Gold Bond மீது வரியா? | Budget Detailed Report | Nirmala Sitharaman | IPS Financ...
Aazhikondaan: 'ராஜேந்திர சோழனின் சாதனைகள் இனி ஆங்கிலத்தில்' - 16 வயது மாணவர் எழுதிய வரலாற்று நாவல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், ரௌனக் ஷிவ் (புனைப்பெயர்: அந்துவன்) எழுதிய "Aazhikondaan – The Conqueror Of Oceans (Part - 1)" என்ற ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலால் ஈர்க்கப்பட்ட ரௌனக், அதன் தொடர்ச்சியாக ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிகளை மையமாக வைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார்.
கல்கியின் பாத்திரப்படைப்புகளை அடியொற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், காலமான பின்னரும் தனது படைப்பாற்றலால் அடுத்தடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் இலக்கிய ஆளுமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவரான ரௌனக், ஒரு கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு, வரலாற்று ஆய்விலும் ஆர்வம் காட்டி வருகிறார். வெறும் கற்பனையாக மட்டுமில்லாமல், கல்வெட்டு ஆதாரங்களுடன் கூடிய ஒரு ‘உண்மை கலந்த கற்பனை’ (Factual Fiction) நாவலாக இதனை அவர் எழுதியுள்ளார்.
16 வயதில் வரலாற்றுப் பின்னணியில் இவர் எடுத்துள்ள இந்த முயற்சி, ராஜேந்திர சோழனின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு ஆங்கிலத்தில் கொண்டு செல்லும் நோக்கில் அமைந்துள்ளது.
இந்தப் புத்தகத்தை பேராசிரியர் டாக்டர் G. தெய்வநாயகம் வெளியிட, பிரபல எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா பெற்றுக்கொண்டார்.
மின்னூலை (E-Book) எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட, ஒலிப்புத்தகத்தை (Audiobook) மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் சிவா ஆனந்த் வெளியிட்டார். வரலாற்று ஆய்வாளர் டாக்டர் K.V.S. மருது மோகன் சிறப்புரையாற்றினார்.
வரலாற்றுப் புனைவு இலக்கியத்தில் ரௌனக் காட்டியுள்ள ஆர்வத்தையும், நாவலில் அவர் அமைத்துள்ள வசனங்களையும் விருந்தினர்கள் வெகுவாகப் புகழ்ந்தனர். அதேநேரம், தங்களின் அனுபவத்திலிருந்து சில ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கினர்.
விழாவில் ரௌனக்கின் பெற்றோர் அவருக்கு அளித்த ஊக்கமும் ஆதரவும் முக்கியமாகப் பேசப்பட்டன. ஒரு இளம் படைப்பாளியின் தனித்திறனை அடையாளம் கண்டு, அதனை வளர்ப்பதில் பெற்றோரின் பங்களிப்பு எவ்வளவு அவசியமானது என்பதைச் சிறப்பு விருந்தினர்கள் சுட்டிக்காட்டினர்.
இளம் படைப்பாளிகளின் தனித்துவமான முயற்சிகளை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் புஸ்தகா (Pustaka) நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
எழுதுகோல் பிடிக்கும் ஒவ்வொரு கரமும் ஒரு புதிய உலகத்தைப் படைக்கிறது. ஆய்வும் ஆர்வமும் இணையும்போது, வயது ஒரு தடையாக இருப்பதில்லை என்பதற்கு இந்த நூல் வெளியீட்டு விழா ஒரு சான்று.



















