் ஸ்டாலின் போராடுவார்".















