BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்க...
Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு
டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர்ப் பிராந்தியத்தில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) நிர்ணயிக்கும் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP-3)-ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அதிகமாக இருக்கும்போது பின்பற்றவேண்டிய சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
GRAP 1,2,3,4 என்பவை என்ன?
சமீபத்திய ஆண்டுகளில் குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதன் தீவிரத்தைப் பொறுத்து, நகரில் எந்த அளவிற்குப் பாதிப்புகளைச் சமாளிக்க முடியும் என்பதைக் கண்டறிய டெல்லி அரசு இந்தப் 'GRAP' அளவீடுகளை நம்பியுள்ளது.
காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM), ஒட்டுமொத்த தேசிய தலைநகர்ப் பிராந்தியத்திலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை நிலைமைகளின் அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 முதல் 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். 301 முதல் 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். அதேசமயம், 401 முதல் 450-க்குள் இருக்கும்போது GRAP 3 அமலுக்கு வருகிறது. காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
Delhi மக்களுக்கு கோரிக்கை
கடந்த சனிக்கிழமையன்றும் (நவ. 22), இதே GRAP-3-ன் கீழ் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனியார் அலுவலகங்களில் 50 சதவிகிதப் பணியாளர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதித்து, மீதமுள்ளவர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த ஆலோசனையும் CAQM-ன் வழிகாட்டுதலின் பேரில்தான் வழங்கப்பட்டது.
குப்பைகள் மற்றும் உயிரிப் பொருட்களை (biomass) திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும், தூசி மாசுபாடு குறித்து விழிப்புடன் இருக்குமாறும், விதிமீறல்களை 'கிரீன் டெல்லி செயலி' (Green Delhi app) மூலம் புகாரளிக்குமாறும் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

















