செய்திகள் :

Doctor Vikatan: தாழ்வு மனப்பான்மை, சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்... இரண்டிலும் என்ன பிரச்னை?

post image

Doctor Vikatan: என் வயது 42. எனக்கு எப்போதுமே என்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை உண்டு. நான் எதற்கும் லாயக்கற்றவன், எல்லோரும் என்னைவிட சிறந்தவர்கள் என்ற எண்ணம் அடிக்கடி வரும்.  என் நண்பன் எனக்கு அப்படியே நேரெதிர். எல்லோரையும்விட தான் மட்டுமே சிறந்தவன் என்ற எண்ணம் கொண்டவன். அவனைப் பார்க்கும்போது எப்படி அப்படி இருக்க முடிகிறது என எனக்குத் தோன்றும். இந்த இரண்டில் எது சரியான மனநிலை...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

சுபா சார்லஸ்

தாழ்வு மனப்பான்மை என்கிற இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸும், தன்னைப் பற்றி மிக உயர்வாக நினைத்துக்கொள்கிற சுப்பீரியாரிட்டி காம்ளெக்ஸும் இரட்டைக் குழந்தைகள் போல...

தன்னைப் பற்றி மிக உயர்வாக நினைத்துக்கொள்கிற ஒரு நபர், வேறு ஒரு காலகட்டத்தில் தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மைக்குள் போவது இயல்பு. தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர், திடீரென சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கொள்வதும் இயல்பானதே.

இந்த இரண்டு மனப்பான்மைகளுமே தேவையற்றவை. உங்களையும் தாழ்ந்தவராகவோ, உயர்ந்தவராகவோ நினைக்காதீர்கள். அடுத்தவரையும் உங்களைவிட தாழ்ந்தவராகப் பார்க்காதீர்கள், நினைக்காதீர்கள். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். பூக்களில் எந்தப் பூ சிறந்த பூ என்று சொல்ல முடியுமா...? வறண்ட பூமியாக இருப்பதால் பாலைவனத்தை தாழ்த்தி மதிப்பிடவோ, செழிப்பான மலைப்பிரதேசம் மட்டுமே சிறந்தது என்று சொல்ல முடியுமா..? அது அதற்கென தனி குணங்களும் சிறப்புகளும் இருக்கவே செய்யும். மனிதர்களும் அப்படித்தான்.

inferiority complex- superiority complex

எனவே, உங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையும் வேண்டாம், நீங்கள்தான் உசத்தி என்ற எண்ணமும் வேண்டாம். நீங்கள் எதற்கும் லாயக்கற்றவர் என்ற எண்ணத்தைத் தூக்கிப்போடுங்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை, பாசிடிவ்வான விஷயங்களை அடையாளம் கண்டு, வெளிப்படுத்துங்கள்.

உங்கள் நண்பரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளக்கூடிய குணமல்ல சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். அது உயர்ந்த குணமும் அல்ல. இப்படிப் பழகிவிட்டாலே உங்களுக்கு வாழ்க்கை ஈஸியாக மாறும். வெற்றி-தோல்விகளைக் கையாள்வதும் எதிர்கொள்வதும் எளிதாகும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.