பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்...
Doctor Vikatan: தாம்பத்திய உறவுக்குப் பிறகு வெஜைனாவை சுத்தப்படுத்த வேண்டுமா?
Doctor Vikatan: பொதுவாக வெஜைனா பகுதியை தனியே சுத்தம் செய்ய வேண்டாம் என்றே பல மருத்துவர்களும் சொல்கிறார்கள். தாம்பத்திய உறவுக்குப் பிறகும் இது பொருந்துமா அல்லது உறவு முடிந்ததும் வெஜைனாவை சுத்தம் செய்ய வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரான மாலா ராஜ்.
வெஜைனாவில் உள்ள நல்ல பாக்டீரியாவே அந்தப் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். எனவே, அந்தப் பகுதியை தனியே சுத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், சில பெண்கள், அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, வெஜைனா பகுதியை கழுவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பைக் கழுவுவது, தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வெஜைனாவின் வெளிப்புறத்தை 'வல்வா' (Vulva ) என்று சொல்கிறோம். அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. வெஜைனாவின் உள்புறத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. அப்படிக் கழுவ சாதாரண தண்ணீர் போதுமானது. சோப், ஹைஜீன் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
குறிப்பாக, வாசனை சேர்த்த சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். சோப் அல்லது வெஜைனல் வாஷில் உள்ள கெமிக்கல்கள், வெஜைனா பகுதியின் பிஹெச் அளவை பாதிப்பதால், எளிதில் கிருமித்தொற்று பாதிக்கும். கர்ப்பம் தரிக்கும் திட்டத்தில் இருப்பவர்கள், தாம்பத்திய உறவுக்குப் பிறகு உடனே எழுந்து சென்று பிறப்புறுப்பைக் கழுவாமல், சற்றுநேரம் ஓய்வெடுத்த பிறகே கழுவ வேண்டும்.

சிலர், தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பை வேகமாகக் கழுவுவதால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதாக நினைத்துக்கொண்டும் இப்படிச் செய்கிறார்கள். இது மிகவும் தவறானது. குழாயிலிருந்து வெளியேறும் வேகமான தண்ணீர், வெஜைனாவின் மென்மையான திசுக்களை சேதப்படுத்துவதோடு, அங்குள்ள நல்ல பாக்டீரியாவையும் அழித்துவிடும். அதனால் அடிக்கடி தொற்று பாதிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















