Soori: "பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல!" - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில...
Book Fair: ``எழுத்தின் பலம் அதன் எளிமையில் தான் இருக்கிறது!" - எழுத்தாளர் கீதா இளங்கோவன்
எல்லா நாள்களிலும் வாசகர் கூட்டம் சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புத்தக வாசிப்பின் மீது பற்று கொண்ட பலரும் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருவதை காண முடிகிறது. அவ்வகையில் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த எழுத்தாளர் கீதா இளங்கோவன் அவர்களிடம் பேசினோம்.!
``பெண்கள் ஏன் வாசிக்க வேண்டும்?"
``பெண்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பெண்களுக்கு வாசிப்பு என்பது ஒரு அனுபவம். இரண்டாவது உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா இடங்களுக்கும் சென்று ஒரு இடத்தை சுற்றி பார்ப்பது சாத்தியம் இல்லாத ஒன்று. நிறைய இடங்களை தெரிந்து கொள்வதற்கும், மனிதர்களை தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

மூன்றாவது அறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு துறையில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அது தொடர்பான புத்தகங்களை நீங்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
படித்து பட்டம் பெறுவது என்பது வேறு. ஆனால் புத்தகம் படிப்பது என்பது தனி அனுபவம். பாடத்திட்டங்களை தாண்டி பலவற்றையும் நாம் கற்க வேண்டும்.
பெண்கள் என்றாலே சமையல் பற்றி தான் படிப்பார்கள், கோலம் பற்றி தான் படிப்பார்கள், ஆன்மீகம் பற்றி தான் படிப்பார்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அடுத்த தலைமுறை இன்ஸ்டாவில் புத்தகங்களைப் பற்றி பதிவுகளை போட்டு வருகிறார்கள் அடுத்த தலைமுறை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.
பெண் எழுத்தாளர்களின் எழுத்தின் சக்தி என்பது, என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். நான் Her Stories வலைதள பக்கத்தில் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தபோது, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும் என்று கூறினார்கள் அதன் விளைவு தான் "துப்பட்டா போடுங்க தோழி" என்ற புத்தகம்.

குறிப்பாக ஜென்Z கிட்ஸ்கள் இந்த புத்தகத்தை பற்றி என்னிடம் பேசும்போது உங்கள் புத்தகம் எனக்கு தெளிவை கொடுத்துள்ளது, பெண்களை எப்படி நடத்த வேண்டும், என்று தெளிவடைகிறேன். நான் முற்போக்காளன் என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனால் எந்தெந்த இடங்களில் எல்லாம் நான் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்கிறேன் என்று பலரும் என்னிடம் நேரிலேயே சொல்லி இருக்கிறார்கள்.
இதையே என்னுடைய எழுத்தின் பலமாக பார்க்கிறேன். எழுத்தின் வெற்றியை இந்த புத்தகம் வந்தவுடன் தான் நான் புரிந்து கொண்டேன். எழுத்து எளிமையாக இருக்க வேண்டும். படிப்பவர்களுக்கு அதன் கருத்து போய் சேர வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதைத்தான் நான் வெற்றியாகவும் பார்க்கிறேன்." என்றார்.





















