Aval Awards 2024: "நாம் போராடி பெற்ற சட்டங்களை ரத்து செய்துவிட்டனர்" - கீதா ராமக...
Aval Awards 2024: "நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுவிட்டது" - இலக்கிய ஆளுமை அமரந்தா பேச்சு!
விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அவள் இலக்கிய வல்லமை விருது பெற்றார் எழுத்தாளர் அமரந்தா.
யார் இந்த அமரந்தா?
தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பாளர், மொழி பெயர்ப்பாளர், ஆய்வாளர் எனப் பல முகங்களுடன் இயங்குகிறவர், அமரந்தா. தனிமையிலிருந்து விடுபட எழுத ஆரம்பித்ததாகக் கூறுபவர். இவரின் முதல் படைப்பான ‘சுற்றத்தார்’, தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தனது கிணற்றுத் தவளை மனநிலையை உடைக்க எண்ணி, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தார். அதில் முன்னோடியாகவும், தனிச் சுடராகவும் ஒளிர்ந்தார்; நவீன இலக்கியத்துக்குப் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டார்.

வங்காள எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவி எழுதிய, பழங்குடிப் பெண்களின் வலிகளைத் தாங்கிய சிறுகதைகளை, தனது குருதிப்புனல் எழுத்துகளில் மொழிபெயர்த்தார் அமரந்தா. பெண்ணியம் சார்ந்த இவரின் படைப்புகள், மொத்த சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. கதைகளில் புனைவையும் வாழ்வையும் இணைக்கும் நுட்பம், மொழிபெயர்ப்புகளில் சரளமான வாசிப்பின் சாத்தியம், கட்டுரைகளில் வரலாற்று தரவுகள் எனப் படைக்கும் நேர்த்தியாளர்.
Aval Awards 2024
திராவிடர் கழக தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் கைகளால் விருதுபெற்ற அமரந்தா, "விகடன் எப்படி என்னைக் கண்டுபிடித்தது என்று தெரியாது. ஆனால் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கீதா அவர்கள் சொன்ன மாதிரி நானும் ஒரு கடுமையான ஒரு மனவருத்தத்தோடு தான் இங்கு இருக்கேன்.

உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும், செய்தித்தாளில் பார்த்திருப்பீங்க, அரும்பாடுபட்டு ஒரு புதிய ஜனநாயக முறையை ஹூகோ சாவேஸ் அவர்கள் வெனிசுலாவில் தோற்றுவித்தார். நாடாளுமன்ற ஜனநாயகம் முழுவதும் தோற்றுப் போய்விட்டது என்பது நமக்கு எல்லாம் தெரியும். அவர் பார்டிசிபேட்டரி டெமாக்ரசி என்ற புதிய ஒரு மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்தை அந்த நாட்டில் புகுத்தி வெற்றிகரமாக பல ஆண்டுகள் செய்து காட்டினார்.
ஆனால் இப்பொழுது வட அமெரிக்கா வெனிசுலாவை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. என்ன நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் சில வாரங்களில் நமக்கு தெரிய வரும். பல போர்களுக்கு வட அமெரிக்கா தான் காரணம் என்பது நம்மில் எல்லோருக்குமே தெரியும். அந்த வருத்தத்தோடு தான் நான் இங்கு நிற்கிறேன். கூடவே அவள் விகடன் விருதுக்காக என்னுடைய மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்." எனப் பேசினார்.

















