Selvaraghavan: ``யாருக்காகவும் அதை மாத்தக் கூடாது!" - மேடையில் பட அப்டேட் தந்த ச...
BB Tamil 9: இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டுருக்கு பிக் பாஸ்! - நடிகர் பரணி
வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் சீரியல் முகங்களா அல்லது ஏற்கெனவே அந்த வீட்டிலில் அடாவடி, அலும்பு என நிகழ்த்திக் கொண்டிருக்கும் சமூக ஊடக பிரபல முகங்களா என்கிற ரீதியில் பஞ்சாயத்து தொடங்கியிருக்கிறது பிக் பாஸ் சீசன் 9  நிகழ்ச்சியில்.
இந்த முறை சமூக ஊடக பிரபலங்கள் அதிகம் இடம் பிடித்தபோது 'கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களுக்கு இவங்க பரவால்லப்பா' என்கிற குரல்கள் எழுந்ததென்னவோ நிஜம்தான். ஆனால் அடுத்த சில தினங்களிலேயே அவரகளுக்கிடையிலான சத்தமும் சண்டையும் பார்க்க பிடிக்கவில்லை பலருக்கு.
கொஞ்சம் உஷாராகிக்கொண்ட பிக் பாஸ் ஒரே மாதத்தில் டிவியிலிருந்து நான்கு பேரை வைல்டு கார்டு மூலம் இறக்கிவிட்டிருக்கிறார்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு கன்டென்ட் கியாரண்டி என்கிற சூழலில், பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் தொடர முடியாமல் சுவர் ஏறித் தப்ப முயன்ற நடிகர் பரணியிடம் பேசினோம்.
''அண்ணே, `அங்கம்மாள்'னு ஒரு படம் நடிச்சிருக்கேன். அம்மா மகன் கதை. நியூயார்க் திரைப்பட விழாவுல படத்துக்கு விருது தந்திருக்காங்க. இங்க அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி 2 படம் வர இருக்குது. இதெல்லாம் பத்திப் பேசலாமே, அந்த நிகழ்ச்சியைப் பத்தி அவசியம் பேசித்தான் ஆகணுமா' என தயங்கியவரை சரிக்கட்டிப் பேச வைத்தோம்.
''விடிஞ்சா புதுசா பத்து பேரை சந்திச்சமா நல்லதா நாலு விஷயத்தைப் பேசினோமான்னு இருக்கணும்னு நினைக்கிறவன் நான். அதுலயும் பார்க்குறவனை பழகுறவனை எல்லாம் அப்படியே நம்பவும் செய்வேன். என்னைப் போய், வாயைத் திறந்தா பொய், அதுவும் அங்க ஒண்ணும் இங்க ஒண்ணுமா பேசிக்கிட்டு திரியறவங்ககூட இருன்னு சொன்னா எப்படி இருப்பேன்?
அந்த நிகழ்ச்சி பத்தித் தெரியாம, கமல் சார் வர்ற ஷோன்னு கிளம்பிப் போனேன். ரெண்டு மூணு நாள்லயே இங்க இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுடுச்சு. வெளியில போகணும்னு சொன்னேன்.. விட லேட் ஆச்சு. 
அதனால ஸ்ட்ரெஸ் அதிகமாகி டென்ஷன் எகிறிச்சு. எத்தனை கேமரா இருந்தா என்ன தப்பிக்க வழி இருந்தா கிளம்பிடலாம்னு ட்ரை பண்ணினேன். அதை எதுக்கு இப்ப திரும்ப ஞாபகப்படுத்தச் சொல்றீங்க.. எம்பாட்டுக்கு நடிப்பு, பக்தின்னு போயிட்டிருக்கேனே' என மறுபடியும் முரண்டு பிடித்தவரிடம், 'இந்த சீசன் பார்க்குறீங்களா' இந்த சீசன்லயும் உங்களை மாதிரியே ஒரு போட்டியாளர் நிகழ்ச்சி செட் ஆகலைன்னு கிளம்பினார் தெரியுமா' என்ற கேள்வியையும் சூட்டோடு சூடாக வைத்தோம்.
'' ஒரு விஷயம் பிடிக்காம அதுல இருந்து வெளியில வந்த பிறகு அதைப் பத்தி எதுக்கு யோசிக்கணும்? அப்படித்தான் நினைச்சு அந்த நினைப்புல உறுதியா இருக்கேன். இருந்தாலும் கமல் சார் நடத்திட்டிருந்த அடுத்தடுத்த சில சீசன்கள்ல அவர் கலந்துகிட்ட சில எபிசோடுகள் பார்த்தேன். அது அவருக்காக பார்த்தது.
மத்தபடி 'அந்த நிகழ்ச்சியில கலந்துக்க வாய்ப்பு வருது, போகலாமான்னு யாராச்சும் கேட்டா, (அவ்வளவா யாரும் கேக்கறதில்ல) யப்பா, உன் வாழ்க்கை உன் முடிவு'னு பெரிசா கையெடுத்து கும்பிட்டு அனுப்பிடுவேன. ஆனாலும் என்னை உதாரணம் காட்டறீங்க பார்த்தீங்களா, இந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கு பிக் பாஸ் எனச் சிரிக்கிறார்.





















