ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
50 ஆண்டுகளாக தேர்தலில் கைகொடுக்கும் `பிரம்மாஸ்திரம்' - எடப்பாடி ஸ்கெட்ச்; சமாளிப்பாரா ஸ்டாலின்?
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தனை தேர்தல்களை எதிர்க்கொண்ட தி.மு.கவும் அ.தி.மு.க வும் கட்சித் தொடங்கப்பட்டதிலிருந்து ஊழல் என்றக் குற்றச்சாட்டையும் சேர்த்து எதிர்க்கொண்டு வருகிறது.
அதே நேரம், தமிழ்நாட்டு அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுகள் என்பவை வெறும் அரசியல் விமர்சனங்கள் மட்டுமல்ல, அவை பலமுறை ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் முக்கிய 'கேம் சேஞ்சர்' ஆகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தல்களில் இவை ஏற்படுத்திய தாக்கங்களை முக்கியமாவை.

சர்க்காரியா கமிஷன்
முதன் முதலாக தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டை, தி.மு.க-வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் எழுப்பினார். அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த புகார்களின் அடிப்படையில், 1976-ல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு 'சர்க்காரியா கமிஷன்' அமைக்கப்பட்டது.
"தடையமே இல்லாமல் ஊழல் செய்கிறார்கள்" என்ற பொருளில், தி.மு.க-வின் ஊழல்களைச் சர்க்காரியா கமிஷன் "விஞ்ஞான பூர்வமான ஊழல்" எனக் குறிப்பிட்டிருக்கிறது என எம்.ஜி.ஆர் பிரசாரங்களில் முன்வைத்தார். பின்னாட்களில் நீதிபதி சர்க்காரியா தனது அறிக்கையில் "விஞ்ஞான ஊழல்" என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என விளக்கமளித்தார்.
ஜெ., மீதான ஊழக் குற்றச்சாட்டுகள்
கலைஞர் கருணாநிதி அரசு மீது எம்.ஜி.ஆர் வைத்த ஊழல் புகார்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் காரணமாக 1977 தேர்தலில் தி.மு.க தோல்வியைத் தழுவி, எம்.ஜி.ஆர்-க்கு அரியணையை பரிசளித்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை சுமார் 10 ஆண்டுகள் தி.மு.க-வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை.
எம்.ஜி.ஆர்-க்குப் பிறகு அதிமுக அரியணை ஏறிய ஜெயலலிதாவின் ஆட்சி. 1991 முதல் 1996 வரை ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தது. ஜெயலலிதாவின் வீட்டுக்குள் குவிந்திருந்த செருப்பு முதல் பண்ட பாத்திரங்கள், நகைகளின் குவியல் போன்றவை வீடியோக்களாக வெளியாக மக்கள் மத்தியில் பேசுபொருளானது.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் 1996-ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா ஆட்சியில் நடந்த வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம், வண்ணத் தொலைக்காட்சி ஊழல் போன்ற பல ஊழல் வழக்குகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால், அ.தி.மு.க மிக மோசமான தோல்வியைத் தழுவியது.
ஜெயலலிதாவே தனது தொகுதியில் தோற்றுப்போனார். ஊழல் புகார்கள் ஒரு முதலமைச்சரையே தோற்கடிக்கும் வலிமை கொண்டது என்பதை இந்தத் தேர்தல் காட்டியது. 1996-ல் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, 27 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1996 முதல் 2001-வரை தி.மு.க ஆட்சி செய்தது.
சென்னை மேம்பால ஊழல்
2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, சென்னை மேம்பால திட்டங்களில் ஊழல் நடந்ததாகக் கூறி, 2001-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியை கைது செய்ய உத்தரவிட்டார். நள்ளிரவில் நடந்த அந்தக் கைது நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட கருணாநிதி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்தில், ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதானமான எடுத்துக்கொண்ட தி.மு.க, 'ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்கச் செய்வோம்' என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தது. அதன்படியே ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை முடுக்கிவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
அதைத் தொடர்ந்து, 2009 - 2010-ம் ஆண்டுகளில் அரசியல் களத்தில் பெரும் விவாதமான ஊழல் குற்றச்சாட்டு என்றால் அது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுதான். ஜெயலலிதா இதை இந்தியாவின் மிகப்பெரிய ஊழலாக கட்டமைத்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டு இது. 2ஜி ஊழல் என்ற ஒற்றை வார்த்தை தி.மு.க-வை நிலைகுலையச் செய்தது. 2011-ம் ஆண்டு நடந்த அந்தத் தேர்தலில் தி.மு.க வெறும் 23 இடங்களை மட்டுமே பெற்று, எதிர்க்கட்சித் தகுதியைக்கூட இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஜெயலலிதா மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். மேலும், தி.மு.க அமைச்சர்கள் ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் சிறை சென்றதை ஊழலுக்கான சான்றாகத் தொடர்ந்து பிரசாரம் செய்தார். அதன் பிறகு நடந்த வழக்கு விசாரணையில் 2017-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 'ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை' என ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை விடுவித்தது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடர்ந்து 'தி.மு.க என்பது ஒரு ஊழல் கூடாரம். கருணாநிதியின் குடும்பத்தினர் மட்டுமே பலனடையும் வகையில் டெண்டர்கள் விடப்படுகிறது' எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரசாரங்களை மேற்கொண்டார் ஜெயலலிதா.

''அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல்" புத்தகம்
ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தனது உறவினர்களுக்கு ரூ.4,500 கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்தங்களை வழங்கியதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும், 2021-ம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் ''அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல்" என்ற தலைப்பில் டெண்டர் ஊழல் முதல் குட்கா ஊழல் வரை ஊழல் குற்றச்சாட்டுகளை புத்தகமாக தயாரித்து தி.மு.க ஆளுநரிடம் வழங்கியது.
10 ஆண்டு காலத் தொடர் ஆட்சிக்குப் பிறகு, இந்த ஊழல் புகார்கள் மற்றும் 'ஆட்சி எதிர்ப்பு அலையை'ப் பயன்படுத்தி தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
ஆடியோ சர்ச்சை
2021-ல் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற இந்த ஆட்சியின் போதுதான், முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஒரு ஆடியோவில், ``முதல்வர் குடும்பத்தினர் உதயநிதி மற்றும் சபரீசன் ஓராண்டில் ரூ.30,000 கோடி சம்பாதித்துவிட்டனர்" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், பழனிவேல் தியாகராஜன் 'அது நான் அல்ல' என மறுத்திருந்தார்.
மேலும், முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, 'தி.மு.க பைல்1...2...3..' என பரபரப்பான செய்தியாளர் சந்திப்பெல்லாம் நடத்தினார். மத்தியிலிருந்து வரும் ஆளும் அரசின் தலைவர்கள் தி.மு.க மீது சுமத்தும் பிரதான குற்றச்சாட்டுகளில் 'தி.மு.க ஊழல் கட்சி' என்ற வாசகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதன் பிறகு அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டது, பிறகு குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை என நீதிமன்றம் ஜாமீன் அளித்தது போன்றவை தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பான காலகட்டங்கள். இப்போதுக்கூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக கடந்த 56 மாத கால ஆட்சியில் பல்வேறு துறைகளில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறார்.
கைகொடுக்குமா பிரம்மாஸ்திரம்?
2021-ல் திமுக ஆளுநரிடம் ஊழல் பட்டியல் வழங்கியது போல தற்போது அதே பாணியிலான ஊழல் பட்டியலை அ.தி.மு.க-வும் ஆளுநரிடம் வழங்கியிருக்கிறது.
மேலும் திமுகவுக்கு எதிராக மீண்டும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஊழல் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் வழங்கிய பட்டியலில் துறை வாரியாக ஊழல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மறுபக்கம் அதிமுக எம்.பி இன்பதுரை மூலம், உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்க பாஜகவும் இன்னும் பல ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதானமாக முன்வைக்க உள்ளதாம்.
ஊழல் எனும் வார்த்தை இந்த தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!















