பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா? - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?
Doctor Vikatan: நோய் எதிர்ப்புக்காக எடுத்துக்கொள்ளும் மிளகு, பூண்டும் வயிற்றைப் புண்ணாக்குமா?
Doctor Vikatan: உணவில் இயல்பிலேயே உணவில் மிளகு, பூண்டு, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று சொல்வார்கள். அதனால் எங்கள் வீட்டில் இவற்றை தினமும் மூன்று வேளை சமையலிலும் தவறாமல் பயன்படுத்துகிறோம். தவிர, பனிக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்கிறோம். இதனால் வயிற்றெரிச்சலும் தொண்டை எரிச்சலும் அதிகரித்திருக்கிறது. நோய் பரவும் காலத்தில் இவற்றை எடுத்துக்கொள்வது சரிதானே... வயிற்றெரிச்சல் பிரச்னைக்கு என்ன தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

நோய் எதிர்ப்பு சக்திக்காக எடுத்துக்கொள்ளும் பல உணவுகளும் உணவுக்குழாய் பாதையை பாதிக்கின்றன. நோயைத் தடுத்துவிடும் என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை பலரும் அளவுக்கு மீறிப் பின்பற்றுகிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைத்தான் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
மிளகும் பூண்டும் நிலவேம்புக் குடிநீரும் நல்லதுதான் என்பதற்காக அளவுக்குமீறியும் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. எதையுமே அளவோடு சேர்த்துக்கொள்வது சிறந்தது. நிலவேம்புக் குடிநீரை தொடர்ந்து அருந்தக்கூடாது, அவ்வப்போது இடைவெளிவிட்டுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்களும் எச்சரிக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.
உணவுகளைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் அதிக காரம், மசாலா சேர்த்தவற்றைத் தவிர்த்துவிடுவதுதான் சிறந்தது. சமையலில் பச்சைமிளகாயைக் குறைவாக உபயோகிக்கவும். இட்லி, இடியாப்பம், பருப்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற மைல்டான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அசைவம் சாப்பிடுவோர் அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அவற்றையும் அதிக காரம், மசாலா, எண்ணெய் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவும். பழங்கள் அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். சிலருக்கு சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை ஏற்றுக்கொள்ளாது. அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடலாம்.
புரோபயாடிக் இருப்பதால் தினமும் 2 ஆப்பிள்கூட சாப்பிடலாம்.அதேபோல இந்த சீசனில் ஆவி பறக்ககும் வெந்நீர் குடிக்க வேண்டியதில்லை. மிதமான சூடுள்ள நீரல் போதும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கலாம். அசைவ உணவுக்காரர்கள் முட்டையும் சைவ உணவுக்காரர்கள் தினமும் சுண்டலும் சாப்பிடுவதன் மூலம் புரோட்டீன் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















