``ஃபினிஷ்' அந்த கை சைகையை நான் திட்டமிட்டு செய்யவில்லை.!' - முதல்வர் ஸ்டாலின் வி...
Anemia: 3 மணிக்கு லஞ்ச், AI டாக்டர்... நகரத்து ஆண்களையும் விட்டு வைக்காத அனீமியா!
"நான் முன்னாடி நார்மலா இருந்தேன், சுறுசுறுப்பா வேலை செஞ்சுட்டு இருந்தேன், திடீர்னு எனக்கு டயர்டா இருக்கு, என்னால புரொடக்டிவா (productive) இருக்க முடியல" என்று மருத்துவரை நாடுவோர் அதிகரித்துள்ளனர்.
குறிப்பாக, சம்பாதிக்கும் வயதில் இருப்போர். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அது அனீமியாவாக இருக்கலாம். பெண்களைப் போல ஆண்களையும் குறிப்பாக, நகரத்து ஆண்களை அனீமியா பாதிக்கிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அப்துல் ரஹ்மான்.

"நமது உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் ஹீமோகுளோபின்தான் ஆக்ஸிஜனைக் கொண்டு சேர்க்கும். ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் எவ்வளவு அவசியம் என்று தெரியும். இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவதைத்தான் அனீமியா, தமிழில் ரத்தசோகை என்கிறோம்.
ஹீமோகுளோபின் அளவு ஆண்களுக்கு 13 முதல் 15 கிராம், பெண்களுக்கு 12 முதல் 13 கிராம் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைபாட்டை லேசானது(Mild), மிதமானது(Moderate), தீவிரமானது (Severe) என மூன்றாகப் பிரிக்கலாம்.
10 முதல் 12 கிராம் இருந்தால் லேசான பாதிப்பு, 8 முதல் 10 கிராம் இருந்தால் மிதமான பாதிப்பு, 7-க்கும் குறைவாக இருந்தால் அது தீவிர அனீமியா.
ரத்தசோகை பாதிப்பில் ஒவ்வொரு திசுவுக்கும் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைவதால், சோர்வு, மூச்சுத்திணறல், படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதே போல திடீரென முடி உதிர்வு, உடையும் நகங்கள், சருமம் சார்ந்த பிரச்னைகள், முகப்பரு போன்றவை ஏற்படலாம்.
இன்னும் தீவிரமாகச் சிலருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நோய்த்தொற்று ஏற்படலாம். தீவிர அனீமியாவால் பாதிக்கப்பட்வர்கள் மயங்கி விழும் பிரச்னையும் ஏற்படலாம்.

நகரத்துப் பெண்களைப் பாதிக்கக் காரணம்?
ஊட்டச்சத்துக் குறைபாடு எனும் பொதுவான காரணத்தால் கிராமப்புறப் பெண்கள் மத்தியில் அனீமியா பாதிப்பு அதிகமாகக் காணப்படும். தற்போது நகர்ப்புறத்தில் வசிக்கும் பெண்களையும் இது பாதிக்கிறது.
3 மணிக்கு லஞ்ச்
நகர்ப்புறங்களில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அவசரம் அவசரமாக காலையில் கிளம்பி வேலைக்குச் செல்லும்போது பலர் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறார்கள்.
சில நேரங்களில் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டுக் கிளம்புகிறார்கள். இதனால் போதிய சத்துகள் உடலுக்குக் கிடைப்பதில்லை. நீண்ட நேர பயணத்துக்குப் பிறகு அலுவலகம் சென்று தீவிரமாக வேலை செய்வது, இடையில் கிடைக்கும் நேரத்திலும் காபி, டீயிலேயே ஓடும்.
முன்பெல்லாம் சரியாக 1 மணிக்கு மதிய உணவைச் சாப்பிட்டுவிடுவார்கள். இப்போதெல்லாம் வேலையை முடித்துவிட்டு சாப்பிடலாம் என 3 மணிக்குக்கூட மதிய உணவைச் சாப்பிடுகிறார்கள். இதனால் சரியான சாப்பாடு இல்லாமல் அழுத்தம் அதிகமாகி அனீமியா ஏற்பட வாய்ப்புள்ளது.

சத்து குறைந்த உணவுகள்
ஒவ்வொரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் B12, ஆண்களுக்கு 8 மில்லிகிராம், பெண்களுக்கு 18 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவை. ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு ஊட்டச்சத்துகளைப் பெரும்பாலானவர்கள் கடைப்பிடிப்பது இல்லை.
இதுதவிர, ஜங்க் ஃபுட்ஸ், புராசெஸ் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது, சரிவிகித உணவு என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இதுவும் அனீமியா வருவதற்கான பொதுவான காரணம்.
AI டாக்டர்
உடல்நிலை சரியில்லை என்றால் கூகுளில் அறிகுறிகளை டைப் செய்து என்ன நோய் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். தற்போது அது ChatGPT, Grok என அடுத்த லெவலுக்குச் சென்றுவிட்டது. அவற்றிடம் கேட்டு மருந்துகளை வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது.
பொதுவாக பெண்கள், முடி உதிர்வு, சருமப் பிரச்னைகள் இருந்தால் ஏஐயிடம் ஆலோசனை பெற்று அவர்களாகவே மல்டி விட்டமின் மாத்திரைகளை எடுக்கிறார்கள். இதுபோல சுயமாக மாத்திரைகளை எடுப்பதால், கேஸ்ட்ரைடிஸ் (gastritis) பிரச்னை ஏற்படுவதோடு, உடல் இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மையையும் குறைத்துவிடும்.
இதனால், இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் கூட உடல் அதைக் கிரகிக்காது. இதனால் இரும்புச்சத்துக் குறைபாட்டு அனீமியா ஏற்படும்.

ஹார்மோன் மாற்றங்கள்
இதுபோன்ற பரபரப்பான வாழ்க்கை வாழ்வதால் கார்டிசோல் (Cortisol) எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகரித்து உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியைப் பாதிப்பதோடு, மாதவிடாய் நாள்களை அதிகரிக்கலாம் அல்லது மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.
அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால் அனீமியா ஏற்படலாம். இதுதவிர, சிறுநீரக, கல்லீரல் பாதிப்புகள், தலசீமியா போன்ற பிரச்னைகள் இருந்தாலும் ரத்தசோகை ஏற்படலாம்.
பாதிக்கப்படும் ஆண்கள்...
தற்போது நகர்ப்புறத்தில் வசிக்கும் ஆண்கள் மத்தியில் அனீமியா பாதிப்பைக் காண முடிகிறது. மாதவிடாய் சுழற்சி தவிர மீதம் பெண்களுக்குச் சொன்ன எல்லா காரணங்களும் ஆண்களுக்கும் பொருந்தும்.
கூடுதலாக, ஸ்மோக்கிங், மதுப்பழக்கம் இருந்தால் அதுவும் அனீமியாவை ஏற்படுத்தும். ஆல்கஹால் எடுக்கும்போது உடல் பி12 சத்தைக் கிரகிக்கும் தன்மை குறையும். மேலும் தயாமின் (Thiamine) சத்து குறைபாடு ஏற்படும். இதனாலேயே ஆண்களுக்கு அனீமியா வரலாம்.

அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்ய வேண்டும். வாழ்க்கை முறை மாற்றம், ஊட்டச்சத்துள்ள உணவுகள், தேவைப்பட்டால் மருந்து, மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுதவிர 8 மணி நேரத் தூக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்" என்கிறார் மருத்துவர் அப்துல் ரஹ்மான்.


















