GRT: இரண்டு விருதுகள்; நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ஐ வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர...
Doctor Vikatan: குளிரை அனுபவிக்க முடியாமல் படுத்தும் சளி, இருமல்... நிரந்தர தீர்வே இல்லையா?!
Doctor Vikatan: குளிர்காலம் என்பது பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்த காலம். ஆனால், குளிர் ஆரம்பித்த உடனேயே எனக்கு சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு எல்லாம் ஆரம்பித்துவிடும். குளிரின் சிலுசிலுப்பை அனுபவிக்க முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போடும். இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்கள்....
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.

மலைப்பிரதேசங்களிலோ, பனி பொழியும் வெளிநாடுகளிலோ இருப்பது போன்ற இதமான வானிலை நிலவுகிறது. ஆனால், எல்லோராலும் அதை அனுபவிக்க முடியாதது வருத்தம்தான். குட்டிக் குழந்தைகள், ஆஸ்துமா, வீஸிங் பாதிப்புள்ளவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் போன்றோரை வெளியே தலைகாட்ட விடாமல் முடக்கிப் போட்டிருக்கிறது இந்த வானிலை.
அடிக்கடி சளி பிடித்துக்கொள்வோரும் சரி, அப்படி இல்லாதவர்களும் சரி... எப்போதுமே பின்பற்றக்கூடிய எளிய வீட்டுவைத்திய முறைகளைச் செய்யலாம். கற்பூரவள்ளி இலைகளை 3 எண்ணிக்கையில் எடுத்துக் கழுவி, கைகளால் கசக்கிக் கொள்ளவும். அதை, கொதிக்கும் நீரில் போடவும். அதில் 2 ஏலக்காய்களையும் தட்டிப்போட்டு, வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வரலாம். ஜலதோஷம் வராமலிருக்க, தடுப்பு மருந்து போல இதைக் குடித்து வரலாம். 'கல்போன்ற சளியைக் கரைக்கும் கற்பூரவள்ளி' என்றே சொல்வார்கள். கற்பூரவள்ளி இலைகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக நினைப்பவர்கள், அதற்கு பதில் வெற்றிலைகளைப் பயன்படுத்தியும் இதே மாதிரி செய்யலாம். நீரிழிவு இல்லாதவர்கள் தேன் கலந்து குடிக்கலாம், நீரிழிவு இருந்தால் அதைத் தவிர்க்கலாம்.
இருமல் இருப்பவர்களுக்கு ஆடாதொடை இலைகள் அருமருந்தாக இருக்கும். அந்த இலைகளையும் இரண்டு, மூன்று எடுத்துக் கழுவி, நசுக்கி, தண்ணீரில் போட்டு, கூடவே, இரண்டு ஏலக்காய், நான்கைந்து மிளகையும் தட்டிப்போட்டுக் கொதிக்க விடவும். இதை வடிகட்டிக் குடிக்கலாம். இப்படி கற்பூரவள்ளிக் குடிநீர், வெற்றிலைக் குடிநீர் அல்லது ஆடாதோடைக் குடிநீர் ஆகியவற்றை வாரத்தில் இரண்டு - மூன்று நாள்களுக்குக் குடித்து வந்தால் சளி, இருமல் வராமல் தடுக்கலாம். நுரையீரலும் ஆரோக்கியமாக இருக்கும். சளி கட்டாமல் இருக்கும், ஏற்கெனவே சளி இருந்தாலும் அதை வெளியேற்றும்.

அடுத்த மருந்து முசுமுசுக்கை இலை... பார்ப்பதற்கு கோவக்காய் இலைகள் போன்றே இருக்கும். நகரவாசிகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால், கிராமங்களில் பரவலாகக் கிடைக்கும். இதை தோசை மாவு அல்லது அடை மாவுடன் அரைத்துச் சேர்த்துச் சாப்பிடலாம். குளிர்காலம் முழுவதுமே சாப்பிடலாம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகமிக நல்லது. இதே போல முடக்கறுத்தான் கீரையையும் சாப்பிடலாம். கல்யாண முருங்கை இலையை அடையாகவோ, பஜ்ஜி போன்றோ செய்து சாப்பிடுவதும் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.
தூதுவளைக் கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இலைகளின் மேல் முள் இருக்கும். கவனமாகப் பார்த்து, சுத்தம் செய்து, வழக்கமாக துவையல் செய்யும் முறையில் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், சுவாசக் கோளாறுகள் வராமல் காத்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















