CJP: ``ரீல்ஸில் மட்டும்தான் பிரதமர் மன்னிப்பாரா?" - போராட்ட வழக்குகள் குறித்து அ...
CJP: ``ரீல்ஸில் மட்டும்தான் பிரதமர் மன்னிப்பாரா?" - போராட்ட வழக்குகள் குறித்து அபிஜித் தீப்கே கேள்வி
டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பிரதமருக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக நொய்டாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி மீது காவல்துறை 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்தது.
இதன் பின்னர், அச்சிறுமி உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு பேசிவிட்டதாகக் கூறி மன்னிப்புத் கேட்கும் வீடியோவை வெளியிட்டார். ஆனால், சிறுமி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, "பேச்சு சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்" எனப் பல்வேறு எதிர்ப்புகளைக் கிளப்பியது.
அதேநேரம் டெல்லி போராட்டத்துக்குப் பிறகு Gen Z தலைமுறை இளைஞர்களைச் சென்றடைவதற்காக, பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் தொடர் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். இந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், போராட்டத்தின்போது சிலர் தன்னையும் தனது மறைந்த தாயாரையும் மிகக் கடுமையாக அவதூறாகப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், தவறு செய்த இளைஞர்களைத் தண்டிப்பதோ அல்லது நீதிமன்றத்திற்கு இழுப்பதோ தீர்வாகாது என்றும், அவர்களைத் தான் மன்னித்து வழிநடத்த விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, பிரதமரின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கேலி செய்துள்ளார். ``இன்ஸ்டாகிராம் ரீலில் மட்டும் மாணவர்களை மன்னிப்பீர்களா அல்லது அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெறுவீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பா.ஜ.க தலைவர்கள் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பேசிய ஆட்சேபனைக்குரிய பேச்சுகள் ஏராளம் இன்னும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் மாணவர்கள் மீது வழக்கு... அப்படியானால், சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமும், ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மாணவர்கள் மீதான வழக்குகள் தற்போது அரசுக்கும் சிஜேபி கட்சிக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குற்றம் செய்யாத மாணவர்கள் மற்றும் சிறார்களை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சில மாநிலங்கள் எஃப்.ஐ.ஆர்-களைத் திரும்பப் பெற்று வருகின்றன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அபிஜீத் திப்கே எச்சரித்துள்ளார்.












